தியான வாழ்க்கை நமது வெளி வாழ்க்கையை எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் உலகாய வாழ்க்கை எவ்வகையில் நாம் உள்முகமாக செல்வதற்கு உதவுகிறது என்பதை ஆராய்தல்.
சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்
வெளி வாழ்க்கையையும் உள் வாழ்க்கையையும் ஒன்றாக இணையச் செய்திராத மனிதர்கள் நமக்கு தெரியும். உள்முகமாக செல்ல வேண்டி தியானத்தில் அமர்வதற்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தியானத்திற்கு வெளியே, பள்ளிக் கூடம் அல்லது வேலை இடத்தில் இருக்கையில் அதே அளவிலான மனோபலம் மற்றும் கவனக் குவிப்பை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. சராசரி வாழ்க்கையை சிறுமைப் படுத்தவும் செய்கின்றனர் சிலர், “எதுவானால் என்ன” என்ற ஒரு மனப்பாங்கு: “இது அந்த அளவு முக்கியம் இல்லை. உள்ளார்ந்த வாழ்க்கை – அதுதான் முக்கியம். வெளி வாழ்க்கை – இதை எப்படியாவது கஷ்டப்பட்டு சமாளித்தாக வேண்டும்.” இவ்வாறான அணுகுமுறையில் என்ன தவறு உள்ளது?
தவறு எது என்றால், அதே நாம்தான் இருக்கிறோம். ஆங்கே இரண்டு நாம் என்பது இல்லை. தியானம் செய்யும் ஒருவரும் பள்ளிக்கூடம் அல்லது வேலைக்கு செல்லும் ஒருவரும் என்ற வெவ்வேறான நாம் அங்கு இல்லை. ஒரே நாம்தான் இருக்கிறோம் – அதே மனம், அதே உயிர் அல்லது ஆத்மா. தியான சமயத்தில் உள்முகமாக திரும்புகையில் நாம் வேறு ஒருவாரக ஆகி விடுவதில்லை, மேலும் தியானத்திலிருந்து வெளியாகி நமது பொறுப்புகள், தர்மத்தை கவனிக்க வருகையில் மற்ற ஒருவராகவோ ஆகி விடுவதில்லை. உள்ளேயும் வெளியேயும் நாம் அதே ஒற்றை நபர்தான்.
கவனக்குவிப்பு என்பது மனதை ஒரே ஒரு பொருள் அல்லது ஒற்றைச் சிந்தனை மீது ஒன்றி வைப்பது, அதை அங்குமிங்கும் அலைய அனுமதிப்பது இல்லை. நாம் தியானம் செய்யும் பொழுதில் நமது உள்ளார்ந்த குறிகோள்களை தீவிரமாக கவனித்து விட்டு, பின்னர் வெளியே வந்த பிறகு வேலை இடத்திலும் பள்ளிக் கூடத்திலும் நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயலவில்லை என்றால், அது எதிர்விளைவாகி விடுகிறது. ஒரு வாரத்திற்கு தீவிர உடற்பயிற்சி செய்துவிட்டு பின்னர் மூன்று வாரங்களுக்கு செய்யவில்லை என்பதை ஒத்ததே இது. அந்த ஒரு வாரம் நமக்கு ஏதாவது நன்மை செய்யுமா? அவ்வளவாக இல்லை! நாம் உள்ளே சென்று, தியானித்து நமது எண்ணங்களை ஒரு மணி நேரம் வெற்றிகரமாக குவித்து வைத்து விட்டு, பின்னர் பணியிடம் அல்லது பள்ளிக்கூடத்தில் எட்டு மணி நேரம் சிந்தனைகள் அதன் விருப்பத்திற்கேற்ப சிதறி கிடக்க அனுமதிப்போம் என்றால், நமது அந்த ஒரு மணி நேர தியானம் நமக்கு ஏதாவது நன்மை செய்யுமா? கண்டிப்பாக கொஞ்சமே. அந்த உடற்பயிற்சி உதாரணத்தைப் போலவேதான், அதிக பட்ச நன்மை இல்லாமல் போய் விடுகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு, நமது உள் மற்றும் வெளி வாழ்க்கை இரண்டுக்கும் இடையில் முயற்சி