உலகமயம் ஆன பூமியில், தனது மத நம்பிக்கையை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியதற்கான தேவையைப் பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதைப் பற்றி சற்று பேசுவோம்.
சத்குரு போதிநாத வேலன்சுவாமி

English |
Tamil |
Kannada |
Hindi |
Spanish |
Portuguese |
Marathi |

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சமயப் பற்றுள்ள பெற்றோர்கள் தனது பாரம்பரியத்தை தன் பிள்ளைகளுக்கு வழங்கி வருவது இயல்பான ஒன்று. தனது குடும்பத்தின் மதக் கூட்டத்தில் தன் பிள்ளையும் சேர்ந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பதும் வழக்கமானதுதான். காலம் மாறி விட்டது. இந்நாளில், குறிப்பிட்ட அளவிலான பெற்றோர்கள் தம்மை ஆன்மீகம் சார்ந்தவர்களாகவும் மதத் தொடர்பு இல்லாதவர்களாகவும் கருதுகின்றனர். பலர் மதமில்லா மனிதத்தை பின்பற்றுகின்றனர். பிறர் தமது பிள்ளைகளின் மதம் சாராத கல்வியில் முழுக்கவனம் செலுத்துகின்றனர், பிள்ளைகள் மத நடவடிக்கைகள் அல்லது வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை, ஏனெனில் தொழில் ரீதி பயன் மதத்தில் இல்லை. சிலர் அடிப்படையிலேயே மதத்திற்கு எதிராக உள்ளனர். குறிப்பாக மேலை நாடுகளில் வெவ்வேறு மதத்திலான இருவர் திருமணம் செய்து கொள்வது இப்பொழுது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் நான் கேள்வி பட்ட விஷயம் ஒன்று. சில பெற்றோர்கள் தான் சார்ந்திருக்கும் சமயத்தின் நம்பிக்கைகளையும் பயிற்சிகளையும் தன் பிள்ளையும் ஏற்றுக் கொள்ளும்படி சொல்வது சரிதான என கேள்வியெழுப்புகின்றனர், ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மீகப் பாதையை தானே கண்டெடுக்க வேண்டும் என்கின்றனர்.
இதற்கென நடைமுறை காரணங்கள் தெரிவிக்கப் படுகின்றன: வீட்டில் சமயத்தைப் போதிக்க நேரம் இல்லாமை, தம் சமயத்தைப் பற்றிய போதிய அறிவு இல்லாமை, மத நடவடிக்கைகளில் வாடிக்கையாக ஈடுபடாமை, தமது சமயத்தைப் பற்றி போதிய சுயமதிப்பு இல்லாமை, மற்றும் தமது பிள்ளைகள் பல்லின பள்ளி சுழலில் சிறப்பாக கலந்துறவாடுவதற்கானத் தேவை.
வீட்டில் சமயத்தைப் போதிக்க விரும்பாத இந்து பெற்றோர்கள், எவ்வாறு அடுத்த தலைமுறையினர் நெறிமிக்க நடத்தை மற்றும் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்குமான கடமைகளின் அடிப்படைகளை பயிலப் போகின்றனர் என்பதை கவனம் செலுத்தி சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறான அறிவுக்கு மதங்களே பல காலம் மூலமாக இருந்துள்ளன. போதிய நேரம் கொடுக்கப்படும் சூழலில், எவ்வாறு சிறுவர்கள் நன்னடத்தை மற்றும் கடமை ஆகியவற்றை தாமாகவே கண்டெடுக்கின்றனர் எனப்தைப் பற்றிய அறிக்கைகளை நீங்கள் இணையத்தில் காணலாம். ஆனால், எனக்கு தெரிந்த, போதிய சுய அனுபவம் உள்ள போதனையாளர்கள் இந்த கருத்தை உறுதியாக நிராகரிக்கின்றனர். பள்ளிகளில் தேர்ச்சி பெறும் நோக்கில் தன் பள்ளிகளின் பல மாணவர்கள் வாடிக்கையாக ஏமாற்றி வரும் செயலைக் கண்டு தாம் திகைப்பும் கவலையும் அடைவதாக அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையெல்லாம் வெற்றி பெறுவது மட்டுமே, நேர்மை எனும் பண்புக்கான முக்கியத்துவம் குறைவுதான்.

