சொர்க்கமும் நரகமும் நமக்கு உள்ளேயே இருக்கும் மனநிலைகளே

மனதைச் சுத்தம் செய்து, எண்ணங்களின்  ஆதிக்கத்தைக் குறைத்து, ஆன்மீக நிலைகளை நிறுவி நிலைபடுத்திக் கொள்ளும் வழிமுறைகளை இந்துமதம் வழங்குகிறது

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

பரந்த ஒரு கேள்வியுடன் தொடங்குவோம்: “ஒரு மதத்தை நம்புபவர்—மதம் சார்ந்தவர்—மேலும் ஒரு மதத்தை நம்பாதவர்—மதம் சாராதவர்—இவர்களைத் தனித்துவப்படுத்துவது என்ன?” மதம் சார்ந்த ஒருவர், ஒவ்வொருவருக்கும் ஆத்மா எனும் ஒன்று இருக்கிறது, அது மரணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து  உயிர்த்து இருக்கிறது  என நம்புகிறார். மதம் அற்ற ஒருவரோ, உடல் இறந்தால் அதுவே முடிவு, பூத உடலின் மரணத்திற்குப் பின் எதுவும் நிலைத்திருப்பதில்லை என்று பொதுவாக நம்புகிறார். 

இன்னும் சற்று ஆழமாகப் போகிறோம்: மதம் சார்ந்த ஒருவர், மரணத்திற்குப் பின்னர் ஆத்மாவிற்கு என்ன நிகழ்கிறது என்பது தனி ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை ஒட்டி உள்ளது என்று நம்புகிறார். சரியாக, நெறியாக வாழ்ந்திருந்தால், அந்த ஆத்மா சிலர் சொல்வது போல சொர்க்கம் எனப்படும் இடத்துக்குச் செல்கிறது. நெறியின்றி வாழ்ந்திருந்தால், அது நரகம் என கூறப்படும் ஒன்றை அனுபவிக்கிறது.

இந்து பார்வை

இந்து மதமும் இவ்வாறான சில நம்பிக்கைகளைப் பகிர்ந்துக் கொள்கிறது. ஆம், ஆத்மா உடலைத் தாண்டி நிலைத்திருக்கிறது; மரணத்திற்குப் பின் சொர்க்கம் மற்றும் நரகம் என்று ஒப்பிடத் தக்க அனுபவங்கள் உள்ளன. ஆனால் ஒரு தனித்துவமான, ஆழமான கருத்தையும் சேர்த்து கொண்டுள்ளது: அவை வெறும் மரணத்திற்குப் பின் மட்டும் செல்வதற்கான இடங்கள் மட்டுமல்ல; அவை இப்பொழுதே, இங்கேயே நாம் அனுபவிக்கக்கூடிய மனோநிலைகளாகவும் இருக்கின்றன. 

உதாரணமாக சுவர்க்கம் – சமஸ்கிருதத்தில் ஸ்வர்க்.  அது வெறும் வெகு தூரத்திலுள்ள விண்ணுலகம் அல்ல; மேலோங்கிய உணர்வுநிலை, ஆனந்தம், தெளிவு நிலை; இக்கணத்திலும் கூட கிட்டக் கூடியது. அவ்வாறே நரகம் என்பதும் வெறுமனே ஒரு கொடூர பாதாளம் அல்ல; அது நமது உள் கொந்தளிப்பின் பிரதிபலிப்பாகும். யாரொருவர் பயம், வெறுப்பு, குழப்பம் ஆகியவற்றில் சிக்கியபடியே மரணம் எய்துகையில், அவரின் ஆத்மா அதே உள் நிலையைப் பிரதிபலிக்கும் உலகினுள் ஈர்க்கப்படுகிறது. அமைதி, அன்பில் இறக்கையில், அதையே பிரதிபலிக்கும் நிலைக்கு உயர்வார்கள்.

உயர் மனோநிலையை அணைவது எங்கணம்?

இயல்பான கேள்வி ஒன்று தோன்றுகிறது, “சொர்க்கம் என்பது மனநிலை என்றால், அந்த உயர்ந்த நிலையை இப்பொழுதே எப்படி அடைவது?” இதற்கு இந்து மதம் ஓர் அழகிய கருத்தை வழங்குகிறது: ஆத்ம தரிசனம் – ஆத்மாவை நேரடியாக அனுபவித்தல். ஆத்மா என்பது உயிர்; தரிசனம் என்பது காட்சி, இதில் மறைஞான பார்வைகளும் / தெய்வீக காட்சிகளும் அடங்கியுள்ளன.