தொடர்ந்தாற்போல், நாம் தியானத்தில் செய்வதற்கும் நாம் ஆக்கப்பூர்வமாகவும் உற்சாகத்துடனும் உலகில் ஆற்றும் காரியங்களுக்கும், இருப்பது தேவை. அது போலவே, நாம் நாள் முழுதும் பள்ளி மற்றும் பணியிடத்தில் செய்யும் காரியங்களில் தொடர் கவனம் செலுத்தினோம் என்றால் – அதாவது கவனம் ஒன்றியும், வேலையை நாம் எப்படி செய்கிறோம் என்பது நமக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது என்றாலும் கூட, தன்னால் அலைந்து திரிய முடியும் என்றாலும் கூட மனதை அதற்கு அனுமதிக்காமல் இருப்பின், அப்பொழுது நமது வெளி நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும், மேலும் அதன் மூலமாக நமது தியானங்களுக்கு பலம் கிடைக்கவும் செய்கிறது.
வாகனம் ஓட்டுவதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நமக்கு எவ்வாறு வாகனம் ஓட்டுவது என தெரியும். அவ்வாறு ஓட்டுகையில் நாம் விரும்பும் எதைப் பற்றி வேண்டுமானாலும் நாம் சிந்திக்கலாம். நாம் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்கிறோம்; நமது கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும் நம்மால் அதைச் செய்ய முடியும், பல வேறு விஷயங்களை யோசித்த வண்ணம். ஆனால் நாம் நம்மை அவ்வாறு செய்ய அனுமதிக்காமல், அதற்கு பதிலாக நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ அதில் தொடர் கவனம் செலுத்திக் கொண்டு இருப்போம் என்றால், அதனால் நமது உள் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். அது நாம் அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதற்கு பலம் சேர்க்கிறது. இது தொடர் முயற்சி ஆகும். நாம் வெளி மற்றும் உள் என கோடிட்டுக் கொள்வதில்லை. நமது தியான காலங்களில் பெறப்படும் கட்டுப்பாட்டு வலிமை நமது உணர்ச்சிகள் மற்றும் மனத்திறன்களுக்கு நிலைப்பாடு அல்லது ஸ்திரத்தை வழங்குகிறது. நாள் முழுதும் மனதை கடிவாளமிடுவது நாம் தியானத்தில் நுழைகையில் நமது கவனக்குவிப்பு உறுதியாக இருப்பதற்கு வலிமை சேர்க்கிறது.
வெளி உலகில் நாம் செய்யும் காரியங்களில் மனக்குவிப்புடன் இருந்த பின்னர், நாம் தியானம் செய்ய அமரும் பொழுதில் என்ன நடக்கும்? நம்முடைய முன்னேற்றம் ஒன்றுகூடி அதிகரித்திருக்கும். நாம் தியானத்தின் பொழுதில் நமது மனதை கட்டுப்படுத்தி உள்ளோம், மேலும் வேலை அல்லது படிப்பு காலத்தில் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து இருந்துள்ளோம். ஒவ்வொரு நாளும் நமது மனக்குவிப்பு அதிகரிக்கவே செய்யும். நாம் தினமும் உடற்பயிற்சி செய்கையில் ஒரு தசைநாருக்கு என்ன நடக்கிறது? அது பலம் பெற்றே ஆக வேண்டும். அதற்கு வேறு தேர்வு கிடையவே கிடையாது. அப்படித்தான் உடல் வேலை செய்கிறது. நாம் தியான நேரத்தில் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி இருந்தால், வேலை செய்யும் நேரத்தில் அல்லது பள்ளியில் படிக்கும் நேரத்தில் மனக்குவிப்புக்கான நமது திறன் கண்டிப்பாக அதிகரித்து இருக்க வேண்டும். இது ஒரே மாதிரியாகத்தான் நிகழ்கிறது.
