image

ஆசிரியர் பீடம்ஆசிரியர் பீடம்

இந்துப் பயிற்சிகளின் நோக்கம் இந்துப் பயிற்சிகளின் நோக்கம்

______________________

தர்மம், சேவை, பூஜை மற்றும் இராஜயோகம் ஆகிய எல்லா ஆன்மீக முயற்சிகளின் சாரம் மனதைத் தூய்மைச் செய்வதே ஆகும். தர்மம், சேவை, பூஜை மற்றும் இராஜயோகம் ஆகிய எல்லா ஆன்மீக முயற்சிகளின் சாரம் மனதைத் தூய்மைச் செய்வதே ஆகும்.

______________________

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

image

Read this article in:


English |
Hindi |
Tamil |
Spanish |
Gujarati |


இந்து மதப்பயிற்சிகளை வழங்குகையில், பெரும்பாலும் வெறும் சடங்குகளே விவரிக்கப்பட்டு அதன் குறிக்கோள் அறவே இல்லாமலும், அப்படி இருந்தால் மிக அற்பமான அளவிலேயே விளக்கப்படுகின்றது. பழங்காலத்தில் இது பயன்பாடுள்ள ஒன்றாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று மக்கள் தாம் செய்யும் பயிற்சிகளின் தெளிவான காரணத்தையும் உள்நோக்குடைய பதில்களையும் கேட்கின்றனர். நமது தேடலுக்கு நான்கு பாரம்பரியப் பயிற்சிகள் விடையளிக்கின்றன. 1) இந்துக்கள் தர்மத்தைப் பின்பற்றும்படியும் மற்றவர்களை துன்புறுத்துவது, திருடுவது மற்றும் பொய்சொல்வது ஆகிய அதர்மக் காரியங்களிலிருந்து விலகியிருக்கவும் போதிக்கப்படுகின்றனர். 2) தன்னலமற்றச் சேவை, அடிக்கடிச் செய்யப்பட வேண்டும். 3) வீட்டு பூஜைமாடத்தில் தினசரி வழிபாடு செய்தல் அல்லது கலந்துக் கொள்ளல், மற்றும் வாரம் ஒருமுறை அருகிலிருக்கும் கோயிலில் வழிபடுதல். 4) ஆழமான தியானங்கள் உடைய இராஜ யோக ஒழுக்கங்கள் மிகவும் பக்தியுடையவர்களுக்கான தினசரி பயிற்சிகளாக இருக்கின்றன.

எதனால் இந்தப் பயிற்சிகள் முக்கியம் ஆகின்றன? மேற்கத்திய நம்பிக்கைகளில் மதப் பயிற்சிகள் நல்ல ஒரு பாதையை வரையறுத்து அதன் மூலம் ஒருவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஆனால் இந்து மதத்திலும் ஏனைய கீழை தேச மதங்களிலும் இந்தக் காரணங்கள் மதப் பயிற்சிக்கான நோக்கம் ஆகாது.

மேல்கண்ட கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பிக்கையில், இந்துமதத்தின் அதி அடிப்படை நம்பிக்கையில் ஒன்றான மனிதனின் தெய்வீகம் என்பதை ஆராய்வோம். குருதேவர் சற்குரு சிவாய சுப்பிரமுனியச் சுவாமிகள் இதனை மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்: “உள்ளூராக நாம் இக்கணத்தில் பரிபூரணம் மிகுந்து உள்ளோம், இதனைக் கண்டுபிடித்து, இந்தப் பரிபூரணமாக வாழ்வதே நாம் செய்ய வேண்டியக் காரியம். நமது தெய்வீக ஆற்றலுக்கு வளர்ந்தும் பரிணாமிக்கவுமே நாம் ஜட உடல் ஒன்றில் பிறவி எடுத்துள்ளோம். நாம் உள்ளூராக ஏற்கனவே கடவுளுடன் ஒன்றாகவே இருக்கின்றோம். இந்த ஒருமையை எப்படி உணருவது என்றும் இந்தப் பாதையில் எவ்வாறு தேவையில்லாத அனுபவங்களை உருவாக்காமல் இருப்பதும் என்ற அறிவை நமது மதம் கொண்டுள்ளது.”