நாம் உண்மையிலேயே ஆத்மாவினுள், நமது ஆன்மீக சாரத்தினுள் குதித்து மூழ்கிச் சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்று பாருங்கள். இதை நான்கு அடிகள் ஒரு பயணமாக நினையுங்கள். ஒன்றாம் அடியில் அமைதியான, உள்நோக்குகள் நிறைந்திருக்கும் ஒரு சாட்சிய நிலையை அடைகிறோம்—அமைதிபூர்வ சுயநம்பிக்கை, படைப்பாற்றல், சாந்தம் நிறைந்த இடம். இரண்டாம் அடியில் அனைத்தின் மீதும் நிபந்தனையற்ற அன்பு கொண்டிருக்கும் நிலையில் திளைக்கிறோம். மூன்றாம் அடியில் திறக்கப்பட்டு விடுகிறது மிளிரும் ஜோதி—இங்கே தெய்வங்கள், ரிஷிகள், உயர் வஸ்துக்கள் பற்றிய தரிசனங்கள் சாத்தியமாகின்றன. நான்காம் அடியில் அளப்பரிய, நிசப்த, பிரகாச  உள் ஆகாசத்தில் நுழைகிறோம், இங்கே நமது சுய அடையாளம் கூட அதீதத்தில் கரைகிறது.

பொதுவாக நான் இவற்றை அனுபவிக்காமல் இருப்பது எதனால்?

ஒரு தெளிந்த குளத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் அடியில் பெரிய பெரிய தங்கக் கட்டிகள்—நம் ஆத்மீக இயல்பு—பிரகாசிக்கின்றன. ஆனால் நீரின் மேற்பரப்பு காற்றால் அலைகளாக குமுறிக்கொண்டு இருந்தால் அல்லது நீர் சேற்றினால் கலங்கி போயிருந்தால், அந்த தங்கத்தைப் பார்க்க முடியாது. அலைகள்—நமது பரபரப்பான புத்தி. சேறு சகதி —ஆழ்மனத்தின் குப்பைகள்—பழைய பயங்கள், நினைவுகள், பழக்கங்கள், கவனச் சிதறல்கள். தெளிவாகப் பார்க்க வேண்டின் அமைதி தேவை; தெளிவு தேவை; மனத்தின் சுத்தி தேவை. இவற்றுக்கு நிகராக பணிவும் தேவை—குறைநிறை பாராமல், திறந்த மனதுடன் நம்மை நாமே உற்று நோக்கத் தேவையான சுயஆர்வ உந்துதல்.

மன இரைச்சல்களும் அவற்றுக்கான தீர்வுகளும்

சிந்தனைகளை ஐந்து வகைப்படுத்தி பார்ப்பது உதவிகரமாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். 

