• Publisher's Desk
 • Tamil - தமிழ்
 • கருணையான பேச்சின் ஆற்றல்
 • கருணையான பேச்சின் ஆற்றல்

  English | Marathi | Tamil | Spanish | French | Hindi

  கருணையான பேச்சின் ஆற்றல்  வார்த்தைகள் மற்றவர்களைக் காயப்படுத்தலாம், ஆக கடும் சொற்கள், புறங்கூறுதல் மற்றும் விளையாட்டான கேலி ஆகியவற்றைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது  சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

  எனது குரு, சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகளின் தலையாய போதனைகளில் ஒன்று, நாம் ஓர் ஆத்மா, தெய்வீகப் பொருள் என்பதாகும். ஆனால் நாம் ஜட உடல் ஒன்றில் வாழ்கின்றோம் -உடல் பெற்றுள்ள ஆத்மாவாக- இதில் பலம் மிகுந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் உள்ளன. ஆக நமக்கு ஆத்ம தன்மை, புத்தி தன்மை மற்றும் உணர்ச்சி தன்மை ஆகியன இருக்கின்றன. அவர் இந்த பன்மையை மனதின் மூன்று பாங்கு நிலை என விவரித்துள்ளார்: உயர்உணர்வுநிலை அல்லது ஆன்மீகம் (இது ஆன்மா ஆகும்); புத்தி அல்லது சிந்தனா நிலை; மற்றும் உடல்-உணர்ச்சி நிலை அல்லது விலங்குத் தன்மை.

  உணர்ச்சி நிலையாகிய விலங்கு போன்ற தன்மையே கோபம், பொறாமை, பயம் மற்றும் அடுத்தவர்களைக் காயப்படுத்தும் இயல்பைக் கொண்டுள்ளது. ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்வதன் ஓர் அங்கம் இந்த விலங்குத் தன்மையைக் கட்டுப்படுத்தத் தெரிந்த அறிவாகும். இங்குதான் இயமங்கள், அதாவது பத்து நன்னெறிக் கட்டுப்பாடுகள் செயல்முறைக்கு வருகின்றன. நாம் மட்டுப்படுத்தி வைக்க வேண்டிய இயல்புகளின் ஒரு பட்டியலை அவை வழங்குகின்றன. மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை, இந்து பாரம்பரியத்தில், தேரோட்டி ஒருவன் மூன்று,நான்கு அல்லது ஐந்து குதிரைகளின் கடிவாளங்களை இழுத்துகொண்டே, அவற்றை அடக்கி வைத்திருப்பது போன்று காட்டப்படும். இயமங்கள்தான் அந்த கடிவாளங்கள், இதன் உதவியோடு நாம் உடல்-உணர்ச்சி மற்றும் புத்தி தன்மையை அடக்குகின்றோம், இதனால்தான் பலமிக்க குதிரைகள் போன்ற அவை நமக்கு வேலைச் செய்கின்றனவா அல்லது கட்டுப்பாடு இன்றி கண்மூடித்தனமாக ஓடுகின்றனவா என முடிவாகும்.  

  முதலாவது இயமம் அஹிம்சை, தீங்கிழையாமை: பிறரை எண்ணம், வார்த்தை மற்றும் செயல்களால் காயப்படுத்தாமல் இருப்பது. அஹிம்சை, நாம் அனைவரும் அறிந்தது போல, ஒரு நடுநாயக இந்து கொள்கை ஆகும். நம்மில் பெரும்பாலானோர் உடல் ரீதியில் வன்முறையில் ஈடுபடுவதில்லை. இதனால் அஹிம்சையை செயல்படுத்துவது நமக்கு ஒரு சவால் அல்ல என முடிவு கட்டுகின்றோம். ஆனால், அஹிம்சையின் பொருள் என்னவென்று கூர்ந்து பார்த்தால், அது நமது எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளாலும் கூட பிறரை காயப்படுத்தாமல் இருப்பதை அடக்கியுள்ளது. ஆக ஆன்மீக வாழ்க்கையில் இருப்போர் தமது பேச்சு மற்றும் எண்ணங்களிலும் கூட தீங்கிழையாமையை செயல்படுத்த வேண்டியுள்ளது.

