• Publisher's Desk
 • Tamil - தமிழ்
 • புனிதத் தாமரை மலரை கவனி Behold the Sacred Lotus Flower April 2012
 • புனிதத் தாமரை மலரை கவனி Behold the Sacred Lotus Flower April 2012

  ஆசிரியரின் மேசை

  புனிதத் தாமரை மலரை கவனி

  மிருகத்தனத்திலிருந்து படிப்பறிவு பின்னர் ஆன்மீகத் தன்மை என வளர்ந்து, நமது ஆத்மா ஓர் அழகியத் தாமரையை ஒத்த பிரகாசம் அடைகின்றது  Read this article in: English | Gujarati | Hindi | Marathi | Russian | Spanish | Tamil

  ெய்வீக வித்து அனைவருள்ளும் இருக்கின்றது என்பது இந்துப் பார்வை. என் குருவின் குரு, ஶ்ரீலங்காவின் சிவயோகசுவாமிகள், இந்த கருத்தை விளக்குவதற்கான மிகவும் எளிய யுக்தியைக் கொண்டிருந்தார். “அனைவரையும் கடவுளாகப் பார். ‘இவன் கொள்ளயன், அவன் பெண் பித்தன், அங்கிருப்பவன் குடிகாரன்’ எனச் சொல்லாதே. இந்த மனிதன் கடவுள், அந்த மனிதன் கடவுள். கடவுள் அனைவருள்ளும் இருக்கின்றார். வித்து அங்கே இருக்கின்றது. அதனைப் பார் மற்றவற்றை கவனிக்காதே.” தெய்வீகம் இல்லாத ஒருவன் இல்லவே இல்லை என்றும் யாரும் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவது இல்லை என்பதை இஃது கண்டிப்பாக மறுவுறுதி செய்கின்றது. மாறாக, ஒருவனுடைய தெய்வீகம் எப்பொழுது தன்னை வெளிப்படுத்தும் என்பதே கேள்வி. இன்னும் சில பிறவிகளுக்குப் பின்னரே இது நிகழலாம். சுருங்கக் கூறின், ஆன்மீக மலர்ச்சி ஒரு மெதுவான, தவிர்க்கமுடியாத நிகழ்வாகும்.

  எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், சமஸ்கிருதத்தில் அத்யாத்ம விசாகம் எனப்படும் ஆன்மீக வளர்ச்சிதனை உதாரணிக்க மிகவும் உள்நோக்கு வாய்ந்த உவமை ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அவர் தாமரையைத் தொட்டு, எவ்வாறு அதன் விதை குளத்தின் கரியச் சேற்றில் தொடங்குகின்றது என பேசியுள்ளார். அதன் வேர்கள் ஒரு தண்டினை உருவாக்கி, நீரின் ஊடாக பின்னர் அது வானத்தைச் சென்றடைகின்றது. தண்டிலிருந்து ஒரு மொட்டு, ஆரம்பத்தில் மிகச் சிறிதாக ஆரம்பித்து, பின்னர் ஒரு மலராக வளர்ந்ததும், அதன் தனித்தன்மை மிக்க இதழ்கள் சூரியனிடம் தன்னை மெதுவாக விரித்து, தேனும் மகரந்தமும் தேனீக்களுக்கு அறை கூவல் விடுக்கின்றது. குருதேவர் இதை மனிதனின் தன்மைக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒப்பிடுகின்றார். சேறு மிருகத்தன்மை. ஒரு பிறவி அல்லது மற்ற ஒன்றில் நாம் சேற்றிலிருந்தே ஆரம்பிக்கின்றோம். ஆரம்ப வளர்ச்சியில் நாம் கரடுமுரடாகவும் கருணையின்றியும் இருக்கின்றோம். மற்றவரை காயப்படுத்தியும் தன்னலமாகவும் காணப்படுகின்றோம். நாம் ஒருவேளை சிறையிலும் தள்ளப்படலாம். நாம் அனைவரும் அங்கேயே தொடங்குகின்றோம், வேர்களில், மிருக மனதின் கடும் இருட்டில் மூழ்கி, கண்ணாடிப் பேழையில் புகுந்த முரட்டுக் காளை அனைத்தையும் சின்னாபின்னமாக்குவது போலச் செயல்படுகின்றோம்.

