Hinduism Today Magazine Issues and Articles
நாட்டியமும் ஆன்மீகப்பாதையும்
Category : Tamil - தமிழ்
image

நாட்டியமும்

ஆன்மீகப்பாதையும்

______________________

நுண்கலைகளில் அடையப்படும் வெற்றியில் இருக்கும் எது நமது மதவாழ்க்கை முன்னேற்றத்துடன் சம்பந்தமானது?

______________________

சற்குரு போதிநாத வேலன்சுவாமிTamil | English | Italian

எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, இன்னும் அதிக ஆன்மீக ஒருவனாக வருவதற்கு உதவும் செயல்பாடுமிக்க வழிகாட்டுதல்களை வழங்கும் திறமையைக் கொண்டிருந்தார். இந்து மதத்தில் உயர் தத்துவங்களைப் பேசுவது சுலபம்: “மனிதன் தான் கடவுள், நாம் தெய்வீகம் பொருந்தியவர்கள்” போன்ற பல. ஆழமான விஷயங்களைச் சொல்வது எளிது, உதாரணத்திற்கு, “நீ எல்லையில்லா ஆற்றலைக் கொண்டுள்ள ஒருவன்” போன்றது. ஆனால் இந்த தத்துவங்களைச் செயல்முறைக்கு கொண்டு வந்து, அதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் மேலும் அதிக ஆன்மீக ஒருவனாக இருப்பது - அதுதான் சவால், மேலும் அதைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் ஆராயவிருக்கின்றோம்.

இந்தச் விஷயத்தில் நமக்கு உதவும் திறனுடன் இருப்பதே குருதேவரின் மாண்புலத்தின் ஓர் அங்கம். அவர் உயர் தத்துவங்களுடன் சேர்த்தே நமக்கு நடைமுறைக்கு உகந்த வழிகாட்டுதல்களையும் வழங்கி, அந்த முறையில் செல்கையில் நாம் நம்மைப் பற்றி நல்ல உணர்வுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கச் செய்தார். அவர் நாம் பலகீனமும் தோல்விகளும் கொண்டவர்கள், அதனால் பூரணம் அற்றவர்கள் என்ற முறையைக் கையாளவில்லை. அவர் எதிர்மறையானதைக் குறித்துக் காட்டினார்: நாம் தெய்வீக பொருள்கள், அதாவது நாம் ஆன்மாக்கள் அல்லது ஆன்மீக வஸ்துக்கள். ஆனால், மனிதனாக வாழ்கையில் நம்முடன் மற்ற பல குணங்களும் சேர்ந்தே வரச்செய்கின்றன. நமக்கு மிருக உணர்வுகள் உள்ளன, நமக்கு புத்தி உள்ளது, நமக்கு ஆணவம் உள்ளது, மேலும் நாம் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், இதன் மூலமாகவே நமது ஆன்மா அல்லது ஆன்மீகத் தன்மை வாழ்வில் மேலோங்கி இருக்கும். குருதேவர் சொல்வது போல, “அமைதியே கட்டுப்பாடு, கட்டுப்பாடுதான் சுதந்திரம்.”

2003ஆம் ஆண்டு கலிபோர்னியாவில், ஓர் இளம் இந்து பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்தின்போது, நான் வழங்கிய ஒரு சொற்பொழிவில் எனது நாட்டியம் மற்றும் ஆன்மீக வாழ்க்கை சம்பந்தமான எண்ண பிரதிபலிப்புக்களை முதலில் பகிர்ந்து கொண்டேன். அவளது தேர்ச்சியானது எனக்கு ஓர் ஆர்வத்தைக் கொடுத்தது, எவ்வாறு ஐந்து வகைகளில் நாட்டியத்தைப் பயிலும் மனப்பான்மையும், இந்து ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் முயற்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று. குருதேவரின் பாணியிலேயே, நானும் ஒரு செயல்பாடு உடைய வழி ஒன்றை இந்த தலைப்புக்கென கையாண்டேன். பின்னர், சபையில் இருந்தோர் இந்த உள்நோக்குகள் எவ்வாறு தத்தம் ஆன்மீக நாட்டத்திற்கு உதவியாக இருக்கின்றன என தெரிவித்தனர்.

