• Publisher's Desk
 • Tamil - தமிழ்
 • நீண்டகால மன அழுத்தத்தைக் கையாள்வது
 • நீண்டகால மன அழுத்தத்தைக் கையாள்வது
  | Kannada | Hindi | English

  நீண்டகால மன அழுத்தத்தைக் கையாள்வது  சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

  இந்நாளில் கிட்டத்தட்ட எல்லாரும் பெருகிவரும் வாழ்க்கைத் தீவிரத்தின் சவாலுக்கு ஆளாகியுள்ளனர். சமநிலையைப் பராமரிக்க இங்கே சில உதவிகள். .  பெரும்பாலான உலக மக்களைப் போலவே, தமது தினசரி வாழ்க்கைக் காரியங்களின் தொடர் அழுத்தத்தினால் உணர்ச்சிகள் சிதறி, மனம் கொந்தளித்து இருக்கும் இந்துக்களை நான் வழமையாகச் சந்தித்து வருகிறேன். இது பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் அதிக வேலைப்பாரம் கொண்ட பணிகளில், நீண்ட மணி நேர வேலையில், அதிகமான அடைவுநிலைகளை எதிர்பார்க்கும் முதலாளிகளிடம் வேலைச் செய்யும் சூழலில் காணப்படுகிறது. அவர்கள் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பிள்ளைகளையும் வளர்த்து வருவதும் இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. வேலை மற்றும் குடும்பத்தின் தினசரி தேவைகள் ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் கவனிக்கப்படுவது சாத்தியமில்லைதான். சில சந்தர்ப்பங்களில், பல ஆண்டுக் கணக்கில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தாற்போல் அளவுக்கு அதிகமாக காரியமாற்றுவதினால், மோசமான அழுத்தம் நேரிடுகிறது.

  சில அழுத்தங்கள் சுயமாகவே சரியாகி விடுகின்றன. நாம் நமது வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு, சில மாதங்கள் ஆனதும் மாத வருமானம் இல்லாததினால் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு புது வேலை கிடைத்ததும், அந்த அழுத்தம் தானாகவே இல்லாமல் போகிறது. ஒரு சூறாவளி நமது வீட்டை அழிக்கிறது. அழுத்தம் பெருமளவில் உடனடியாக தோன்றுகிறது, ஆனால் ஒரு புதிய வீட்டைக் கட்டியதும் அது தானாகவே மறைகிறது. அன்றாட வாழ்விற்கான எதிர்பார்ப்புகள் ஒரு வித்தியாசமான அழுத்தத்தை தோற்றுவிக்கின்றன, இதனை எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் செய்ய முடியாது. நிஜத்தில் ஓர் ஆண்டிலிருந்து மற்றோர் ஆண்டிற்கு இது மேலும் தீவிரம் அடைந்தே வரும். இவ்வாறான தொடர் அழுத்தத்தை எதிர்நோக்குகையில் அதைக் குறைக்கும் வழிகளைக் காண்பது விவேகமும் ஆரோக்கியமும் உடைய செயல்.

  எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், அழுத்தத்தை கையாளுவதற்கு பல உதவிகரமான பயிற்சிகளை வழங்கியிருந்தார். முதலாவது மூச்சுப் பயிற்சி. அவர் எழுதியிருந்தார்: “தான் வெளி உலக உணர்வுநிலைகளில் இருக்கையில் தனது சாட்சியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஒரு மறைஞானியின் குறிக்கோள் ஆகிறது - அதாவது உணர்வு நிலையில் தான் எங்கு இருக்கிறேன் என்பதை அறிவது. தான் புறவுலக உணர்வுநிலையில் இருப்பதும் ஐந்து புலன்களும் தன்னை ஆள்வதும் அறியப்படுகையில், அவன் தனது சாட்சியத்தை புறவுலகு மனதின் உள்ளேயே கட்டுப்படுத்துகிறான். இதை அவன் பல வழிகளில் செய்கிறான். ஒரு வழி சுவாசத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும். சுவாசம்தான் உயிர், உயிர்தான் சுவாசம். சாட்சியத்தை ஆளும் ஒரு காரணி சுவாசம் ஆகும். சாட்சியம் சுவாசத்தில் பயணம் செய்கிறது. நமது ஆளுமைத்திறனை இயக்குவதும் சுவாசம்தான். மெய்விரும்பி ஒருவன் மறைஞானம் பெறும் மார்க்கத்தில் பயணிக்க துடிப்புமிக்க ஆளுமைத் திறத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, இதனால் அவன் பாதையில் தடுமாறவோ, உத்வேகம் குன்றவோ நேரிடாது, பாதை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வான்.”