  நாம் வாழ்ந்தும் பயின்றும் வருகையில் ஒரு வாழ்க்கையை அடுத்து மற்றொரு வாழ்க்கைத் தொடர்கின்றது. இறுதியில் மிருகமனம் சிறிது நமது கட்டுப்பாட்டுக்கு வந்தப் பின்னர், நீரை நோக்கி மேலே செல்கின்றோம், இது படிப்பறிவாகும். நாம் சிந்திக்கும் ஒருவனாகின்றோம், விஷயங்களில் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம், நமது மிருக உணர்ச்சிகளை அடிப்படையில் கட்டுப்படுத்தி, அதனால் நாம் அபாயத்தை சந்திக்கும் நேரம் ஆத்திரப்பட்டு சண்டைப் போடுவதில்லை.

  இக்கட்டத்தில், நாம் மிருககுண-படிப்பறிவு மனிதனாக இருக்கின்றோம், ஒரு பகுதி மிருககுணச் சேற்றிலும், மறுபகுதி அறிவுப்பூர்வ நீரிலும் வாழ்கின்றோம். அப்படிப்பட்ட ஒருவனுக்கு கடவுள் உண்டு என்றோ, வாழ்க்கை புனிதமானது என்ற உணர்வே இருக்காது. இவ்வுலகம் இவ்வாறான மக்களால், அதாவது நாஸ்திகவாதிகள், பொருள்வாதிகள் மற்றும் சுயநிர்ணயவாதிகளால் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது கொண்ட பிறவியையும் தாண்டி, வாழ்க்கையில் ஆன்மீக நோக்கம் பொருந்தியுள்ளதை அறியாமல் உள்ளனர்.

  பின்னர் என்ன நடக்கிறது? தண்டு நீரைத் தாண்டி மேலே வளர்கின்றது. அது நீரைக் கடந்து, வானை நோக்கி வளர்கின்றது, இது நமது ஆன்மீகம், உள்நோக்கு அல்லது கடவுள் உண்டு என்ற ஓர் உணர்வை பிரதிபலிக்கின்றது. நாம் மதத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம்; ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றி எண்ணத் துவங்குகின்றோம். மிருகக்குணம், புத்தக அறிவு மற்றும் சாதாரண விஷயங்களை மட்டும் விரும்பி, உலக காரியங்களில் மட்டுமே ஈடுபடுவது நமக்கு திருப்தி தருவதாக இல்லை. ஆனால் மொட்டு இன்னும் மூடியே உள்ளது, முழுவளர்ச்சியடைந்து திறக்கவில்லை. மூடிய மொட்டுக்கு கடவுள் அங்கே இருக்கின்றார் என தெரிகின்றது ஆனால் அவரிடம் நேரடியான அனுபவம் சம்பவிக்கவில்லை.

  எது மொட்டுதனைத் திறக்கச் செய்கின்றது? ஒரு வாழ்க்கைக்குப் பிறகு மற்ற ஒன்று என பயில்வதும் வளர்வதும், ஞானிமார்களின் கருணையும், தெய்வத்தின் ஆசீர்வாதங்களும் ஆன்மீக பயிற்சிகளுமே. மொட்டு திறக்க வேண்டுமாயின் நாம் விழிப்புடன் முயற்சிக்க வேண்டும்.