நெறிமிக்க நடத்தை பற்றி போதிக்க மதம் சாராத மூலங்கள் இருக்கின்றனவா? “நேர்மறை மனோவியல்” எனும் ஒன்று ஓர் எடுத்துக்காட்டு. நெறி மற்றும் கடமைகளைப் பயில்வதற்கான பரந்த அணுகுமுறைக்காக மதிக்கப்படும் இது, இருபத்து நான்கு பண்பு-பலம் என்பனவற்றை உருவாக்கியுள்ளது, “… மனிதனின் நன்மையியல்பை வெளிக்கொணர உதவும் மனோவியல் கூறுகள், மற்றும் மேன்மை நலம் பொருந்திய வாழ்க்கையை உருவாக்குவதற்கான பாதைகளாக அவை இருக்கின்றன” என அவை விவரிக்கப்படுகின்றன.
பார்க்கவும்: www.viacharacter.org/character-strengths-via 
மதங்கள் எவ்வாறு சிறார்களுக்கு போதனை செய்கின்றன என்ற ஓர் ஆய்வு
மதங்கள் எவ்வாறு போதிக்கப்படுகின்றன என புரிந்து கொள்ள நாம் சமயமிகு பெற்றோரியல்: நவீன அமெரிக்காவில் மதநம்பிக்கையையும் நற்குணங்களையும் முன்செலுத்துவது என்ற 2019 புத்தகத்தை நாம் பார்க்கலாம், எழுதியவர்கள் பேராசிரியர் கிரிஸ்டியன் ஸ்மித் மற்றும் துணை ஆசிரியர்கள் ப்ரிட்கெத் ரித்ஸ் மற்றும் மைக்கல் ராடாலா, இவர்கள் இந்துக்களும் பௌத்தர்களும் உட்பட பல்வேறு மத பிண்ணனி கொண்ட நூற்றுக்கணக்கான தனிநபர்களை நேர்காணல் செய்துள்ளனர். பெரும் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும், பெற்றோர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அணுகுமுறையையே கையால்கின்றனர், தமது பிள்ளைகளை மத ரீதியில் சமூகத்தில் ஈடுபட செய்யும் விதத்தில். ஏறக்குறைய அனைவருக்கும், வாழ்வின் பயணத்தில் ஒருவன் தனக்கு தலைச் சிறந்ததை அடைய தேவையான அஸ்திவாரத்தை அமைக்க உதவுவதால், மதம் என்பது முக்கியம் என்கிறனர்.
 சிறிய ஒரு அளவில், நாங்கள் ஆசியாவில் உள்ள இந்து பெற்றோர்களிடம் சற்று ஆய்வு செய்ததில் பலர் அதே மாதிரி பார்வைக் கோணத்தை கொண்டுள்ளதைக் கண்டோம்: மத பயிற்சிகள் நற்குண பண்புகளை வளர்க்கின்றன மற்றும் அவர்களது பிள்ளைகள் வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடனும் சிறப்பாகவும் கையாள உதவுகின்றன. மதம் என்பது ஒரு பட்டத்தின் கயிறு போன்றுதான் என பெற்றோர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனால் பூமியில் சகஜ வாழ்க்கயுடன் பிணைத்து, கவனமின்மை மற்றும் புறக்கணித்த நிலைக்கு ஆளாகாமல் இருக்கின்றனர். ஒரு பெற்றோர் இந்து மதம் கடந்த பல நூற்றாண்டுகளில் சந்தித்த பல சவால்களை அறிவதனால், பிள்ளைகளுக்கு இந்து மதம் எவ்வளவு மகத்தானது; அதை அழிக்க முடியாது என்பதைக் காட்டும் என்று விளக்கினார். எனது கருத்தில், நமது அடுத்த தலைமுறையினருக்கு இந்து மதம் வழங்கும் பலன்மிக்க யுக்திகள் முக்கியமானவை, அதனால் அவை புறக்கணிக்கப்படக் கூடாது. அவற்றுள் மூன்றை பார்ப்போம்.