  சுவாசத்தைப் பற்றி பேசுகையில், ஓர் அடிப்படைப் பயிற்சி என்னவென்றால் நீங்கள் உதரவிதான தசையினால் சுவாசிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், நெஞ்சிக் கூட்டினால் அல்ல. இதுவே இயற்கையான சுவாசம். பிறந்த குழந்தைகள் இயல்பாக இவ்வாறே சுவாசிக்கின்றன. ஆனால் நாம் காலப்போக்கில் வாழ்க்கையின் அழுத்தங்களை சந்திக்கையில், உதரவிதானம் இறுகி, நாம் சுவாசிக்கையில் நெஞ்சை விரிவடையச் செய்கிறோம். நெஞ்சு எலும்புகள் பிரியும் பகுதியான, உங்கள் சூரியப் பின்னலுக்கு கீழே, உதரவிதானத்தை உணரலாம். இதை கண்டெடுக்க, உங்கள் விரல் நுனிகள் சரியாக உதரவிதானத்தின் மீது வைத்து இருமல் செய்யவும், நீங்கள் இருமும் பொழுது விரல் நுனிகள் மேல்நோக்கி குதிக்கும். உதரவிதானம் மூலம் சுவாசம் கற்க ஒரு சுலபமான வழி உண்டு. தரையில் படுத்து ஒரு புத்தகத்தை உங்கள் வயிற்றின் மீது வைக்கவும். உள்மூச்சு இழுக்கையில் உதரவிதானம் வயிற்றுக்குள் நீண்டு, இதனால் புத்தகம் மேல் நோக்கி எழும்பும். நீங்கள் மூச்சை வெளியிடுகையில், உதரவிதானம் முழுமையாக தளர்ந்து, புத்தகம் தனது ஆரம்ப நிலைக்குத் திரும்புகிறது. இதனால் இறுக்கம் நீங்கி, அழுத்தம் குறைகிறது. குருதேவர் இதைப்பற்றி கருத்துரைத்துள்ளார்: “ உதரவிதான சுவாசத்தின் மூலம் நாடிகள் அமைதியாகும் பட்சத்தில், விரக்தி அடைவது சாத்தியமே இல்லை என்பதை நீங்கள் அனுபவத்தினால் அறிவீர்கள். உங்களுக்கு உள்ளே இழுக்கப்பட்டு, உள்ளூராக இருக்கும் பெரும் கல்வி மண்டலங்களுள், உள்ளே இருக்கும் பெரும் வெற்றிடத்திற்குள், உங்களது எல்லா பிரச்சனைகள், சஞ்சலங்கள், பயங்கள் யாவும் உறிஞ்சப்படுகின்றன, எதையும் மனோ ஆராய்ச்சி செய்ய வேண்டியத் தேவை இல்லாமலே.”

  உதரவிதான சுவாசத்தின் அடிப்படைகளை நீங்கள் பிடிக்குள் கொண்டு வருகையில், நேராக அமர்ந்திருக்கும் நேரத்திலும், நாற்காலில் அமர்ந்திருக்கையிலோ, நடக்கையிலோ கூட நீங்கள் செய்யலாம். பரீட்சை, முக்கிய கூட்டம் ஆகியவற்றுக்கு முன்னரோ, (அது நடக்கையிலும் கூட!) உங்களுக்கு சிறிது தளர்வு வேண்டும் எனில், ஒரே நிமிடம் செலவிட்டு உதரவிதானத்திலிருந்து ஆழமாக சுவாசிக்கவும்.