ஓர் உவமை இந்தக் கருத்தைச் சித்தரிக்கும். ஒரு குளத்தின் அடியில் பெரிய தங்கக் கட்டிகள் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். குளத்தின் மேல் பகுதியில் காற்று வீசி அலைகள் எழும்பினாலோ, அல்லது சேறு மற்றும் குப்பைகளினால் அசுத்தமடைந்திருந்தாலும், வெளியிலிருக்கும் நம்மால் தங்கக் கட்டிகளைப் பார்க்க முடியாது. தங்கக் கட்டிகள் நமது ஆத்ம தன்மையைக் காட்டுகின்றன; மேல்பரப்பு அலைகள் நமது ஆர்ப்பாட்டமான ஏட்டறிவைக் குறிக்கின்றன; நீரின் மங்கலான தன்மை நமது ஆழ்மன அசுத்தத்தைக் காட்டுகின்றது. ஆத்ம தன்மையையும் அது கடவுளுடன் ஒருமித்து இருப்பதையும் அனுபவிக்க வேண்டின், நமது ஏட்டறிவு சாந்தமாகவும், நமது மனம் தூய்மையாகவும் இருக்க வேண்டும். நாம் உணர்வுநுட்பம் மிகுந்து, பணிவான ஒரு கவனிப்பாளராக இருக்க வேண்டும்.

“இந்து ஆன்மீகப் பயிற்சிகள் முக்கியம் என்பதற்கான காரணம் என்ன?” என்ற வினாவுக்கான விடை அந்த உவமையிலேயே வெளிப்படுகின்றது. நமது மனதின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தின் முக்கியத்துவமே அது. இந்த தாக்கம் மூன்றுநிலைகளில் ஆனது: 1) அவை மனதைத் தூய்மைச் செய்கின்றன; 2)அவை ஏட்டறிவை சாந்தப் படுத்துகின்றன 3) அவை நமது ஆணவத்தை ஆன்மீகப்படுத்தி, இறுதியில் நாம் நமது தெய்வீகச் சாரத்தை அனுபவிக்க உதவுகின்றன. இங்கு நான் இவற்றில் முதலாவதாக உள்ளதையே ஆழமாக பார்க்கவிருக்கின்றேன், ஆனால் மற்ற இரண்டும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் முயற்சிகளுக்கும் சரிநிகர் முக்கியம் என்பது நினைவிருக்கட்டும்.

இந்து கலைக்களஞ்சியத்தில் (இந்திய பாரம்பரிய ஆய்வு ஸ்தாபனம்) ஒரு பதிவு இடம் பெற்றுள்ளது: “சுத்தி என்றால் தூய்மைச் செய்தல் எனப் பொருள். சித்தம் என்றால் மனம். மனதைச் தூய்மைச் செய்வதே (சித்த சுத்தி) எல்லா ஆன்மீக முயற்சிகளும் நாடும் சாரம் ஆகும். சம்ஸ்காரங்கள் எனப்படும் இந்தப் பிறவி அல்லது முந்தியப் பிறவிகளில் நிகழ்ந்த கடந்த காலத்தின் தவறுகள் மற்றும் பிரச்சனையான அனுபவப் பதிவுகளை ஆழ்மனதில் இருந்து நீக்குவது அல்லது தீர்ப்பதுமான செயலே தூய்மைச் செய்யும் காரியமாகின்றது. பொதுவில் சம்ஸ்காரம் எனப்படுவது வாழ்வில் நிகழும் முக்கியமானச் சடங்கு ஒன்றினைக் குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கின்றது. எடுத்துக்காட்டுக்கு விவாக சம்ஸ்காரம் எனப்படும் திருமணம். இந்தச் சடங்கு ஆழமான நேர்மறைப் பதிவுகளை ஏற்பவரின் மனதில் பதியச் செய்கின்றது; குடும்பத்தார் மற்றும் சமுதாயத்தினருக்கு தனது வாழ்க்கையில் நிகழும் மாற்றத்தை தெரியப்படுத்தியும், உள் உலகங்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் நிகழ்கின்றது. ஆனால் இங்கே சம்ஸ்காரம் என்ற வார்த்தை அனுபவங்கள் ஆழ்மனதில் பதியச் செய்யும் சுவடுகளைக் குறிக்கின்றது. இப்பதிவுகளே ஒரு மனிதனின் தன்மையையும் வாழ்க்கையில் அவன் செல்லும் பாதையையும் வடிவமைக்கின்றன.