  1. தற்கால பிரச்சினைகள்: மன இரைச்சலுக்கு காரணமாயிருக்கும் முதலாவது தற்போது தீர்க்கப்படாத நிகழ்வுகள்—விவாதங்கள், வலியூட்டும் நிகழ்வுகள், உணர்ச்சி பாதிப்புகள். நமது ஆழ்மனம் இவ்வாறான ஞாபகங்களை தொடர்ந்து மேல்பரப்பிற்கு அனுப்பிக் கொண்டு இருந்தால், அவை இன்னும் உணர்ச்சிவசத்துடன், தீர்க்கப்படாமல் உள்ளன என அர்த்தம். இவற்றைப் புறக்கணித்தால் புதைக்கப்படும் அழுத்தம், ஒருவரின் பதட்டம், சஞ்சலம் கொண்ட இயல்பாக உருவாகி விடுகிறது. இவற்றை ஆரம்பத்திலேயே தீர்ப்பது எளிது—சம்பந்தப்பட்டவர்களோடு கலந்து பேசுவது, ஒருவரைக் காயப்படுத்தி இருந்தால் மனமார்ந்த மன்னிப்பு கோருதல், நம்மைக் காயப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு அளித்தல். அந்த உணர்ச்சி நீங்கி போவது ஓர் அனுபவத்தை அமைதியான முடிவுக்கு கொண்டுவர அனுமதிக்கிறது.
  2. முடிந்த விஷயங்கள்: பல வருடங்களுக்கு முன்னர் நடந்த, ஆனால் இன்னும் தீர்க்கப்படாத அனுபவங்கள். இவை அவ்வப்போது வந்து போகும், இது ஒரு நாள் முழுதும் நிலைத்திருந்து நம்மை வருட்டாது, ஆனால் போதுமான அளவு மனதைச் சிதறடிக்கும். அதையொட்டி இப்போது சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவது செயல் அளவில் சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். இங்கு ஒரு பயனுள்ள யுக்தி—ஆழ்மன பதிவிடுதல்: உணர்ச்சிகளைத் தீர எழுதி, அந்தக் காகிதத்தை எரித்து விடுங்கள், உணர்ச்சி சுமையை விட்டொழிக்க மனமார செயல்படுதல். மனப்பூர்வமாகச் செய்தால், அந்த ஞாபகம் இருக்கும், ஆனால் அதன் துன்புறுத்தல் நீங்கி போய் விடும்.
  3. எதிர்காலக் கவலை: மன சஞ்சலத்திற்கான மூன்றாவது காரணம் கவலைப் படுதல் ஆகும். விஷயங்கள் தவறாகப் போய் விடும் எனக் கற்பனைச் செய்து, சிலவேளைகளில் பயந்து போய் விடுகிறோம். இதற்கான மருந்து—என் குரு சிவாய சுப்பிரமுணியசுவாமிகள் போதித்த எளிய உறுதிமொழி பயன்பாடு ஆகும். உதாரணம் சிந்தனை நிகழ்காலத்திலிருந்து அறியாத எதிர்காலத்துக்குச் வேகமாகப் பாய்ந்தால், “நான் இப்போதும் நன்றாக இருக்கிறேன்” என்று நிதானமாக, நிலையாக தங்களிடமே சொல்லிக்கொள்ளுங்கள். கவனம் நிகழ்காலத்தில் மறுபடியும் நிலைகொள்ளும் வரை மீண்டும், மீண்டும் சொல்லுங்கள்.
  4. பெரிய முடிவுகள்: நான்காவது வகை தீர்க்க முடிவெடுப்பது – குறிப்பாக பெரிய வாழ்க்கை முடிவுகள். பல நேரம் நாம் ஒன்றை மீண்டும் மீண்டும் அசை போட்டவாறு எவ்வித முன்னேற்றமும் அடையாமல் இருப்போம். இதனால் அந்த முடிவெடுத்தல் மேலும் ஒரு கவலையாக மாறுகிறது. அதற்குத் தனி நேரம் ஒதுக்குவதே தீர்வு ஆகும்.  உதாரணம், சனிக்கிழமை காலை 10 மணிக்கு அமர்ந்து இந்த விஷயத்தை தீர்க்கப் போகிறோன், போன்ற தெளிவான நேர நிர்ணயம். ஆனால், அதற்கு முன்னரே அது நினைவிற்கு வந்தால், “அதற்கென நேரம் ஒதுக்கி இருக்கிறேன்; இப்போது சிந்திக்க வேண்டாம்” என்று நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
  5. தினசரி சலசலப்பு: ஐந்தாவது அன்றாட வேலைகள், கடமைகள், மின்னஞ்சல்கள், நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக விஷயங்கள் ஆகியவற்றின் சிந்தனைகள். இவற்றை மூச்சுப் பயிற்சியால்—பிராணாயாமம்—அமைதிப் படுத்தலாம். இங்கே ஓர் எளிய முறை: மூச்சை 9 கணக்கு உள்ளிழுத்து, 1 கணக்கு நிறுத்தி, 9 கணக்குகள் வெளியேற்றி, 1 கணக்கு நிறுத்துங்கள். சில நிமிடங்கள் செய்தாலே நரம்பு மண்டலம் அமைதியடையும்; எண்ண ஓட்டம் குறையும்.

ஆழ்மனதைச்  சுத்திகரித்தல்

சிந்தனையைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாக, மனத்தைச் சுத்திகரிப்பது ஏன் அவசியம் ஆகிறது? மனம் ஏன் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏனெனில், இந்தப் பிறவியிலும் கடந்த பிறவிகளிலும் செயல்கள் அதர்மமான சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவை எதிர்மறை சம்ஸ்காரங்களை (பதிவுகளை) உருவாக்கி ஆழ்மனதை போர்த்தியிருக்கின்றன. ஆகவே சித்த சுத்தி இன்றியமையாதது. இந்தியா ஹெரிடேஜ் ரிசர்ச் ஃபெளண்டேஷனின் ‘என்சைக்ளோபீடியா ஆஃப் இந்துயிஸம்’ Encyclopedia of Hinduism (India Heritage Research Foundation) அதைக் கச்சிதமாகச் சொல்கிறது: “மன சுத்திகரிப்பையே அனைத்து ஆன்மிக முயற்சிகளின் சாரம் என அழைக்கலாம்.” அதை எப்படி செய்வது?