  நீண்டகால அழுத்தத்தைக் குறைக்க உதவும் இரண்டாவது பயிற்சி, யோக ஓய்வு, இதுவும் சுவாசத்தை ஒட்டியே இருக்கிறது. தரை அல்லது ஏதாவது உறுதியான சமதளத்தில் மேல்நோக்கி படுத்துக் கொள்ளுங்கள். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, ஆழமாக மூச்சு இழுங்கள், எல்லா எண்ணங்களும் இறுக்கங்களும் விலகிச் செல்லும்படி, உடம்பையும் மனதையும் தளர்வு பெறச் சொல்லி ஆணையிடுங்கள். தினசரி வாழ்வின் எல்லா பிரச்சனைகள் கொந்தளிப்புகளிலிருந்து மீண்டு, நீங்கள் ஒரு மேகத்தில் மிதப்பதாக மனக்காட்சி பெறுங்கள். கண்களை மூடியவாறு, மூச்சை உள்ளே இழுத்து, உதரவிதானம் மூலம் சுவாசித்து, அதேவேளை சக்திமிக்க ஒளி உங்கள் சூரிய பின்னலுக்குள் பாய்வதைக் காணுங்கள், இது உங்கள் உடம்பையும் மனதையும் சக்தியால் நிரப்புவதைக் காணுங்கள். மூச்சை வெளியிடும் போது, இந்த ஒளிச் சக்தி சூரிய பின்னலிலிருந்து உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் பரவிச் செல்வதை உணருங்கள், அது உங்களின் எல்லா எண்ணங்களையும் அழுத்தங்களையும் வெளியேற்றுவதைக் காணுங்கள். இதை ஐந்து நிமிடங்களுக்குச் செய்யுங்கள், உடம்பும் மனமும் சற்று தளர்கையில், உங்களுக்கு அழுத்தம் குறைந்தது உணரப்படும். குருதேவர் எழுதியிருந்தார், “ உலக அழுத்தங்களிலிருந்து விடுதலை அடைவது மக்கள் எந்த அளவு தமது சொந்த மனதின் ஆற்றல்களைக் கட்டுப்படுத்துகின்றனர் என்பதை ஒட்டியே உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டினால், அவர்கள் தமது சுய உள்ளார்ந்த பாதுகாப்பு சக்தியைச் சார்ந்திருக்க முடியும், இது நிலைத்த நிகழ்வில் காணப்படுகிறது. அந்த நிகழ்காலத்தில் உங்களது உள்ளார்ந்த உறுதி காணப்படுகிறது. ஆக, உங்கள் உடல் சற்று களைப்பாக இருந்தாலோ, சிறிது பதற்றம் , தடுமாற்றம் கண்டாலோ உங்களது யோக ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் தருணம், உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அல்ல.”

  அழுத்தத்தை கையாளும் மூன்றாவது பயிற்சி தினசரி காலையில் ஓர் எளிய ஆன்மீக / சமயப் பயிற்சி செய்வதாகும். குருதேவர் இதனை தினசரி கண்விழித்தல் என்று அழைத்தார், இவ்வாறு கருத்துரைத்தார்: “பக்திமிகு இந்துக்கள் பெரும்பாலும் சூரிய உதயத்திற்கு முன்னர் சந்தியா உபாசனை செய்வர். பூஜை, ஜபம், பாடல், ஹட யோகம், தியானம் மற்றும் ஆன்மீக நூல்களைப் படித்தல் போன்றவை கொண்ட இந்த புனிதமான காலம், தனி மனித வாழ்க்கையின் ஆதாரம்.” காலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்வது நாம் நம்மை நிலைபெறச் செய்யவும், வரும் நாளை எதிர்கொள்ள தேவையான தெய்வீகத்தைப் பெற்றிருக்கும் உணர்வை ஆழமாக்கும்.  