நிலையான மகிழ்ச்சியை கண்டெடுத்தல்
பெற்றோர்கள் இயற்கையாகவே தங்கள் பிள்ளைகள் வாழ்வில் வெற்றிகரமாக இருக்க வேண்டுமென குறியாய் உள்ளனர். பலருக்கு, வெற்றி என்பது ஒட்டு மொத்தமாக பொருளாதார வளம் மட்டுமே என வரையறுக்கப்படுகிறது, இது அதிக சம்பளம் வழங்கும், அதிக எதிர்பார்ப்பு உடைய தொழிலினால் அடையப்படுகிறது. இந்த உபாயத்தில் உட்பட்டிருக்கும் இன்னொன்று அதே சம அளவு கல்வி கற்று, சமூகத்தில் நிலை பெற்றிருக்கும் வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்வதாகும். வெற்றி என இவ்வாறு நாம் வரையறுப்பது ஒரு முக்கிய அங்கத்தை புறக்கணிக்கிறது – மகிழ்ச்சியாய் இருப்பது. தொழில் ரீதியில் சாதனைகளும் செல்வ செழிப்பும் தம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என சதா காலமும் நினைத்திருந்து இறுதியில் நிஜம் அதுவல்ல என கண்டறிந்து என்னிடம் பகிர்ந்து கொண்ட பல ஆண்களையும் பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன். நிலையான மகிழ்ச்சி என்பதை நாம் பொருள் உலகில் பெறுவதில்லை என இந்துமதம் போதிக்கிறது. அவ்வாறான அடைவுகள் நிலையில்லாதவை. நமது சுய ஆத்ம இயல்பில், நமது உள்ளார்ந்த, ஆன்மீகத் தன்மையில் வாழ்வதில்தான் நிலையான மகிழ்ச்சி உள்ளது. எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி, இவ்வாறு கூறியுள்ளார்: “மகிழ்ச்சியைக் கண்டெடுப்பதனால் மகிழ்ச்சியாய் இருக்க பயிலுங்கள், மற்றவர்களிடத்திலிருந்து இல்லாமல், ஆத்மாவின் ஆழத்திலிருந்தே பெறுங்கள்.” இதனை அடைவதற்கு, அவர் போதித்தார்: “மற்றவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்துங்கள். மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதன் மூலம் உங்களது மகிழ்ச்சியையும் ஆக்ககரமான மனநிலைகளையும் பெறுங்கள்.” மனநிறைவு என்பது கொடுப்பதினால் வருகிறது, பெறுவதினால் அல்ல என அவர் அறிந்திருந்தார்.
 கோபத்தைக் கட்டுப்படுத்துவது
கோபத்தை விட வாழ்வை நாசமாக்கும் மற்றவை குறைதான். ஆக இந்த பாதகமான உணர்ச்சியின் வெளிப்பாடுகளை குறைக்க கற்றுக் கொள்வதும், இறுதியில் இதனை இல்லாமல் செய்வதும் முக்கியம். கர்மவினைச் சட்டத்தின் ஆழமான புரிந்துணர்வு நமக்கு நடந்து கொண்டிருப்பவை நமக்கு நடக்க வேண்டியவையே என நாம் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது, அதற்காக கோபம் கொள்ளத் வேண்டியதில்லை. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நல்லதும் கெட்டதும் நமது கர்மவினையில் உள்ளதே என நாம் ஏற்றுக் கொள்கிறோம். நமக்கு இப்போது நடக்கும் எதுவாக இருப்பினும் அது தற்கால மற்றும் கடந்த கால வாழ்க்கையில் நாம் புரிந்த காரியங்களின் உருத்தோற்றம்தான்.
மன அழுத்தத்தைக் குறைப்பது
இந்து பிள்ளைகள் பள்ளி பரீட்சை எனும் ரூபத்தில் பெரும் மன அழுத்தத்தை எதிர் நோக்குகின்றனர், இது எட்டு வயது வாக்கில் ஆசிய நாடுகளில் நிகழ்கிறது. இவ்வாறான மன அழுத்தத்தில் அவர்களால் வேலையை சிறப்பாக செய்ய முடியாது அல்லது திறம்பட கற்க இயலாது. ஹத யோகாசன பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் முறையாக செய்யப்படுமானால், நரம்பு மண்டலத்தை சமச்சீராக்கி, மன உளைச்சலைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மற்றுமொரு யுக்தி யாதெனில் தொடர் சுவாசப் பயிற்சி. அடிப்படை விஷயம் யாதெனில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நெஞ்சு சதைகளினால் அல்லாமல் உதரவிதான சதையின் மூலம் சுவாசிக்கும் பயிற்சி பெறுவது. இதுவே இயற்கையான வழி. இப்படித்தான் பிறந்த குழந்தைகள் சுவாசிக்கின்றனர். ஆனால் வாழ்க்கையின் சுமைகளை நாம் மென்மேலும் ஏற்கையில், உதரவிதானம் இறுகி போகிறது, நாம் சுவாசிக்கையில் நெஞ்சை விசாலப்படுத்த முனைகிறோம். உதரவிதானம் நெஞ்சு எழும்புகள் இரண்டாக பிரியும் இடத்திற்கு கீழேதான் உள்ளன. இதன் இடத்தை தெரிந்து கொள்ள, விரல் நுனிகளை உதரவிதானத்தின் மேல் வைத்து இருமல் செய்யவும். விரல்கள் நேரடியாக உதரவிதானத்தின் மேல் இருக்கும் பட்சத்தில், இருமல் செய்யும் பொழுது அவை குதித்து எழும். நீங்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டிய தேவை இருக்கும் எந்த நேரமாகினும், உதாரணத்திற்கு ஒரு கூட்டம் அல்லது பரீட்சைக்கு முன்னர் (அல்லது அது நடைபெற்றுக் கொண்டிருக்கையில்!), உதரவிதானத்திலிருந்து ஆழமாக சுவாசிக்க ஒரு நிமிடத்தை செலவிடுங்கள். இவ்வாறாக சில தடவைகள் செய்வது நரம்பு மண்டலத்தில் உள்ள அழுத்தங்களைப் போக்க வல்ல பிராணாயமத்தின் ஆற்றலை உங்களுக்கு தெளிவுபடுத்தும். நாளடைவில் பல சூழ்நிலைகளில் நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு கருவியாக இது இருக்கும். 