அதே கலைக்களஞ்சியம் விவரிக்கின்றது, “மனதின் அசுத்தமே சுகத்திற்கும் துன்பத்திற்கும் அடிப்படைக் காரணம், ஆக இவை பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்தை தொடர்ந்து சுழலச் செய்கின்றன. இந்த சுழற்சியை தகர்த்து, துக்கத்திற்கு ஒரு முடிவு செய்வதே இந்து மதத்தின் குறிக்கோளும் தத்துவமும் ஆகும். இந்த குறிக்கோளை அடைவதற்கான தீர்க்கமான வழி சித்த-சுத்தி ஆகும்.” மேல்கண்ட நான்கு பயிற்சிகளாகிய -தர்மம், சேவை, பூஜை மற்றும் யோகம்- கீழ்கண்ட வழிகளில் மனதைச் சுத்தி செய்கின்றன.

தர்மம்: தர்மத்துடன் ஒட்டியிருந்து, மற்றவர்களுக்குத் தீங்கிழைத்தல், திருடுதல், பொய் உரைத்தல் போன்ற அதர்மமான காரியங்களில் இருந்து விலகியிருப்பதால் மனதின் அசுத்தம் அதிகரிக்காமல் இருப்பதை நாம் உறுதிச் செய்வோம்.

சேவை: இது கர்ம யோகம் எனவும்படும். சேவை மனதின் அசுத்தத்தை குறைக்கும் சக்திவாய்ந்த ஒரு கருவியாகும். விவேகச்சூடாமணியில் ஆதிசங்கரர் இவ்வாறு கூறியுள்ளார்: “வேலை மனதினைத் தூய்மைச் செய்வதற்கு உள்ளது, தீர்க்க உண்மையை அறிவதற்கு அல்ல. உண்மையை அறிவது பகுத்தறிவுனாலேயே அன்றி, பல கோடி வேலைகளால் அல்ல.” எனது குரு பக்தர்களை ஒவ்வொரு வாரமும் நான்கு மணிநேரம், மற்றவர்களுக்கு உதவு புரியும் நோக்கில் சேவை செய்யச் சொல்லியுள்ளார்: “அவர்களின் பாரத்தை சற்று விலக்கி விடுவதால், ஒரு வேளை உன்னை அறியாமலேயே நீ உனது மனதில்

இருக்கும் பாரத்தினை விலக்கி விடுவாய். மற்றவருக்கு உதவுவதால் நீ உனது மனக் கண்ணாடியின் அழுக்கை அழித்து, சுத்தமாகத் துடைத்து விடுவாய். இதனை நாம் கர்ம யோகம் எனச் சொல்கின்றோம். சுயநலமிக்க, ஆணவமிக்க கீழ்நிலை வாசனங்கள் பலப்பல பிறவிகளில் உருவாக்கப்பட்டவை உயிரை இருளில் மூழ்கி வைத்திருக்கின்றன. இச்சிக்கல்களைக் களைவது சேவையினால் நிகழ்கின்றது.”