  எனது ஜனவரி/பிப்ரவரி/மார்ச் 2014 ஆசிரியர் பீடத்தில் “10 நிமிட ஆன்மீகச் சாதகம்” என்ற தலைப்பில் தினசரி கண்விழித்தலுக்கான ஓர் எளிய அமைப்பை நான் வழங்கியுள்ளேன். இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் அகமுகமாகச் திரும்ப நேரமில்லை என உணர்பவர்களுக்கு தேவையான, சுருக்கமான ஒரு தினசரி திட்டம் இதுவாகும். இது தற்போது பல உச்சாடங்களும் பயிற்சிகளும் கொண்டுள்ள, துறவிகளால் உருவாக்கப்பட்ட, இலவச கைப்பேசி மென்பொருளாக கிடைக்கப்படுகிறது, “ஆன்மீகப் பயிற்சி” என பெயர் கொண்டுள்ளது.

  நான்காவது பயிற்சி ஹட யோகம் ஆகும். இது உடலை குறிப்பிட்ட ஆசனத்தில், கிரமமாக, மூச்சுடன் ஒருங்கிணைத்து செய்யப்படும் யோக செயல்பாட்டு முறை. எளிமையானது முதல் கடினமான ஆசனங்கள் வரை இருக்கின்றன. நீண்டகால அழுத்தத்தைக் குறைக்க எளிய ஆசனங்களே போதுமானவை. ஹட யோகத்தின் நன்மைகளைக் குறித்து குருதேவர் இவ்வாறு விவரித்திருந்தார்: “இந்நாளில் ஹட யோகத்தின் நோக்கம் மாறாமல் அப்படியே இருக்கிறது - ஜட உடல், உணர்ச்சி உடல், சூக்கும உடல் மற்றும் மனோ உடல் ஆகியவற்றை சுமூகமாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைத்திருப்பதனால், உள்ளூராக சாட்சியம் மேலெழும்பி இறை அனுபூதி உயரத்திற்குச் செல்கிறது. ஒவ்வொரு ஆசனமும் கவனமுடம், மூச்சுக் கட்டுப்பாட்டுடன், வர்ணக் காட்சியுடன், உள் ஒலி செவிமடுப்புடன் செய்யப்படுகையில், ஆழ்மனதில் கிடக்கும் வாசனங்களின் கட்டுக்கள் மெதுவாக அவிழ்க்கப்பட்டு, சாட்சியம் அங்கிருந்து உச்சி உணர்வுநிலைக்கு செல்கிறது. ஹட யோகம் உணர்வுநிலையைத் திறந்து விடுகிறது, ஏனெனில் ஓர் ஆசனத்தின் உச்ச சக்தியை அடைந்ததும் நாம் மற்ற ஓர் ஆசனத்திற்கு மாறிச் செல்கையில், ஒரு சிறிய அல்லது பெருமளவு இயைவு நமது ஜட மற்றும் சூக்கும நரம்பு மண்டலத்தில் ஏற்படுகிறது. குருதேவர் போதித்த 24 ஆசனங்கள் கொண்ட ஹட யோகத்தின் குறிப்புகளை 2001 மார்ச் மாத இந்துஸ்ம் டுடே பதிப்பில் காணுங்கள்.  