அடுத்தது மனத்திடம் அல்லது மனோவலிமை பற்றி பார்ப்போம். மனோவலிமை என்பது எல்லா சக்திகளையும் ஒற்றை ஒன்றை நோக்கி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து செலுத்துவது என்பதாகும். தினமும் அதிகாலையில் எழுந்து படித்து, அதனால் பரீட்சையில் சிறப்பாக செய்ய விரும்பும் ஒரு மாணவன், அப்படியில்லாமல் தொடர்ந்து தூங்கி விடுவதை உதாரணமாகக் கொண்டு மனோவலிமை குறைவை அறியலாம். விருப்பம் இருக்கிறது, ஆனால் மனத்திடம் போதிய பலத்துடன் இல்லை.
மனோவலிமை என்பது ஓர் ஆர்வமூட்டும் நிகழ்வு. பொதுவாக, நீங்கள் ஒரு பொருளை எவ்வளவு பயன்படுத்துகிறீர்களோ, அது அவ்வளவு குறைந்து போய் விடும். நீங்கள் பணத்தை பயன்படுத்துகையில் வங்கியில் கணக்கு குறைகிறது. நீங்கள் சமையல் அறைக்கு சென்று சிறிது உணவை எடுக்கிறீர்கள், அதை சமைக்கிறீர்கள், சாப்பிடுகிறீர்கள். இதனால் சமையலறை உணவின் அளவு குறைந்து விடுகிறது. ஆள்வினை ஆற்றல் அவ்வாறு இல்லை. எவ்வளவு பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகம் உங்களின் பயன்பாட்டுக்காக அதிகமாக இருக்கும். ஒரு $3,000 வங்கி கணக்கில் இருக்கையில், $2,000 செலவு செய்யப்பட்டதும், கணக்கின் மீதம் $5,000 ஆக அதிகரித்து இருப்பதாக காண்கிறோம். ஏன் இப்படி ஆனது? மனோவலிமை ஒரு தசைநார் போன்றது. எவ்வளவு அதிகம் பயன்படுத்தி இருக்கிறோமோ அவ்வளவு அதிகம், நமது பயன்பாட்டுக்காக, நம்மிடம் அதிகரித்து இருக்கும்.
மனோவலிமையின் மற்ற ஓர் அம்சம் என்னவென்றால், அது விருப்பம் சார்ந்தது. எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, சாட்சியம், சக்தி மற்றும் மனோவலிமை ஆற்றல் ஆகியன ஒரே ஒற்றைப் பொருள்தான், அவை வெவ்வேறானவை அல்ல என்று சொல்கிறார். நாம் விரும்பாத ஒன்றைச் செய்கையில் அது முடிவு அடையாத ஒன்றாக இழுத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறோம். அது வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே எடுக்கலாம் ஆனால் ஒரு மணி நேரம் போல் தோன்றுகிறது. இருப்பினும் நாம் விரும்பும் ஒன்றைச் செய்கையில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் போல் தோன்றுகிறது. ஒன்றில் நாம் அதிக ஆர்வம் கொண்டிருக்கையில் நாம் அதை செய்யும் நோக்கில் அதிக சக்தியை வெளிக்கொணர்ந்து கொள்கிறோம், சுலபமாக செய்வதாக உணர்கிறோம். ஒன்றில் ஆர்வம் குறைவாக இருக்கையில், அதை செய்வதற்கு அதிக கடினமாக இருக்கிறது. நாம் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் பொருந்தி செய்யக்கூடிய ஒரு வழியை நாம் கண்டுபிடிக்கையில், அது மேலதிக களிப்பூட்டுவதாக இருக்கிறது, நாம் இன்னும் அதிக கவனக்குவிப்புடன் காணப்படுகிறோம். நாம் ஆர்வமின்றி இருக்கையில், அதை முடிக்க நீண்ட காலம் பிடிப்பதாக தெரிகிறது, கவனச் சிதறல்கள் ஏராளம் தென்படுகின்றன. நாம் எவ்வளவு எடுக்கிறோமோ, அவ்வளவுக்கு ஆற்றல் / சக்தி பிரவாகம் ஆகிறது; நாம் விரும்பி செய்கையில் சக்தி அதிகரித்து இருக்கிறது.
