Read this article in:
English |
Gujarati |
Hindi |
Marathi |
Russian |
Spanish |
Tamil

இந்து மதத்தின் ஒரு தனித்துவமான தன்மை யாதெனின் யார் வேண்டுமானாலும் ஒரு பூஜாரியாகவும், தனது சொந்த கோயிலுக்கு பொறுப்புதாரியாகவும் இருக்க முடியும். இந்தக் கோயில் எது என்றால், உனது வீட்டு பூஜை மாடம். இதனை உன்னால் ஆன்மீக சக்தியூட்டி அல்லது தினசரி பூஜை மூலமாக ஒரு சிறியக் கோயில் போன்றும் மாற்ற முடியும். இந்தக் காரியம் பூஜை மாடம் தனி ஓர் அறையாக இருந்தால் மிகச் சிறப்பாக நடைபெறும், வெறும் பூஜை மற்றும் தியானத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொழுது, வெளியுலக பேச்சு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் நீங்கலாக. இதுவே உத்தமம். இது கிட்டாத நேரத்தில், வெறுமனே சாதாரண அலமாரி அல்லது பரண் போன்று இல்லாமல், பூஜை மாடம் ஓர் அறையின் அமைதியான மூலையில் கம்பீரமாக இருக்கலாம். அந்த பூஜை மாடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓர் அடைக்கலமாகவும், சாந்தமும் நிம்மதியுமான இடமாகவும் இருக்கச் செய்தல் வேண்டும். அவர்கள் தெய்வத்திடம் தொடர்பு கொள்ளவும், போற்றி வழிபடவும், தினசரி தேவைகளுக்கு வேண்டிக்கொள்ளும் இடமாகவும் இருத்தல் வேண்டும்.

காஞ்சி காமகோடி பீடத்தின் மறைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமிகள் வீட்டு பூஜையின் அவசியத்தினை குறிப்பிட்டுள்ளார்: “ஒவ்வொரு குடும்பத்தினரும் ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய வேண்டும். எவருக்கெல்லாம் விரிவான பூஜை செய்ய முடியுமோ, முறையான தீட்சைப் பெற்றப் பிறகு அவ்வாறு செய்யலாம். பிறரெல்லாம் ஒரு சுருக்கமான பூஜையைச் செய்ய வேண்டும், பத்து நிமிடத்திற்கு மேற்போகாமல். அலுவலகங்களில் வேலைச் செய்வோர் குறைந்த பட்சம் இந்த சுருக்கமான பூஜையைச் செய்ய வேண்டும். புனித மணி ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும்.”

வீட்டு பூஜை மாடத்தில் நாம் செய்யும் பூஜைக்கான முயற்சிகள் எளிதானதாக ஆரம்பித்து, எவ்வாறு படிப்படியாக விரிவடைகின்றது என்பதைக் காட்ட ஒரு கதை உள்ளது. சேகர் குடும்பத்தினர் தம் வீட்டில் எப்போதும் ஒரு பூஜை அறையை கொண்டிருந்தனர். வருடங்கள் உருண்டோடிய போது கணவர் பூஜையை முறையாகச் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் அவர் சில சுலபமான மந்திரத்தை செபித்தவாறு, ஊதுவர்த்தி மட்டும் காட்டுவார். பிறகு அவர் மேலும் சில மந்திரங்களை கற்று, பூஜையின் இறுதியில் ஆரத்தியும் காட்ட ஆரம்பித்தார். இறுதியாக அவர் முழு ஆத்மார்த்த கனேச பூஜையையும் கற்றுக் கொண்டு, இப்போது தினமும் காலை உணவுக்கு முன்னர் அதனைச் செய்து வருகின்றார். முழு பூஜையையும் செய்வது அவருக்கு ஆழமான திருப்தியை அளிப்பதாகவும், குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உந்துதலாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். (கனேச ஆத்மார்த்த பூஜை எழுத்து வடிவிலும் ஒலி வடிவுலும் இங்கே கிடைக்கும், http://www.himalayanacademy.com/audio/chants/ganesha_puja/.)

பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை, ஆனால் சுய பூஜை ஓர் அடிப்படை ஆதார கூறாக இந்து மதத்தின் நடத்தைக் கோட்பாட்டில் வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது இயமங்கள் (கட்டுப்பாடுகள்) மற்றும் நியமங்கள் (பழக்கங்கள்). இந்த நடத்தைக் கோட்பாடுகள், அஷ்டாங்க யோகத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது படிகளாக அமைந்து, தியான முறைகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. பத்து நியமங்களில் ஒன்றான வழிபாடு, ஈஸ்வரபூஜனம் எனப்படுகின்றது. ஒரு பூஜாரி நமக்காகச் செய்யும் பூஜையை காட்டிலும் நாம் நமக்கே செய்து கொள்ளுவதாக அமையும் இந்த பூஜையையே அது குறிக்கின்றது. இந்த வழிபாடு, வீட்டு பூஜை அறையில் செய்யப்படுவது, வெறுமனே ஒரு மலரை தெய்வத்திடம் வழங்குவதிலிருந்து, முழு மரபுசார்ந்த பூஜையை செய்யும் வரை இருக்கலாம். சாதாரண மனிதன் ஒருவன் செய்யும் பூஜை ஆத்மார்த்த பூஜை எனப்படுகின்றது, சுய வழிபாட்டுச் சடங்காகக் கொள்ளப்படுகின்றது; அதே வேளை பூஜாரி ஒருவர் கோயிலில் செய்யும் பொது பூஜை பரார்த்த பூஜை ஆகும். ஆத்மார்த்த பூஜையின் இறுதியில், சில நிமிடங்கள் தியானிப்பது, அதாவது உள்ளார்ந்த வழிபாடு செய்வது வழக்கமாகும். இதனால் பூஜையினால் உருவாகி, பூஜை அறையிலேயே நிலைத்திருக்கும் பிராணனை, மென்மையான உணர்ச்சிகளை, நம்மால் ஆத்ம நிலைக்கு எடுத்துச் செல்ல ஏதுவாகும். இவ்வாறு செய்வதால், பூஜையினால் அதிகபட்ச பலன்களை நாம் பெற முடியும்.

சிலர் பூஜை செய்ய பயப்படுகின்றனர் என்பதை என் குருதேவர் கவனித்துள்ளார். ஏன்? போதுமான பயிற்சி இல்லை என்ற உணர்வும் அல்லது பூஜையின் மறை தத்துவங்களைப் போதுமான அளவு அறியாமல் இருப்பது ஆகும். பல இந்துக்கள் பூஜை மற்றும் சடங்குகளைச் செய்வதற்கு பூஜாரிகளை நம்பியுள்ளனர். இருப்பினும், காஞ்சிபுரத்தின் மஹாசுவாமிகள் போலவே, குருதேவரும் சொல்வது யாதெனில் எளிதான பூஜைகள் யாரெல்லாம் கடவுள், தெய்வங்கள் மற்றும் தேவர்களின் அருளை வருவிக்க விரும்புகின்றனரோ, அவரெல்லாம் செய்யலாம் என்பதே. தெய்வத்தின் மீது கொண்ட அன்பு சடங்கு பரிபூரணத்தை விட அதிக முக்கியமானது. மேலதிக ஆத்மார்த்த பூஜை செய்ய விரும்புவர்கள் பயிற்சியும், தீட்சை என்ற அனுமதியையும் தகுதிவாய்ந்த பூஜாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆத்மார்த்த பூஜை செய்ய ஒரு முக்கிய கட்டுப்பாட்டை குருதேவர் வைத்துள்ளார்: “ மிகக் கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருந்தால், முப்பத்து ஒரு நாட்களுக்கு பூஜை செய்வதில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். மூர்த்திகளின் முன்னால் எளிய வாசனைத் திரவியம் காட்டுவது அனுமதிக்கப்படலாம், ஆனால் ஆரத்தி காட்டுவது, மணி அடிப்பது அல்லது எந்த மந்திர ஜபமும் கூடாது, ஓம் மந்திர ஜபம் மட்டும் செய்யலாம்.”

சினமுண்ட ஒருவன், இரண்டாம் உலகிலிருக்கும் அசுரர்களை வருவித்து, நம்மை கலக்கம் அடையச் செய்வான், நமக்கு ஆசீர்வாதம் செய்யும் தேவர்களை அழைக்காமல். உண்மையைக் கூற வேண்டுமாயின், வெற்றிகரமாக வீட்டினை ஆன்மீகப்படுத்த, கோப வெளிப்பாடுகளையும் சாபமிடுதலையும் மிகக் குறைத்து இருக்க வேண்டும். ஒரு சிக்கலான புதிர்விளையாட்டு ஒன்றைத் தீர்க்க வேண்டியிருப்பதாக உவமைக் கொள்வோம். பூஜை செய்வது சரியாக பத்து புதிர்க்காய்களை இணைப்பது போன்றது. சிறிய கோபம் சரியாக இணைக்கப்பட்டதிலிருந்து ஐந்து காய்களை பிரித்து எடுத்து விடும். சாபமிடுதல் இரண்டு காய்களையும், பெரிய சண்டைக்கு இருபது காய்கள். கோபத்தையும், சாபத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால், நம்மால் புதிரை முடிக்க முடியாது என்பது தெளிவாகின்றது. வேறுமாதிரியாகக் கூறின், வீட்டின் ஆன்மீகத்தை அதிகரிக்கச் செய்யும் நமது மிக தீவிரமான முயற்சிகள் கூட வெற்றிப் பெறாமல் போய்விடக்கூடும், நாம் சினமும் சாபமும் கொண்டிருந்தால்.