  ஆன்மீகப் பாதையில் முன்னேற வேண்டின் நாம் நமது பலகீனமான விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை மேம்படுத்த வேண்டும். மேலும் நாம் நிலைநிறுத்த வேண்டிய மனப்பாங்கு ஒன்று உள்ளது, அதாவது நாம் ஒரு பயிற்சியை எவ்வளவு சிறப்பாக செய்து வந்திருப்பினும், அதை நாம் இன்னும் நன்றாகச் செய்ய முடியும், நமது நடத்தை மேலும் பண்பு அடைய தேவையான வழிகளைத் தேட வேண்டும். நமது தொடர்பு முறைகளில் பேச்சு மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும் பட்சத்தில், அதில் நமது கவனத்தைச் செலுத்துவது பயன் மிக்கது.

  நமது பேச்சு பொருத்தமானதா என்பதை நிர்ணயிக்க குருதேவர் நான்கு அடுக்கு வழிகாட்டியைக் கொடுத்துள்ளார்: “எது உண்மையோ, கருணையானதோ, உதவியானதோ, தேவையானதோ அதை மட்டும் பேசுக.” உடல் பருனமான ஒரு நண்பனை உதாரணமாகக் கொள்வோம். அவனது உடல் நலத்தின் பொருட்டு, அவன் உடல் எடையைக் குறைப்பது முக்கியம் என நாம் உண்மையிலேயே அக்கறைக் கொண்டிருக்கின்றோம். இதை “ரவி, நீ அளவுக்கு அதிகமாய் குண்டாய் இருக்கிறாய்” என்று சொல்கின்றோம். உதவி சம்பந்தமான விஷயத்தில் நமது கருத்து தேர்ச்சி பெறுகின்றது, ஆனால் கருணையில் தோல்வி அடைகின்றது. நாம் நமது அக்கறையை மேலும் சாதூர்யமாக வெளிப்படுத்த வேண்டும். “நான் இப்படிச் சொல்வது உனக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கின்றேன், ரவி. உனது உடல் நலத்திற்காக நீ உணவு மற்றும் உடல் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” உதவிமிக்க வார்த்தைகளும் கூட கருணையான வழிகளில் வெளிப்படுத்தப்படின், எதிர்பார்க்கும் விளைவுகள் ஏற்படும். நமது பேச்சினால் மற்றவர்களைக் காயப்படுத்தும் நான்கு வழக்கமான வழிகள் இருக்கின்றன: கேலி, கிண்டல், வதந்தி மற்றும் புறங்கூறல்.

  image

  கேலியும் & கிண்டலும்
  கேலி, கிண்டல் பண்ணுவதை சித்தரிக்கும் சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலாவது உதாரணம்: ஒரு சக ஊழியர் சிறப்பு சலுகை அல்லது அமர்வு பெற்றுள்ளார். நாம் முணுமுணுக்கின்றோம், “அங்கே பார், நம்மை-விட-சிறப்பானவர்! நாம் இன்று செய்த வேலையிலிருந்து அவருக்கு மட்டும் சிறப்பு விடுப்பு ஏன்?” இரண்டாவது உதாரணம்: ஒரு சக ஊழியர் அண்ணிய உச்சரிப்பில் பேசுவார். நீ அவரது தவறான உச்சரிப்பை பாசாங்கு செய்து, சிரிப்பாய். மூன்றாவது உதாரணம்: ஒரு சக ஊழியர் எண்களைப் பெருக்கும் கணக்கில் கஷ்டத்தை எதிர்நோக்குவார். அவள் கணக்கின்போது தடுமாறுகையில் நீ அவளைப் பார்த்து நையாண்டி செய்வாய். “நான் வேடிக்கையாகத்தான் பேசினேன்,” “வெறும் நகைச்சுவைதான்,” “என் நண்பர்களுக்கு களிப்பு ஏற்படுத்தத்தான்” போன்ற காரணங்கள் கொடுக்கப்படும். உண்மையில் உனது வார்த்தைகள் ஹிம்சையானவை; உனது வார்த்தையால் நீ மற்றவரை காயப்படுத்துகிறாய், நீ சொன்னதை நியாயப்படுத்தும் வகையில் வெறும் வேடிக்கைதான் என்பாய், நகைச்சுவையினால் காயம் ஏற்படாது என்பது போல. வார்த்தைகள் நிஜ வலியை ஏற்படுத்தும், விளையாட்டுக்காகச் சொல்லப்பட்டாலும் கூட. பலர் இதனை உணர்வதில்லை. குற்றங்காணும் கேலிப்பேச்சு நீ குறிப்பிடும் ஒருவருடைய பாதிப்பிலேயே உள்ளது. இந்த உதாரணங்களை நமது நான்கு அடுக்கு சோதனையில் உட்படுத்தும்போது, இவை யாவும் உண்மை, கருணை, உதவி மற்றும் தேவை ஆகிய எதையும் கொண்டிருக்கவில்லை.