குருதேவர் கூட, தனது இளமை காலத்தில், தேர்ச்சிப் பெற்ற ஒரு நாட்டியக்காரராக இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சில விஷேசக் காலங்களில், அவர் இந்திய பாரம்பரிய மணிபூரி நடனம் ஆடுவார். அவர் நாட்டியத்தைப் பற்றி பேசுகையில், நடனக் கல்வியில் நீ எதிர்பார்ப்பதும், ஆசிரியருக்கு பணம் செலுத்துவதும் உனது குறைபாடுகளைச் சுட்டி, பலகீனமானவற்றைக் காட்டுவதற்கே அன்றி, நீ எதைச் சரியாகச் செய்கின்றாயோ அதனை பாராட்டுவதற்காக அல்ல. எங்களின் சற்குருவாக இருந்த அவர், அவ்வாறான வழிகாட்டுதலையே எங்களது ஆன்மீக வாழ்விலும் கொடுத்திருந்தார்.

குருதேவரின் கருத்துக்கள் ஆன்மீகப்பாதை மற்றும் நடனக்கல்வி ஒப்பீட்டுக்கு நம்மை பரிபூரணமாகவே இட்டுச் செல்கின்றது, இது நமது பலம் மற்றும் பலகீனம் சம்பந்தமான நம்முடைய மனப்பான்மையைச் சார்ந்தது. ஓர் இளம் பெண் தான் ஏற்கனவே சரியாகச் செய்யும் அசைவுகளிலேயே கவனத்தைச் செலுத்தினால் மேலும் சிறப்பான நடனமணியாக ஆக முடியுமா? கண்டிப்பாக முடியாது. அவள் தான் பழக்கப்படாத அசைவுகளில் கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அவள் மேம்பட்ட நடனமனியாக ஆவது தனது பலத்தில் அல்லாமல், மாறாக தனது பலகீனத்தில் கவனம் செலுத்துவதில் இருக்கின்றது.

ஆன்மீகப் பாதையை நோக்குகையில், அருகிலிருக்கும் இந்து மையம் ஒன்றின் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் மகிழ்வடையும் ஒருவரை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். ஆனால் பூஜை வேளைகளில் அவள் தெய்வத்திடம் அவ்வளவாக பக்தி செலுத்துவதில்லை. அவளது பலம் சேவை, மற்றும் பலகீனம் பக்தி. மேலும் முன்னேற, அவள் தனது சேவை காரியங்களில் நேரத்தைக் குறைத்து, தனது பக்தியை ஆழப்படுத்தும் காரியங்களில் அதிகமாக ஈடுபட வேண்டும், எடுத்துக் காட்டுக்கு பஜனைகள், வீட்டில் மலர்ந்த பூக்களைக் கொண்டு மாலை கட்டுதல், மற்றும் தெய்வத்திற்கு துணிமணிகள் தைத்தல் போன்றவை. இரண்டாவது ஒப்பீடு திருத்தியமைதல் பற்றிய மனப்பான்மை. ஒரு நல்ல நடனக்காரர் தான் இதற்கு முன்னர் செய்ததை விட நடனத்தை இன்னும் அதிக நன்றாக ஆட முடியும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பாள். அவள் எப்போதும் தன்னைத் திருத்திக் கொண்டு மேம்பாடு அடைய முடியும் என்றும், தனது அசைவுகள் மேலும் நயம்பட அமைய முடியும் என்ற உணர்வுடனும் இருப்பாள்.

ஆன்மீகப் பாதையை நோக்குகையில், நாம் அஹிம்சையை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இது இந்துமதத்தின் ஒரு நடுநாயகக் கொள்கை. நாம் அனைவரும் கண்டிப்பாக உடலைத் துன்புறுத்தும் காரியத்தில் ஈடுபடுவதில்லை. ஆக அஹிம்சை நமக்கு ஒரு சவால் இல்லை என நாம் முடிவு கட்டிவிட முயற்சிக்கலாம்.