முதல் யுக்தி கட்டுப்பாடு ஆகும். மேலும் அசுத்தம் சேர்க்காமல் இருப்பது. அதாவது தர்மப்படி வாழ்தல்—மற்றவரை நோகடிக்காமல் இருப்பது,  திருடாமை, பொய்யுரைதல் தவிர்ப்பு போன்றவை. நாம் கண்ணியத்துடம் வாழும் பொழுதில் குளத்தில் மேலதிகச் சேற்றைக் குவித்துக் கொள்வதை நிறுத்துகிறோம்.

இரண்டாவது வழி சேவை, தன்னலமற்றச் சேவை.  சுய லாப நோக்கமில்லாத, இவ்வாறு புத்தெழுச்சி அளிக்கும் காரியங்களால், நாம் நல்ல சம்ஸ்காரங்களை சேகரிக்கத் துவங்குகிறோம். இவை நம்முடைய பழைய, குறைந்த பயனுள்ள சம்ஸ்காரங்களுடன் கலந்து போய் நமது இயல்பையும் எதிர்காலத்தையும் மெதுவாக மறுவடிவமைக்கின்றன. எதிர்காலத்தில் முழுமையாக அனுபவிக்க வேண்டிய கஷ்டமான கர்ம பலன்கள், இப்போதைய நல்ல சம்ஸ்காரங்களால் இலகுவாகின்றன. செயல்களின் பலனை கடவுளுக்கே அர்ப்பணித்து தன்னலமின்றி நடந்தால், புதிய சிக்கலான சம்ஸ்காரங்கள் உருவாகுவது குறைந்து, நமது ஒட்டுமொத்த கர்ம சுமை சிறிது சிறிதாகச் சுருங்குகிறது.

மூன்றாவது தெய்வ வழிபாட்டின் மூலம், கோவில்களில் பூஜை, ஹோமங்களில் கலந்து கொள்வதனால் கிட்டுகிறது. என் குருதேவர் கவனித்து இருந்தார்: “இந்துக் கோவிலுக்குச் சென்று, நமது சமயத்தின் மகத்தான தெய்வங்களின் தரிசனத்தை ஈர்த்து உள்வாங்குவது, வழிபடுபவரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடக் கூடும். அது ஒருவரது உடலின் உள் பிராண ஓட்டத்தையே மாற்றுகிறது. ஒருவரின் சாட்சியத்தை ஆழ்ந்த சக்கரங்களுக்குள் இழுத்து செல்லும்… அவர் தெய்வத்தை தெரிந்து அன்பு செய்ய ஆரம்பிக்கிறார்; தெய்வமும் அவரை அறிந்து நேசிக்கிறது, அவரின் முழு பரிணாமப் பாதையில் உதவுகிறது, வழிகாட்டுகிறது.”

நான்காவது, எட்டு அங்கங்கள் கொண்ட இராஜயோகம் ஆகும். பதஞ்சலி மாமுனிவர் தனது யோக சூத்திரங்களில், யோகத்தின் எட்டு அங்கங்கள் எவ்வாறு மெல்ல மெல்ல அசுத்தங்களை நீக்கி பிரகாசமான ஞானத்துக்கு இட்டுச் செல்கின்றன என்பதை விவரித்து இருக்கிறார். தவம் கடினமாக இருந்தாலும் சிறந்த முறையில் பயனளிக்கிறது. செய்த தவறுகளுக்குத் தண்டனையாக பரிகாரம் மேற்கொள்ளுவது ஒரு வழக்கமான தவ முறை—கோவிலில் 108 தடவை விழுந்து நமஸ்கரிப்பது, அல்லது கோவிலைச் சுற்றி நடை நமஸ்காரம் செய்வது ஆகியன.

அதற்குப் பின், ஓர் அமைதியான மனம்

இறுதியாக, அந்தக் குளத்தின் தெளிந்த நீருக்குத் திரும்புகிறோம். மனத்தைச் சுத்திகரித்து, புத்தியை அமைதிப்படுத்தி, அஹங்காரத்தை ஆன்மீகப்படுத்துவதன் வழியாகவே நாம் வளர்ந்து, பரிணமித்து, இறுதியில் நமது தங்கமயமான ஆத்ம இயல்பை அனுபவிப்போம். சுத்தமான மனத்துடன் அடிமட்டத்தில் இருக்கும் அந்தத் தங்கக் கட்டிகளை—நமது ஆத்ம இயல்பை—நாம் காண முடிகிறது, கீழ் மனநிலைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு நம்முள்ளே சொர்க்கத்தில் நுழைந்துள்ளோம்.

Leave a Comment

Your name, email and comment may be published in Hinduism Today's "Letters" page in print and online. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top