எல்லா இந்துக்களுக்கும் காவல் தெய்வங்கள் இருக்கின்றனர், அந்தர்லோக வாசிகளாக வாழ்ந்தவாறு, நம்மை வழிகாட்டியும், பாதுகாத்தும் கண்கானித்தும் வருவது காவல் தெய்வங்கள். பூஜை அறை, இத்தகைய நிரந்தர, கண்களுக்குப் புலனாகாத விருந்தாளிகளுக்கானது. குடும்பத்தார் அனைவரும் நுழைந்து, உள்ளே அமர்ந்து, அவர்களுடன் உள்ளூராகத் தொடர்பு கொள்ள முடியும். காவல் தெய்வங்கள், தலைமுறை அடுத்து தலைமுறையாக, அந்த குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக முழு விசுவாசம் உடையவர்கள். அடையாளத்திற்காக ஒரு பூஜை சந்து ஒன்றை படுக்கை அறையிலோ, அலமாரியிலோ, சமையலறையிலோ வைப்பது இந்த தெய்வீகச் சக்திகளை அழைப்பதற்கு போதுமானதல்ல. குருதேவர் அறிவுறுத்தி உள்ளார். “மதிப்பிற்கு உரிய ஒரு விருந்தாளியை நாம் வீட்டு ஸ்டோரில் வைத்து உபசரிப்பது, அல்லது அவரை வீட்டு சமையலறையில் தூங்க வைப்பதுமாகச் செய்து, பின்னர் அவர் வரவேற்று மதிக்கப்பட்டு அன்புபாராட்டப்பட்டதாக உணரும்படி செய்ய எதிர்பார்ப்பதற்குச் சமமாகும்.”

மிகவும் சம்பிரதாயமான இந்து இல்லம் வீட்டு பூஜை மாடத்தை மையமாகக் கொண்டுள்ளது. இது ஒரு விஷேசமான அறை தனியாக ஒதுக்கப்பட்டு, கோயில் போன்ற ஒரு சூழ்நிலையில், நாம் பூஜை செய்கின்றோம், மறை நூட்களைக் கற்கின்றோம், சாதனைகள செய்கின்றோம், பஜனை மற்றும் ஜபம் செய்கின்றோம். இந்த புனித இடம் ஒரு தனி அடைக்கலம் அளிக்கின்றது, தியான அறையாகின்றது. இது நாம் உலகியல் விஷயங்களில் இருந்து வெளியேறி அடைக்கலம் ஆகும் பாதுகாப்பான இடமாகின்றது. நமது உள்ளே சென்று, உயர் உணர்வு உள்நோக்கைத் தொட உதவுகின்றது. நம்மை நாமே எதிர்கொள்ளும் இடமாகவும், குற்ற உணர்வுகளை எழுதியும் எரித்தும், புதிய தீர்மானங்களைப் செய்யவும் உதவுகின்றது. நமது காவல் தேவர்களின் உதவியுடன், உள் ஒளி அறிவால் பிரச்சனைகளைத் தீர்க்கும் இடமாகவும் அமைகின்றது.

வீட்டு பூஜை மாடத்தின் அதிர்வுகளை பலப்படுத்த உன்னால் முடியும். தவறாமல் சீராக கோயிலுக்குச் செல்வதால், சிறப்பாக வேண்டின் வாரத்தில் ஒரு முறை மற்றும் விழாக் காலங்களில் இன்னும் அதிகமாக செல்வது. கோயிலிலிருந்து வீடு திரும்பியதும் பூஜை அறையில் ஓர் எண்ணை விளக்கை ஏற்றி வைப்பதம் மூலம், கோயிலின் சமய சூழலை வீட்டுக்குள் கொண்டு வர ஏதுவாகின்றது. மெய்ஞானமாக பார்க்கின், இந்த எளிய காரியம் கோயிலில் இருந்த தேவர்களை நேராக வீட்டு பூஜை அறைக்குள் கொண்டு வருகின்றது. இதனால் உள் உலகங்களில் இருந்தவாறு, தேவர்கள் குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதிப்பதுடன் வீட்டு சமய சூழலை பலப்படுத்துகின்றனர்.