ஆனால், அஹிம்சயின் விளக்கத்தை இன்னும் நெருங்கி கவனிப்போம். இது மற்றவர்களை எண்ணம், வார்த்தை மற்றும் காரியங்களால் துன்புறுத்தாமல் இருப்பதாகும். இந்த தெளிவுமிக்க பூரணமான விளக்கம் காட்டுவது யாதெனில், நாம் மற்றவர்களை நமது செயல்களால் துன்புறுத்தாமல் இருந்தாலும், நாம் நமது நடத்தையை மேலும் பண்படுத்தும் வண்ணம் நமது பேச்சை கவனித்து வருவதுடன், மற்றவர்களை நமது வார்த்தைகளினால் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். வார்த்தையினால் வன்முறை என்பது நையாண்டி, சிறுமைப்படுத்துவது, வதந்தி மற்றும் புறங்கூறுவது போன்றவை. நமது வார்த்தைகளினால் பிறரைக் காயப்படுத்துவது குறையும் பட்சத்தில், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகின்றது. ஆன்மீகப் பாதைக்கும் நாட்டியப்படிப்புக்கும் இடையே காணப்படும் மூன்றாவது ஒப்பீடு தவறுகள் சார்பான நமது மனப்பான்மை ஆகும். பல ஆரம்பகட்ட நாட்டிய மாணவர்கள் தாம் செய்யும் தவறுகள் குறித்து மிக விழிப்புடன் இருப்பர். ஒரு தவறைச் செய்து விட்டு, அதனால் கலக்கம் அடைந்து, மீதமுள்ள நாட்டியப் பாடத்தில் கவனம் செலுத்தமுடியாமல் இருப்பர். நல்ல ஆசிரியர் ஒருவர் அவ்வாறான தவறுகள் இயற்கைதான்; எல்லா நடனக்காரர்களும் அவற்றைச் செய்வர். ஆசிரியரின் ஊக்குவிப்பால், மாணவர்கள் தவறு சம்பந்தமான பயத்திலிருந்து மீண்டு, மேலும் முதிர்ந்த மனப்பாங்கைப் பெறுவர், இது யாதெனில், ஒரு கடினமான அசைவின் பொழுது தவறு நிகழும் பொழுது, அடுத்தமுறை சரியாகச் செய்தாக வேண்டும் என்ற தீர்மானம் கொள்ளப்படும். ஒவ்வொரு தவறும் தனது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.

எல்லா மனிதகுலத்திற்கும், வளர்ச்சிப் பாதையில் ஒருவன் எங்கிருக்கின்றான் என்று இல்லாமல், ஆன்மீக முன்னேற்றம் வருவது தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில் இருந்துதான். பரிதாபமாக, இந்த நிகழ்வு தவறான ஒரு கருத்தாகிய நாம் தவறே செய்யக்கூடாது என்ற கருத்தினாலேயே முடக்கப்படுகின்றது. ஒரு தவறு நிகழுகையில், முதல் துலங்குதல் எது என்றால் நிலைக்குலைந்து, அதனால் உணர்ச்சிகளால் ஆழப்பட்டு, அல்லது அது மோசமான பெரும்பிழையாக இருக்குமாகில், மிகுந்த பாரத்தைச் சுமந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி நிற்பது. நமக்கு தேவை, ஒரு நாட்டியக்காரர் போலவே, அடுத்த முறை இன்னும் சரியாகச் செய்ய வேண்டும் என்ற தீர்மானமே. ஆக சரியான, இரண்டாவது துலங்குதல் யாதெனில், என்ன, எதனால் நடந்தது என தெளிவாகச் சிந்தனை செய்து, இந்தத் தவற்றை எவ்வாறு திரும்பவும் செய்யாமல் இருப்பது என வழிதேடுவது ஆகும். ஒரு வேளை நாம் போதுமான அளவு கவனமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆக அடுத்த முறை மேலும் அறிவுநுட்பத்துடன் இருப்பதால் இந்த பிரச்சனை நிகழாமல் இருக்க தீர்மானிக்கலாம். ஒருவேளை நமக்கு குறிப்பிட்ட விஷயம் ஒன்று தெரியாமல் இருந்திருக்கலாம், இந்த அனுபவத்தினால் அடுத்த முறைக்குத் தேவையான அறிவு கிடைக்கப்பட்டிருக்கின்றது.

நான்காவது ஒப்பீடு யாதெனில், ஆன்மீகப் பயிற்சிகள் போலவே, நாட்டியமும் ஒழுக்கத்துடன் மனத்திட்பத்தை, கவனத்தை, உயிர் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதைக் கொண்டுள்ளது. நாட்டியத்தில், மனத்திட்பம் கொண்டு உடல் சவால்மிக்க ஆசனங்களில் நகர்த்தப்படுகின்றது மிக நயத்துடன், இசைக்கு ஏற்றவாறு. நமது கவனம் பாடலின் கருத்தில் தொடர்ந்து ஒன்றியிருந்து, அதன் அர்த்தம் முகம், கைகள் மற்றும் உடல் அசைவுகளில் தொடர்ந்தாற்போல் வெளிக்கொணரப்படுகின்றது. உயிர் ஆற்றல் ஒரு கட்டுப்பாடு நிறைந்த முறையில் உடல் முழுவதும் நகர்கின்றது. உண்மையில், அடிப்படை நாட்டிய அசைவுகளை போதிக்கையில், குருதேவர் அழுத்தமாகச் சொல்வது நீ முதலில் உயிர் ஆற்றலை, பிராணனை, உனது மனதைக் கொண்டு நகர்த்து, பின்னர் அந்த பிராணன் கைகள் அல்லது கால்களை நகர்த்தும் என்பார். ஒழுக்கத்துடன் கட்டுப்பாடு செய்வதன் ஆன்மீகப் பக்கத்தை அறிய தியானப் பயிற்சியைக் காண்போம். நகர்வு ஏதும் இல்லாமல் தியானத்தில் அமர்ந்திருக்கும் செயலில் மனத்திட்பம் தோற்றம் பெறுகின்றது. நாம் கவனத்தை தொடர்ந்தாற் போல் தியானம் செய்யப்படும் பொருளின் மீது குவித்து, நமது எண்ணங்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும். மூச்சு கட்டுப்பாடான பிரணாயமம் மற்றும் பிரத்யாஹரம் எனப்படும் புலன்களிடத்து செல்லும் சக்தியை ஆன்மீக மையத்திற்கு இழுக்கும் வழிமுறைகள் மூலமாக உயிர் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