  வதந்தி
  ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களை, அவர் இல்லாத பொழுது பேசி, அதனால் களிப்பு அடைவதே வதந்தி எனப்படும். இது நாமே ஒரு நாடகத்தை எழுதியும் பார்த்தும் மகிழ்வது போன்றது. எவர் ஒருவரைப்பற்றி வதந்தி கிளப்பப்படுகின்றதோ, அவருக்கு பாதிப்பு ஏற்படுத்தி, வந்திருப்பவர்கள் களிப்படைகின்றனர். சில மனைவிமார்கள் வாடிக்கையாக தமது கணவன்களைப் பற்றி, மற்றவர் மனைவிகளிடம் தொலைப்பேசி அல்லது இணையத்தில் மனம் போன போக்கில் பேசுவர். தனது சக வேலையிடத்து நண்பர்களிடம், சில கணவன்மார்கள் தனது மனைவியைப் பற்றி குற்றங்கூறுவர். இவ்வாறான வீணான பேச்சு உண்மையாக இருக்கலாம், ஆனால் மற்ற மூன்று சோதனைகளில் இது தோற்று விடும்: கருணை, உதவி மற்றும் தேவை. தாம் வெற்றிகரமாக இருப்பதற்கு கணவன்களுக்கு மனைவியின் ஆதரவு தேவை. மனைவிகள் தாம் பாதுகாப்பாக இருப்பதற்கு கணவன்களின் ஆதரவைக் கொண்டுள்ளனர். கதைக் கட்டுவதாலும் கேலிப்பண்ணுவதாலும் எந்த உறவிலும் ஆதரவு கெட்டுப் போகும்.

  புறங்கூறுதல்
  கடைசியாக வருவது, ஆனால் சரிநிகர் முக்கியத்துவம் உடையது புறம் கூறுதல். ஒருவனுடைய குற்றங்களைக் கண்டுபிடித்து, அந்த குறைபாடுகளை மற்றவர்களிடத்து பகிர்ந்து கொள்ளுவது பலர் களிப்புடன் செய்யும் ஒரு பொழுது போக்கு. தனது சொந்த தவறுகளைக் கவனித்து, திருத்திக்கொள்வதை விட மற்றவர்களின் குறைகளைத் தேடிப்பிடித்து கண்டிப்பது மிக மிக சுலபம். “பிறர் குற்றங் காண்பது போல தம் குற்றம் உணருவாரின் மனிதருக்கு ஏதேனும் தீமை விளையுமோ?” என 190வது குறள் சவால் இடுகின்றது. மேலும் 188வது குறள்: “ நண்பர் குறைகளையே எங்கணும் பரப்பும் மனப்பான்மையினர் அன்னியவர்களுக்கு எத்துணை துன்பம் விளைவிப்பர்?” புறம் கூறுதல் கண்டிப்பாக நமது பேச்சு சோதனையில் தோல்வியடைகின்றது. பெற்றோர் பிள்ளைகளிடமும், மேலதிகாரி வேலையாட்களிடமும் கொண்டுள்ள உறவைப் போல நாம் ஒருவரின் வளர்ச்சி அல்லது பயிற்சிக்கு பொறுப்புதாரியாக இல்லாவிட்டால், அடுத்தவர்களின் குற்றங்களை நாம் கவனியாது இருந்து, மாறாக நமது சுய குறைகளைக் கண்டு பிடித்து நம்மைத் திருத்திக் கொள்வது தலை சிறப்பானது. நம்மை திருத்திக் கொள்வது நேர்மறை ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தும், பிறரைக் கண்டிப்பது அவ்வாறு செய்யாது. அடுத்த தடவை நீ மற்றவரின் குறைகளைக் கண்டு அதில் ஈடுபாடு காட்டும்போது, உன்னிடத்தில் அதே குறை உள்ளதா என்று கேள், காரணம் உன்னை கலக்கம் அடையச் செய்யும் அடுத்த ஒருவனின் விஷயம் காட்டுவது யாதெனில் அதே விஷயம் உன்னிடத்தில் சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று என்பதையே.