தெய்வமும் தேவர்களும் தங்கியிருக்கும் தனிப்பட்ட வீட்டு பூஜை அறையை கொண்டிருக்கும் கருத்தை குருதேவர் மேலும் ஒரு படி ஆழமாகக் கொண்டுச் செல்கின்றார். கலாச்சாரமிக்க பக்திமிகு இந்துக்கள் தமது முழு வீட்டையுமே தெய்வத்திற்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவிக்கின்றார்: “ ஈஸ்வரபூஜனத்தின் (வழிபாட்டின்) உத்தமம், சதாகாலமும் கடவுளுடன், கடவுளின் வீட்டில் வசிப்பது ஆகும், அது உனது வீடும் கூட. மற்றது அடிக்கடி கடவுளின் கோயிலுக்குச் செல்வதாகும். இது உள்ளார கடவுளைக் கண்டுகொள்வதற்குத் தேவையான அடித்தளத்தை அமைக்கின்றது. தினசரி வாழ்வில் ஒருவன் கடவுளின் வீட்டில் கடவுளின் தோழனாக வாழ முடியாவிட்டால், எவ்வாறு அவனால் கடவுளை உள்ளே கண்டெடுக்க முடியும்? பதில் கண்கூடு. இல்லையேல், வெறுமனே அறிவு நடிப்பு, பொதுவில் ஆணவத்தை அடிப்படையாகக் கொண்டது.”

தமது வீட்டில் தெய்வம் வாசம் செய்வதை உணரும் இந்துக்கள், இயற்கையாகவே அவரை போற்றி மகிழ்வர், ஏன் உணவும் பரிமாறச் செய்வர். அன்புடன் தெய்வ படத்தின் முன்னர் உணவை வைத்து, அங்கிருந்து அகன்று, கதவை மூடி விட்டு, தெய்வமும் தேவர்களும் உணவருந்த வகைச் செய்வர். குருதேவர் காண்பது: “தெய்வமும் தேவர்களும் உணவை உண்டு களிப்பர்; உணவின் பிராணனை, சக்தியினை தம்முள் இழுத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் இதனைச் செய்கின்றனர். சாப்பாடு முடிந்ததும், அனைவரும் சாப்பிட்டப் பிறகு, தெய்வத்தின் தட்டும் எடுக்கப்படும். கடவுளின் தட்டில் மீதம் இருக்கும் உணவு பிரசாதமாக உண்ணப்படும் அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட படையல். குடும்பத்தில் இருக்கும் மிகப் பசி கொண்ட ஒருவன் போலவே கடவுளுக்கும் உணவு படைக்கப்பட வேண்டும், வெறுமனே சிறிய அளவில் இல்லாமல். கடவுளும் தெய்வங்களும் தேவர்களும் எப்போதும் வீட்டு பூஜை அறையில் இருப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக வீட்டு முழுமைக்கும் சுற்றி, குடும்பத்தார், விருந்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரைக் கவனித்தும், அவர்களின் பேச்சை செவிமடுத்தும் இருப்பர். குடும்பம் கடவுளின் வீட்டில் வசிக்கின்ற காரணத்தாலும் குடும்பத்தாரின் வீட்டில் கடவுள் வசிக்கவில்லை என்பதாலும், கடவுளின் குரல் வீட்டிளுள்ளவரின் மனசாட்சியாக எளிதில் கேட்கப்படும்.”

குருதேவர் நாம் அனைவருக்கும் சவால் இடுகின்றார்: “உண்மையிலேயே நமது மனநிலையும், முடிவும், சமயமும் எதுவெனில், ‘நாம் கடவுளுடன் வாழுகின்றோமா, அல்லது கடவுள் எப்பொழுதாவதும் ஒருமுறை நம்மை பார்க்க வருகின்றாரா? வீட்டின் அதிகாரப்பூர்வ ஆள் யார்? சமயப்பற்றில்லாத, பேதமை நிறைந்த, சர்வாதிகாரி ஒருவரா? அல்லது வீட்டின் அனைவரும், முதியர் உட்பட, தாம் கடவுளின் ஆசிரமத்தில் வாழ்வதாக தம்மை ஒப்புக் கொடுத்து விட்டக் காரணத்தால் தலைகுனிந்து வணங்கும் கடவுளா? இதுவே மதம். இதுவே ஈஸ்வரபூஜனம்.”