  எனது குரு ஒட்டுமொத்தமாத்தத்தில் வித்தியாசமான ஓர் அணுகுமுறையைப் பற்றியும் பேசியுள்ளார், இது அழுத்தத்துடன் நாம் கொண்டுள்ள உறவை மாற்றியமைக்கும் பரிந்துரை, தவிர்க்கமுடியாததை நமக்குச் சாதகமாக்கும் காரியம். அவர் ஆலோசனைச் சொன்னார், “அழுத்தத்தைப் பற்றி மக்கள் குழம்பி போய் உள்ளனர். ஒரு தீர்வு உண்டு, நமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே அது, நாம் உருவாக்கப்பட்ட விதத்தை மாற்றி அமைப்பது.... அழுத்தம் ‘சரி-சரி’ என்று ஏற்பதாகும், ‘வேண்டாம்-வேண்டாம்’ என்பது அல்ல. இந்தியர்களுக்கு பழங்காலத்தில், அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக மட்டும் யோகம் இருக்கவில்லை. அது மனதையும் நரம்பு மண்டலத்தையும் மேலும் தீவிரப்படுத்தியது, மழுங்கச் செய்யவில்லை. தீவிரம் பெருகும் வேளையில் ஏற்படும் இயற்கை எதிரொலிப்புதான் அழுத்தம். அழுத்தம் நமது ஆசான், நாம் தீவிரத்தை தாங்கிப்பிடிக்க அது உதவுகிறது. கண்ணாடியைப் பார்த்தவாறு மனதுக்குள் உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள், ‘அழுத்தம் என்னை உறுதியாக்குகிறது.’ அது உண்மையிலேயே இதைச் செய்கிறது. நம்ப வேண்டின் சோதித்து பாருங்கள். அழுத்தத்தில் ஆனந்தமும் பெற ஆரம்பியுங்கள். அதனால் கிட்டும் பலத்தினால் மகிழுங்கள். அழுத்தத்தை ஏற்று, அதனைத் தாண்டவில்லை எனில் நமது உலகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் என்ன ஆகியிருப்பார்கள்? தேர்ந்த வணிகர்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெரும் ஓவியர்கள் மற்றும் இசை ஞானிகள் இன்னும் வேண்டும் என்றே கேட்கின்றனர். அவர்களுக்கு அது தேவை. அதில்தான் அவர்கள் செழிக்கின்றனர். அதுதான் வழக்கத்தை விட மேலும் அதிகமாக காரியமாற்ற உதவுவதாக அவர்கள் அறிந்துள்ளனர். பலகீனமான உயிர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது, அதனால்தான் தமக்கு பிரபஞ்சத்தில் ஒரு சிறப்பான இடம் உச்சத்தில் கிடைத்துள்ளது என்பதை அவர்களுக்குத் தெரியும்.

  நமது ஐந்தாவது பயிற்சியையும் குருதேவர் நமக்கு வழங்கியுள்ளார்: “ இருந்தாலும் நீங்கள் அழுத்தத்தை கையாண்டே ஆக வேண்டும். எப்படி அதனைச் கையாள்வது? மற்ற விஷயங்களைப் போலவேதான். உள்ளே இருக்கும் கடவுளிடம் செல்லுங்கள்; கோயிலில் இருக்கும் கடவுளிடம் செல்லுங்கள், இதனால் இறுதியில் நீங்கள் அழுத்தத்தை போக்கி விடுகின்றீர்கள், உள்ளிருந்து வெளிமுகமாக, இதனால் நீங்கள் ஒரு மேம்பட்ட ஒருவராகிறீர்கள், ஏனெனில் உங்களது நரம்பு மண்டலத்தை அகலப்படுத்தியுள்ளீர்கள். உங்களது நரம்பு மண்டலத்தை நீங்கள் இழுத்து விரித்து உள்ளீர்கள். முன்பு உபயோகத்திற்கு இல்லாத மூளை அணுக்களை நீங்கள் பயன்படுத்தி உள்ளீர்கள், உங்கள் மனதை விரித்து அகலப்படுத்தி உள்ளீர்கள், புதிய திறன்களை எழுப்பியுள்ளீர்கள். இது சுலபமல்ல.”  


  The comments are owned by the author. We aren't responsible for their content.
  Copyright Himalayan Academy. All rights reserved.

  Get from the App Store Android app on Google Play