  இந்து மதம் நமக்கு சமயப் பயிற்சிகளைக் கொடுக்கின்றது, இவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது சரியை, நல்ல படியாக நடந்துக் கொள்வது, நடத்தையைக் கட்டியெழுப்புவது. இதுவே இன்னும் ஆழமானப் பயிற்சிகளுக்கு ஓர் அடித்தளமாகின்றது. இரண்டாவது, தன்னலமற்றச் சேவை அல்லது கர்ம யோகம் - நாம் செய்யக் கட்டாயமில்லாத உதவிகளை மற்றவகளுக்குச் செய்வது. நான் இப்படித்தான் இதனை வரையறுக்கின்றேன். நாம் வேலைச் செய்யும் இடத்தில் மற்ற ஒருவருக்காக நாம் நல்லிதயத்துடன் உவந்து செய்யும் காரியம் சேவை எனக் கருதப்படுகின்றது. சேவை ஒரு கோயிலிலோ அல்லது ஆசிரமத்திலோதான் செய்யப்பட வேண்டும் என இல்லை. நாம் வேலைக்குச் சென்று, நாம் பெறும் ஊதியத்திற்கு மட்டுமே காரியமாற்றும் பட்சத்தில் சேவை என்பது இடம்பெறுவதில்லை.

  மூன்றாவது வகைப் பயிற்சி பக்தி, இதனை நாம் கோயிலிலும் நமது வீட்டில் நாம் கொண்டுள்ளக் கோயிலிலும் வெளிப்படுத்துகின்றோம். வீட்டில் ஒரு பூஜை மாடம் கொண்டு, தினமும் அங்கு வழிபாடு செய்வது ஒரு முக்கியமான பயிற்சி. நான்காவது தியானம். தியானம் சற்று ஆழமானது, ஆகையால் நன்றாகச் செய்யப்பட ஓர் ஆசிரியரின் உதவி முக்கியமாகின்றது. நான் உரையாடும் பெரும்பாலானவர்கள் “ நான் தியானம் செய்ய முயற்சிக்கின்றேன் ஆனால் எனது எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்ல.” எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கவில்லை. தியானம் எனும் கலையைப் பற்றி தனிப்பட்ட முறையில் விளக்கிக் கூறும் ஒருவர் இன்னும் வாய்க்கவில்லை. ஓர் அசாதாரண மனிதனால் மட்டுமே தியானத்தை தன்னாலேயே பயின்றுக் கொள்ள முடியும்.

  ஆக, நன்னடத்தை, சேவை, பக்தி மற்றும் தியானம் என நான்கு வகைப் பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வழக்கமாகப் பயன்படுத்தி வருகையில் என்ன நடக்கும்? மொட்டு மெதுவாகத் திறக்கின்றது. விதைக்குள் மௌனமாகக் காத்துக்கிடந்த உனது தெய்வீகம் மலருகின்றது. பல மேற்கத்திய எண்ணங்களும் குறிக்கோள்களும் ஒரே ஒரு பிறவி மட்டுமே உள்ளது, அல்லது ஒரே ஒரு பிறவி மட்டுமே இருக்கலாம் - ஆக செய்ய முடிந்த எல்லாவற்றையும் இந்தப் பிறவியிலேயே செய்து விட வேண்டும் என்ற பழக்கனால் ஆனது. இந்தப் பிறவியிலேயே கடவுளை அறிந்துக் கொள்வோம், அப்படிப்பட்ட ஒன்று இருந்தால் எப்படியும் உதவியாயிருக்குமே. இந்து பழக்கமோ, நாம் பல பிறவிகளில் வாழ்கின்றோம் என்ற உறுதியில் நிற்கின்றது, “நான் திரும்பவும் வருகின்றேன் என எனக்குத் தெரியும், அவசரம் இல்லை. என்னால் முடிந்த அளவு இப்பிறவியில் நான் செய்வேன், மேலும் முன்னேறுவதற்கான காலம் நிறையவே இருக்கின்றது.” ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மீக வளர்ச்சிப் பெற்று வளர்ந்து - மொட்டுதனை சற்றே மேலும் திறக்கச் செய்வது- இந்து வழியாகும். விடாமல் செய்யப்படும் பயிற்சியினால் முன்னோக்கிச் செல்வதில் நாம் திருப்திக் கொள்கின்றோம், நம்மால் நிலைநிறுத்தக் கூடிய அளவில், அவசரமின்றி, எங்கே தவறிவிடுவோமோ என்ற அச்சமின்றி. தெய்வீக வித்து நம்முள்ளேயே அடங்கிக் கிடக்கின்றது என்ற நம்பிக்கையில் நாம் சாந்தமுடனுள்ளோம்.