இந்து மூன்று உதாரணங்கள் இந்து மதத்தின் நம்பிக்கைகளும் பயிற்சிகளும் ஒரு தனிமனிதன் இன்னும் மேலும் மகிழ்ச்சியாகவும், மேலும் ஆக்ககரமாகமும், வாழ்க்கையில் மேலும் வெற்றிகரமாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
ஆசியாவில் நாங்கள் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற ஓர் ஆய்வில் கலந்து கொண்ட ஒருவரின் கருத்து இங்கே: “மதத்தை பற்றி பயில்வது மிக முக்கியம் – குறிப்பாக இந்நாளில் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்களை பார்க்கையில். பல வேளைகளில் இந்து மதம் ஒரு சடங்கு பூர்வ ஒன்றாகவே, குறுகிய பார்வையில் பார்க்கப்படுகிறது. பலர் ஒட்டு மொத்த மதத்தையும் பார்க்க தவறி விடுகின்றனர், எவ்வாறு அது மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் – தத்துவ ஞானம், யோகம், ஆயுர்வேதம், மனித நலன், சடங்குகள், வாஸ்து, ஜோதிடம் மற்றும் கலாச்சாரம் – அடக்கியுள்ளது என்பதை. தமது மதம் எவ்வளவு முழுமைத்துவம் உடையது என இந்துக்கள் உணர்ந்தால், கண்டிப்பாக அவர்கள் தானே முன்வந்து சமயத்தைப் போதிப்பர் அல்லது தம் பிள்ளைகளை சமய வகுப்பிற்கு அனுப்பி வைப்பார்கள்.”
எனது குருதேவரின் தைரியமான ஞான செய்தியை விட இந்த இறுதி பாகத்திற்கு சிறப்பானது வேறு ஏதும் இல்லை. சைவ இந்துக்களின் கூட்டத்தினரிடம் பேசுகையில், அவர் கூறினார்: “ஆம் நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை உண்டு: நமது மதத்தை அடுத்த தலைமுறையினர், அதற்கு அடுத்தது, அதற்கும் அடுத்தது என தொடர்ந்து வழங்கிச் செல்வது. எவ்வாறு இதைச் செய்வது? சைவ கல்வி மூலம், மேலும் பல பள்ளிக்கூடங்களைக் கட்டுவதனால். நாம் நமது இளையோருக்கு சிறப்பான முறையில் போதிக்க வேண்டும். இதற்கு மாற்று ஒன்று உண்டேல், அது சைவ சமயம் நாத்திகவாதிகளால் ஆக்கிரமிக்கப் படுவதாகும், கிருஸ்துவ மதத்தால் ஆக்கிரமிக்கப்படுவதாகும், இஸ்லாமிய மதத்தால் ஆக்கிரமிக்கப்படுவதாகும், மேலை நாட்டு சிந்தனை, பொருள்முதல்வாதம் மற்றும் மதமில்லா மனிதம் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்படுவதாகும், மேலும் புது இந்திய சுதந்திரவாத கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அதனால் நமது பாரம்பரியத்தின் வேர்கள் அறுக்கப்படும். நமது நம்பிக்கையானது பிள்ளைகளுக்கு போதிப்பதில் உள்ளது, அந்த பிஞ்சு மனங்கள் திறந்தே உள்ளன, கற்பதற்கு விருப்பமுடன் உள்ளன, ஆனால் அவை தமது பாரம்பரியத்திலிருந்து தூரமாக கவர்ந்து இழுக்கப் படுகின்றன. அவர்களை நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள், அவர்களிடத்து உண்மையான அன்பு செலுத்துங்கள், அவர்களுக்கு சைவ சமயத்தின் பொக்கிஷங்களைக் கொடுங்கள். இதுவே நீங்கள் அவர்களுக்கு வழங்கக் கூடிய பெரும் பரிசு. மற்றைவை யாவும் அழிந்து விடும், மற்றைவை யாவும் மக்கிப் போய் விடும்.”