நாம் நமது மனோவலிமையை எவ்வாறு பலப்படுத்த முடியும்? முதலாவதாக, அதனை வெளி விஷயங்களில் வளர்த்துக் கொள்வது சுலபமானது. வாழ்க்கையை வெளியே உள்ளே என பிரிக்காமல் இருப்பதன் ஒரு சாதகம் இதுவாகும். உள்ளே உள்ளவற்றை மிகத் துல்லியமாகவும் வெளியே உள்ளவற்றில் எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி வைத்திருப்பது பிரிவினை. தியானத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்து, நமது சிந்தனைகளைக் குவிப்பதும் கட்டுப்படுத்துவதும் கஷ்டமாகும், காரணம் அது நுண்ம விஷயம். புலனாகும் ஒரு காரியத்தை சிறப்பாகச் செய்வது மிகச் சுலபமாகும். ஒரு பாடத்தை படித்து, அதன் பரீட்சையில் தேர்வதும் கூட மிகச் சுலபமாகும். காரணம் அது நுண்ம விஷயம் அல்ல. அது சுலபத்தில் புலனாகிறது.
இதனால் நமது மனோவலிமை ஆற்றலையும் நமது கவனக்குவிப்பு திறனையும் வெளியுலக வேலைகளில் ஈடுபடும் பொழுதில் பலப்படுத்திக் கொள்வது சுலபமாகிறது. இதனால்தான் தியானிக்கும் ஒருவருக்கு வெளியுலக வேளைகள் முக்கியம் ஆகின்றன, அவரும் அவற்றை புறக்கணிக்கக்கூடாது. நாம் நமது கவனக்குவிப்பு மற்றும் மனோத்திடத்தை மேம்படுத்திக் கொள்கிறோம், இவை நாம் மனதை அமைதிப்படுத்தும் நோக்கில் உட்காரும் காலத்தில் நமக்கு கைவசம் இருக்கின்றன.
குருதேவர் மனோவலிமை ஆற்றலை பலப்படுத்த நமக்கு ஓர் எளிய யுக்தியை வழங்கி உள்ளார். அவர் போதித்திருந்தார்: “நீங்கள் துவங்கும் ஒவ்வொரு வேலையையும் முடித்து விடுங்கள்.” சுலபமாக தோன்றுகிறது அல்லவா? நாம் அனைவரும் வாழ்க்கையில் துவங்கி பின்னர் கைவிட்டு விட்ட விஷயங்கள் இருக்கின்றன. ஏன்? ஒரு பெரும் காரணம் யாதெனில் உணர்ச்சி வசம் ஆனதுதான், நாம் துவங்குவதற்கு முன்னர் ஆழமாக சிந்திக்காமல் போனதும் ஆகும். ஒரு வேளை நமது நண்பர்கள் அதை செய்து கொண்டிருக்கின்றனர், நமது அண்டை அயலார் செய்து கொண்டிருக்கின்றனர், ஆக நாமும் செய்வோம் என்பதே. இது ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கு போதுமான உத்வேகமாக இருக்க முடியாமல் போகலாம், காரணம் அவர்கள் அதை கைவிடும் பொழுதில், நீங்களும் அவ்வாறே செய்துவிட வாய்ப்பு உண்டு.