  இந்து மதம் இக்கருத்தை மேலும் ஒருபடி ஆழமாகக் கொண்டுச் செல்கின்றது. இறுதியில் நாம் ஒவ்வொருவரும் நமது உள்ளார்ந்த பொருளை, கடவுளை அறிவோம். ஸ்வேதஸ்வதர உபநிஷதம் பகருகின்றது, “எவன் ஒருவன் ஆத்மனுடன் கலந்துப் போகின்றானோ, ஒரு விளக்கைக் காண்பது போலவே பிரம்மத்தைக் காண்கின்றானோ, எவன் தோன்றாத, தோற்றம் கடந்த நிலையில், நிலைத்து நிற்கும் கடவுளை அறிந்துள்ளானோ, அவன் அனைத்து கட்டுக்களில் இருந்தும் நீங்குகின்றான்.” இஃது மேற்கத்திய சமய நம்பிக்கைகளில் காணப்படும் கருத்தைவிட பெரும் வித்தியாசமாகும். அதாவது கடவுள் சொர்க்கத்தில் இருக்கின்றார், அவரை பூமியில் வாழும் நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியாது என்பதாகும். கடவுளின் சான்னித்தியம் உடனுக்கு உடனேயே உள்ளதை குருதேவர் அடிக்கடி சொல்லியுள்ளார்: “கடவுள் நமக்கு மிக நெருக்கத்திலேயே உள்ளார். நமது சுவாசத்தை விடவும் மிக அருகில், நமது கைகால்களை விடவும் மிக பக்கத்தில் இருக்கின்றார். ஆம், கடவுள்தான் நமது ஆத்மாவின் கருப்பொருள்.”

  தாமரை மலருக்கான நமது உவமைக்கு மீண்டும் வருவோம். தாமரைப்பூ போதுமான அளவு மலர்ந்ததும் நாம் நமது ஆன்மீக அல்லது உள்நோக்கு தன்மையிலேயே சதாகாலமும் விழிப்புடன் வாழ தொடங்குகின்றோம். கேள்வி ஒன்றினைக் கேட்போம், “எது ஆன்மீக வளர்ச்சி அடைகின்றது? எது மலருகின்றது?” ஆத்மாதான் அது. ஆன்மீக மலர்ச்சியைப் பற்றி பேசும்கால், நமது ஆத்மாவின் தன்மையைப் பற்றி தெரிந்து கொள்வது உதவியாயிருக்கும். நாம் ஆத்ம உடலையும் அதன் கருப்பொருளையும் வேறுபடுத்திப் பார்க்கின்றோம். அதன் கருப்பொருள் இரண்டு அடுக்கு: மாறாத தூய உணர்வும், காலம் உருவம் வெளிக்கு அப்பாற்பட்ட கடந்த தீர்க்கப் பொருளும் இதுவாகும். ஆத்ம உடல் மனிதனின் ஜட உடல் போன்ற உருவத்தோடு, சுய ஒளிப் பொருந்தியது, இதுவே பரிணாமித்து முதிர்ச்சி அடைகின்றது. மரணம்பிறப்பு இல்லாத ஆத்ம உடல் சமஸ்கிருதத்தில் ஆனந்தமய கோஷம் (பேரானந்த சட்டை) என குறிக்கப்படுகின்றது. இந்த ஆத்ம உடலே, தாமரை மலரைப் போன்று வளருகின்றது. ஆத்மாவின் கருப்பொருள் அனாதியாக பரிபூரணம், கடவுளை ஒத்தது.

  நமது ஜட உடல் ஒரு சிறு குழந்தையாக இருந்து பெரியவனாக வளர்வதைப் போன்று, ஒளி பொருந்திய நமது ஆத்ம உடலும் வளருகின்றது, அறிவிலும் பொலிவிலும், ஒரு வாழ்க்கையிலிருந்து மற்றொரு வாழ்க்கையில் வளர்ந்தவாறே, படிப்படியாக தனது நரம்பு மண்டலங்களை உறுதியாக்கிக் கொண்டு, கடவுள் அறியாமையிலிருந்து கடவுளை அறிந்து முன்னேற்றம் காண்கின்றது.