ஐந்தாவது ஒப்பீடு எதுவென்றால் நாட்டியமும் ஆன்மீக முயற்சிகளும் வெறும் ஏட்டு அறிவிலானவை அல்ல. நீ ஒரு சிறந்த நாட்டியக்காரர் ஆவது ஒரு புத்தகத்தைப் படிப்பதனால் நிகழாது. சிறிது படிப்பறிவு தேவை எனினும், நோக்கம் உண்மையிலேயே நாட்டியம் ஆடும் காரியத்திலேயே உள்ளது. நமது ஜட உடல் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைவதும் பயிற்சியினால் பல புதியத் திறன்களைப் பெறுவதும், ஒரு தேர்ந்த நடனக்காரராக வருவதும் பல ஆண்டுக்கணக்கான பயிற்சியினால்தான்.

தத்துவப் புத்தகங்களைப் படிப்பது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதில் ஓர் அங்கம்தான். ஆனால், மிகவும் முக்கியமானது ஆன்மீக ஒழுக்கங்களை தொடர்ந்தாற்போல் பயிற்சி செய்வதே ஆகும், அவை சாதனம் எனப்படும். நமது உணர்ச்சி, புத்தி மற்றும் ஆன்மீகத் தன்மைகள் குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகின்றன, பல ஆண்டுகளுக்கு சாதனங்கள் செய்வதன் மூலமே. குருதேவரின் சற்குரு, யாழ்ப்பாணத்து சிவயோகசுவாமிகள், தத்துவக் கல்வியில் அளவுக்கு அதிகமான நேரம் செலவிட்டு வரும் சில பக்தர்களுக்கு “அது புத்தகத்தில் இல்லை, நீ முட்டாள்” என்று சொன்னதில் இதையே அழுத்திச் சுட்டினார். அவர் அவர்களை அமர்ந்து, சும்மா இருக்கவும், மனதைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தினார்.

நாட்டிய ஒழுக்கங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன, இதில் பலம், நெகிழ்வு, நளினம் மற்றும் யுக்தி ஆகிய பயிற்சிகள் அடங்கும். இந்து மதத்தின் ஆன்மீகப் பயிற்சிகளும் பொதுவில் நான்கு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன: ஒழுக்கம், சேவை, பக்தி மற்றும் தியானம். சுருங்கக் கூறின், நாம் நாட்டியத்தில் பாண்டித்துவம் பெறுவதிலும் ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கும் தேவையான நடத்தையும் மனப்பாங்கும் ஒத்திருக்கும் ஐந்து வகைகளைப் பார்த்தோம். எல்லாரும் பயனடையக்கூடிய ஒரு முக்கியப் பகுதி யாதெனில் நமது பலகீனங்களைச் சரிசெய்வதே ஆகும். நீ மேம்பட வேண்டும் என உணரும் ஒரு பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, அதை வாழ்க்கையில் செயல்படுத்து. எடுத்துக் காட்டுக்கு, சில நாட்களில் நீ வீட்டு பூஜையறையில் வழிபட்ட பின்னரே வீட்டை விட்டு வெளியேறுவாய், மற்றும் பல நாட்களில் நீ அவ்வாறு செய்ய மாட்டாய். மேலும் ஒழுக்கமிக்க ஒருவனாக வர தீர்மானம் கொண்டு வீட்டு பூஜையறையில் ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்க உறுதி கொள். இந்தப் பயிற்சியில் வாடிக்கையாக ஈடுபடுகையில், நீ பலகீனமான ஒரு பகுதியைப் பலப்படுத்தி விட்டாய், இதனால் நிஜமான ஆன்மீக முன்னேற்றத்தை கண்டுள்ளாய், ஒரு சிறந்த நாட்டியக்காரர், சிறிது சிறிதாக தனது நாட்டியத்தை மேம்படுத்தும் காரியம் போலவே.