நாம் ஒரு விஷயத்தை உணர்ச்சி வசப்பட்டு ஆரம்பிக்க வேண்டாம், காரணம் நாம் அதை முடிக்கும் வரை தொடர்ந்து செய்யாமல் போய் விடுவது மிக இயல்பு, அதனால் ஓர் எதிர்மறை பழக்கமுறை மனதில் உருவாகிவிடும். அதை தவிர்ப்பதற்கு, ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், அதிகப்படியாக சிந்தித்துப் பார்த்து விட வேண்டும், இதனால் அதை முடிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகபட்சமாக்க முடியும். ஒவ்வொரு முறையும் ஒரு செயல் அல்லது நடவடிக்கையை நீங்கள் முடிக்கையில், நீங்கள் அந்த பாங்கை பலப்படுத்துகிறீர்கள், அடுத்து அடுத்து வரும் காரியங்களை முடிப்பதற்கான தளத்தை தயார் செய்து விடுகிறீர்கள் . இவ்வாறான நேர்மறை பழக்கமுறையை உருவாக்கிக் கொள்வது மிகவும் மதிப்பு மிக்கது. மனத்திடம் ஆற்றலை பலப்படுத்திக் கொள்வதற்கு குருதேவரின் இரண்டாவது அறிவிப்பு இந்த கருத்தை இணைக்கிறது: அதை மிகச் சிறப்பாக செய்யுங்கள். அதோடு அவர் நின்று விடவில்லை: நீங்கள் ஆரம்பத்தில் ஏற்பாடு செய்ததை விட இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். இவ்வாறாக நீங்கள் இன்னும் அதிக மனோவலிமையைப் பயன்படுத்துகிறீர்கள், வழமையான அளவைக் காட்டிலும், இது உங்களது மனத்திட ஆற்றலை இன்னும் பலப்படுத்துகிறது.
சுருங்கக் கூறின், வெளி விஷயம் உள் விஷயம் என நாம் கொண்டிருக்கும் எந்த ஒரு பேதமை கருத்தையும் போக்கி விடுங்கள். நமது ஆன்மீக முயற்சியின் பெரும் அளவு முன்னேற்றம் வெளி உலகில்தான் நிகழ்கிறது என்பதை மனதில் வையுங்கள். அங்குதான் நாம் மனக்குவிப்பு செய்யவும் நமது மனோசக்தி ஆற்றலை பயன்படுத்தியும் வருகிறோம். இந்த திறமைகள் மூலமாகத்தான் நாம் தியானத்தில் அமரும் பொழுதில் நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறோம், அகமுகமாக மிக ஆழத்திற்கு செல்வதில் வெற்றி காண்கிறோம்.
உத்தமம் யாதெனில் நாம் நமது கண்களைத் திறந்ததும் தியானம் செய்வதை நிறுத்தாமல் இருப்பதும்; பூஜை முடிந்ததும் வழிபாட்டை நிறுத்தாமல் இருப்பதும்தான். மிக உயர்ந்த பயிற்சியில் நாள் முழுவதும் சாட்சியம் கட்டுப்பாட்டில் இருப்பது என்றாகும், நாம் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் காலத்தில் மட்டும் அல்ல. நமக்கு அத்தகைய தொடர்ச்சி வேண்டும். குருதேவர் அதை இரவு நேர அமலுக்கும் கொண்டு சென்றார். அந்தர் லோகத்திலும் கூட நாம் கூடாத இடத்திற்கு செல்லாமல் இருப்பதால், நமது மன நகர்வு கட்டுப்பாடுகள் நமது கனவு உலகங்களிலும் கூட செயல்பாட்டில் இருக்கின்றன. அது ஓர் உயர்ந்த நிலை, நாம் அதை நோக்கி முயற்சிக்கலாம். தற்போதைக்கு, ஒவ்வொரு கணத்தையும் பயிற்சிக்கு எடுத்து கொள்ளலாம். உங்களது ஆன்மீகக் குறிக்கோள்களை எய்தும் வண்ணம் ஒவ்வொரு கணத்திலும் உங்களுக்கு தேவையான மனோவலிமை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.