  சிவனோடு சாயுச்சியம் என்ற நூலில் குருதேவர் ஆத்ம உடலைப் பற்றிய தனது மெய்ஞான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்: “ஒரு நாள் நீ உன்னைக் காண்பாய், உனது ஆத்ம உடலை. நீ அதனை உனது ஜட உடலின் உள்ளே காண்பாய். அது ஒளிஊடுவும் நெகிழியைப் போன்றிருக்கும். அதனை நீல ஒளிச் சுற்றியிருக்கும், அதன் எல்லை வெள்ளை-மஞ்சள் நிறத்திலிருக்கும். அதன் உள்புறத்தில் நீல-மஞ்சள் ஒளி நிறைந்து, கோடிக்கணக்கான சிறிய நாடிகள் ஊடுருவி, அனைத்தும் ஒளியால் பிரகாசித்து ஜொலிக்கும். இந்த உடல் ஒரு தாமரை மலரில் நின்றிருக்கும். உள்ளூராக பார்க்கும் பொழுது, கால்களின் ஊடாக நோக்கின், நீ ஒரு பெரிய, அழகிய தாமரை மலரில் நின்றிருப்பாய். இந்த உடலுக்கு ஒரு தலை உள்ளது, இதற்கு கண்கள் உள்ளன, இதற்கு எல்லையில்லா அறிவு உண்டு. இது அனைத்து சக்திக்கும் மூலகர்த்தாவை நோக்கியவாறு, அதனிடம் இருந்து ஆற்றல் பெறுகின்றது.”

  ஆன்மீக வளச்சிக்கு இன்னும் ஒரு பாங்கு உண்டு. ஓர் இந்து மகான், சுவாமி அல்லது யோகி, உயிருடனோ அல்லது மறைந்தவரோ, உன் பார்வையில் மிகப்பெரிய ஆன்மீக உச்சத்தை அடைந்தவராக உள்ளவரைத் தேர்ந்தெடு. இப்போது அவரது அடைவுநிலையானது உனது சொந்த ஆற்றல் என கண்டும் ஏற்றும் கொள். இதுவே மிக ஆச்சரியத்தகும் உண்மையாகும். யாரோ ஒருவர் பெற்ற ஆன்மீக அடைவுகளை நீயும் அடையும் திறமை உன்னுள்ளேயே அடங்கி உள்ளது, எதிர்காலத்தில் உருப்பெருவதற்காக. ஒருவேளை அந்த எண்ணம் உனது ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இன்னும் சற்றுக் கூடிய முயற்சி செய்ய உந்தலாம். தாமரை மலர் முழுமையாக மலர்ந்து நிற்பதைக் காண் - அது உனது சொந்த பரிபூரண ஆன்மீக ஆற்றலின் அடையாளம்.

  கண்டிப்பாக, முயற்சி செய்வதன் மூலமாகத்தான் ஆற்றல் நிஜரூபம் பெறுகின்றது. உனது தேடலில் நீ உண்மையாக இருந்தால், உன்னையே கேள்வி கேட்டுக் கொள். அந்த நான்கு விதமான பயிற்சிகளை நான் எவ்வாறு என் வாழ்க்கையில் இக்கணத்தில் செயல்படுத்துகின்றேன்? நன்னடத்தை? சேவை? பக்தி? தியானமும் யோகமும்? எந்தப் பகுதிகளில் எனது கவனம் அதிகமாகவும் உழைப்பு கூடுதலாகவும் தேவைப்படுகின்றது? நான் மேம்பட என்ன செய்ய வேண்டும்? பின்னர் அதனைச் செய்.


  The comments are owned by the author. We aren't responsible for their content.
  Copyright Himalayan Academy. All rights reserved.

  Get from the App Store Android app on Google Play