எமது சொந்த இந்து சொற்களஞ்சியம் இவ்வாறு விளக்குகின்றது, “சூக்சுமமான உந்தல்களும் செயல்பாட்டு நடவடிக்கைகளும், முனைப்புச் சக்தியாக இருந்து, ஒருவனுடைய பண்பு மற்றும் எதிர்கால காரியங்களையும் ஊக்குவித்து பின்னர் விருத்தி எனப்படும் எண்ண அலைகளுக்கு காரணமாகின்றன. இரண்டு சம்ஸ்காரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு கலவையை உருவாக்கி, இக்கலவை தனிப்பட்ட ஒவ்வொரு அனுபவப் பதிவின் மொத்தத்தை விட இன்னும் பலம் பொருந்தியதாக உள்ளது. நேர்த்திய இந்து கலைக்களஞ்சியம் என்ற நூலில் சுவாமி ஹர்ஷனந்தா எழுதுதியிருந்தார்: “மனதில் பலமாக பொதிந்திருக்கும் ஒரு பதிவே வாசனம். அது மிகப் பலம் கொண்டுள்ளதால், அது மனதில் எழும்பொழுது, மனிதன் ஒருவன் அதன் பின்விளைவுகளை சிந்திக்காமல் செயல்பட உந்தப்படுகின்றான்.” வாசனங்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கலாம். நாம் சேவையின் மூலம் எதிர்மறையானவற்றை மென்மையாக்க முயல்கின்றோம்.

பூஜை: நமது மூன்றாவது முக்கியப் பயிற்சி கோயில் அல்லது வீட்டு பூஜை மாடத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது ஆகும். இதனால் பிராணன் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்து மனம் தூய்மைச் செய்யப்படுகின்றது. பூஜை மற்றும் ஹோமத்தின் இந்த நோக்கம் பெரும்பாலும் பேசப்படுவது கிடையாது. பூஜை மூலமாக தெய்வத்திற்கு பிராணனானது பழங்கள், சமைத்த உணவு, தண்ணீர், வாசனை திரவியம், மணமிக்க மலர்கள், பால் முதலியன மூலம் செலுத்தப்படுகின்றது. பிறகு இறுதி ஆரத்தியின் பொழுது, அந்த தெய்வமும் அதனுடன் இருக்கும் உதவி தேவதைகளும் அந்த பிராணனை மீண்டும் பக்தர்கள் ஒவ்வொருவரின் ப்ரபா மண்டலத்தினுள் திருப்பி பாய்ச்சி விடுவதால், ஆழ்மனச் சிக்கல்கள் தூய்மைச் செய்யப்படுகின்றன. இவ்வாறாக ஆசீர்வதிக்கப்பட்ட பக்தர் மிக உன்னத உணர்வுகளுக்கு உந்தப்பட்டு, மனச் சுமை குறைக்கப்படுகின்றார்.

அக்கினி தேவன், குறிப்பிட்ட தெய்வத்திடம் ஹோம அர்ப்பணிப்புகளைத் தூய ரூபத்தில் கொண்டு சேர்த்ததும், அத்தெய்வம் அந்தப் பிராணனையேக் கொண்டு அங்கே வந்திருப்பவர்களை ஆசீர்வதிக்கின்றது என பெங்களூருவின் கைலாச ஆசிரமத்தைச் சேர்ந்த ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி அவர்கள் தனது மூன்று பூஜாரிகளால் விரிவான ஹோமம் ஒன்று எமது ஹவாயி கோயிலில் செய்யப்பட்டப் பின் விளக்கிக் கூறினார். இவ்வாறான ஆசீர்வாதங்கள் பெரும் வாழ்க்கை மாற்றங்களைக் கூட ஏற்படுத்தும் என குருதேவர் கண்டுள்ளார்: “பல பிறவி கணக்கில் சேர்ந்துள்ள கர்மவினைப் பலன்களையும் மாற்றி, பல நூற்றாண்டு காலமாக உருவாக்கப்பட்டு இப்போது விளையக் காத்து, விதைகளாக இருக்கும் சூழ்நிலைகளை சுத்தமும் தெளிவும் படுத்தும் ஆற்றல் நமது தெய்வங்களின் கோயில் தரிசனத்தில் உள்ளது. எதிர்காலத்தில் இவை தோற்றம் பெறுவது உயிரின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாத பட்சத்தில், தெய்வங்களின் அருளினால், இந்த விதைகள் நீக்கப்படலாம்.”