  மூன்று நற்பண்பு கூறுகளில் கவனத்தைச் செலுத்துதல் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு, புறங்கூறுதல், வதந்தி மற்றும் காயப்படுத்தும் கேலி ஆகியவற்றைத் தவிர்ப்பது ஒன்றும் மிகக் கடினம் அல்ல. நமது பேச்சைக் கட்டுப்படுத்தியும் மேலும் நயமிக்கதாகச் செய்வதும் ஒரு வாழ்நாள் முழுமைக்குமான ஆன்மீக ஒழுக்கம் (சாதனை) ஆகும். மூன்று நற்பண்புக் கூறுகளில் நாம் கவனத்தைச் செலுத்தலாம், அவை இணக்கநயம், சமார்த்தியம் மற்றும் உணர்வுத்திறம். இணக்கநயம் என்பது மதிப்பு, மரியாதையாக இருப்பது மற்றும் அடுத்தவர்களுடைய தேவைகள் மற்றும் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்வது என்பதாகும். சமார்த்தியம் என்பது சாதூரியமாகவும் திறமையாகவும் மனிதர்களிடமும், சூழ்நிலைகளிடமும் நடந்துக் கொள்வது, வேற்றுமைகளுக்கு நியாயமாக பதிலளிப்பது மற்றும் யாரையும் புண்படுத்தாத வகையில் தீர்வுகளைத் தேடி, சுமூகத்தை நிலைநாட்டுவது என்பதாகும். உணர்வுத்திறம் என்பது மற்றவர்களின் கருத்துக்கள்,போக்கு மற்றும் இயல்பு ஆகியவற்றை நுண்ணியமாக உணர்ந்து அறியும் ஆற்றலை காட்டுகின்றது. பேச்சுவார்த்தைகளின் போது கவனமாகக் கேட்பது மற்றும் குறிக்கீடு செய்யாது இருத்தல், ஆதிக்கம் செலுத்தாமல் மாறாக ஊக்குவிக்க முயல்வது ஆகியன அடங்கும். திருக்குறள் எச்சரிக்கின்றது, “உல்லாசமாக நகையாடி நட்பு வளர்க்க வகை தெரியாதவர்கள் பிளவுபடுத்தும் நச்சுக்கதை சொல்லி நண்பர்களையும் பகைத்து விடுவர்” (குறள் 187).

  ஒரு பொது யுக்தியின் மூலம் குருதேவர் நமக்கு வழிகாட்டுகின்றார்,“ பேசும் முன் யோசி.” நான் சொல்ல போவதைப் பற்றி பிரதிபலித்துப் பார்ப்பது தேவையானது, ஏனெனில் இது நாம் தேவையில்லாததைப் பேசுவதிலிருந்து பாதுகாக்கின்றது. ஆக பேச்சு கட்டுப்பாடு இரண்டு பாகங்கள் உடையது. முதலாவது நீ பேசும் முன்னர், நின்று, என்ன சொல்லப் போகின்றாய் என கவனிக்க வேண்டும். இரண்டாவது, உனது வார்த்தைகள் உண்மை, கருணை, உதவி மற்றும் தேவை ஆகிய சோதனைகளில் தேறி உள்ளதா என தீர்மானிப்பது. இந்த எளிய பயிற்சி பல கஷ்டங்களைத் தவிர்க்கும். ஒரு கருத்து வாயிலிருந்து தவறுதலாக வெளியான பின்னரும் கூட இதை பயன்படுத்தலாம், இதனால் எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான பாடம் கிடைக்கப் பெறும்.

  திருக்குறள் வரிகள் தொன்மை நெசவாளியாகிய திருவள்ளுவரிடம் இருந்து நாம் இனியச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றி நிறைய கற்றுக் கொள்ளலாம். இந்த விஷயத்திற்காக அவர் தனது திருக்குறளின் பத்தாவது அதிகாரத்தை அர்ப்பணித்தார். இங்குள்ள நான்கு வரிகளும் நாம் பின்பற்றி வாழக்கூடியவையாகும்.

  “காண்போர் எவரையும் மகிழ்விக்கும் சொல் வழங்குவார்க்கு, வறுமையால் வரும் துன்பம் சாராது.” குறள் 94

  “நற்செயல் நோக்கி இன்சொல் கூறுபவனுக்கு அறம் பெருகும் மறம் தேயும்.” குறள் 96

  “நன்மையும் இணக்கமும் நீங்காத சொற்கள் அருளையும் அறநிலையையும் தரும்.” குறள் 97

  “இனிய சொல் பல இருக்கக் கடும் சொல் கூறல் கனிந்த பழம் கைமேலிருக்க காயைப் பறித்து உண்பது போல் ஆகும்.” குறள் 100


  The comments are owned by the author. We aren't responsible for their content.
  Copyright Himalayan Academy. All rights reserved.

  Get from the App Store Android app on Google Play