இராஜ யோகம்: தனது யோக சூத்திர நூலில் ரிஷி பதஞ்சலி இராஜ யோகத்தின் சுத்திகரிப்பு ஆற்றலை மிகவும் புகழ்ந்துப் பேசியுள்ளார்: “யோகத்தின் [எட்டு] அங்கங்கள் யாவும் பயிற்சி செய்யப்படுகையில், அசுத்தங்கள் சுருங்கி, ஒளிபொருந்திய அறிவு தோன்றுகின்றது, பகுத்தறிந்து பேதம் காணும் நிலைக்கு இடப்படுகின்றது.” இவர் தவத்தின் (தவம் இரண்டாவது அங்கமாகிய நியமத்தின் ஒரு பகுதி) சுத்தி செய்யும் ஆற்றலை உயர்த்தி காட்டுகின்றார். திருவள்ளுவரின் திருக்குறள் இந்த உள்நோக்கை வழங்குகின்றது: “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.” இந்தக் குறள் இமயமலைக் குகைகளில் முள்தாவரங்களை உணவாக்கி உயிர்வாழ் அல்லது கடுங்குளிர் நீரில் குளிக்கும் யோகிகளை நமது மனக்கண் முன்னே கொண்டு வருகின்றது. தவம் இவ்வாறான கடுமையான பயிற்சிகளை உள்ளடக்கி இருப்பினும், எல்லாராலும் செய்யப்படக் கூடிய சுலபமானவையும் உள்ளன.

தான் மிகவும் விரும்பி காக்கும் பணம், நேரம் அல்லது ஜடப்பொருள் போன்ற ஒன்றை மேலான நன்மை ஒன்று உருப்பெறும் நோக்கில் கைவிடுவது தியாகம் ஆகும், இது ஒரு சுலபமான தவம். தியாகம் தான் கொண்டுள்ள சுயநல மறுப்பு கூறுகளினால் மற்றைய அறச்செயல்களில் இருந்து வித்தியாசப்படுகின்றது. ஒரு நாள் உபவாசம் இருந்து, சேமிக்கப்படும் பணத்தை ஓர் இந்து அறக்கட்டளைக்கு வழங்குவது, மற்றும் ஆடம்பர விடுமுறையை விடுத்து எளிய ஒன்றை மேற்கொண்டு மிச்சப்படும் பணத்தை ஓர் அறக்காரியத்திற்கு வழங்குவது போன்றவை எனக்கு பிடித்த உதாரணங்கள் ஆகும். செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வதும் ஒரு வகையான தவமே. கோயிலில் தெய்வத்தின் முன்னே 108 முறை விழுந்தெழுதலும், கோயிலைச் சுற்றி நடைப் பிரதட்சணம் மற்றும் முருகப்பெருமானுக்கான காவடி போன்றவையும் இதில் அடங்கும். “தவம் ஒரு நெருப்புக் குளியல். இதன் ஒளிமிக்க கதிர்கள் முடிந்த பலப்பிறவிகள் மற்றும் தற்போதைய வாழ்க்கையில் சேர்ந்த மாசுக்களை நீக்குகின்றது. அறியாமை, சந்தேகம், மன்னியாமை மற்றும் சனாதன தர்மத்தின் உண்மைகளை அறியாத தொடர் சுயமாயைகளில் இருந்து உயிர்களைக் கழுவித் தூய்மைச் செய்கின்றது” என குருதேவர் விவரித்துள்ளார்.

முறையாகச் செய்யப்பட்ட இந்துப் பயிற்சிகள் நம் மனதின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, நமது உணர்வுநிலைகளை மாற்றி அமைக்கின்றன என்ற உண்மை நமக்கு சந்தோஷம் அளிக்கின்றது. மனதைச் சுத்தி செய்து, ஏட்டறிவை அடக்கி மற்றும் ஆணவத்தை ஆன்மீகமாக்குவதால் நாம் வளர்ந்தும் பரிணாமித்தும், இறுதியில் நமது சுய ஆன்மீகத் தன்மையையும் அஃது கடவுளுடம் ஒருமித்து இருப்பதையும் அனுபவிக்கின்றோம். “உலகப் பற்றுதல்களும், மனதின் அசுத்தங்களும் நீங்கும்பட்சத்தில், ஆங்கே ஆத்ம தரிசனம் காணப்படுகின்றது” என எமது பரமகுருவாகிய ஶ்ரீலங்காவின் யோகசுவாமிகள் இந்த நடைமுறையை விளக்கியிருந்தார்.