கஷ்டங்கள் வருகையில் நாம் துவண்டு விடலாம் அல்லது துணிவோடு சந்திக்கலாம். கஷ்டமான காலங்களில் நம்பிக்கையும் பலமும் கொடுக்கும் மூன்று உள்நோக்குகள் இங்கே உள்ளன.

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

வாழ்க்கையில் பெரும் சவால் ஒன்று இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம் என்ற பொதுவான பார்வைக்கோணம் ஒன்று உள்ளது. தினமும் காலையில் வழக்கமாக எழுந்து, வாழ்க்கையினால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இந்த கஷ்டமான காலங்களை எதற்காக எவரேனும் சந்திக்க வேண்டும்? என் குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமிகள், ஒரு வேறுபட்ட பார்வைக்கோணத்தைக் கொண்டிருந்தார். அவர் கூறியிருந்தார், “ நாம் இந்த பூமியில் பிறந்திருப்பது சவால்கள் மூலமாக பரிணாமிக்க வேண்டும் என்பற்காகவே. வேறு எந்த காரணத்திற்கும் அல்ல.” கர்மங்களை அனுபவித்து வாழ்வதனால் நாம் நமது மிருக உணர்ச்சிகள் மற்றும் அறிவுத் தன்மை ஆகியவற்றின் மீது சிறப்பான ஆளுமை பெற்று, நாம் ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்கிறோம். சாந்தமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய குருதேவரின் குறிப்புடன் நாம் இதனை ஒப்பிடலாம். ஓர் அமைதியான இடத்தில் சாந்தமாக இருக்க கற்றுக் கொள்வது சரிதான், ஆனால் இறுதியில் பெருமளவு காரியங்களுக்கு மத்தியிலும் சாந்தமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே நமது தொடர்ச்சியாக சுயக்கட்டுப்பாடுகளை எளிய, தினசரி நடவடிக்கைகளில் கொண்டிருந்து, இறுதியில் கடுமையான கஷ்டங்களை எந்திநோக்குக்கும் காலத்திலும் சாந்தமும் நடுநிலையிலும் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களது சாந்தம் நிலைகுலையாது இருக்குமேயானால், அது ஒரு நிலைத்த பொக்கிஷம் ஆகிறது.

சுயக்கட்டுப்பாடு குறித்து குருதேவர் ஓர் ஆன்மீக உள்நோக்கை கொடுக்கிறார்: நமது மனதில் இருக்கும் ஒன்றே நாம் உலகத்தில் அனுபவிக்கும் ஒன்றாக பிரதிபலிக்கிறது. “அவற்றை நீங்கள் தெரிந்து உள்ளீர்களோ இல்லையோ, உங்களது சொந்த சூழ்நிலைகளை நீங்கள் தொடர்ந்து மாற்றிக்கொண்டேதான் உள்ளீர்கள். உங்கள் மனம் கூட கடந்த வாரம் இருந்ததைக் காட்டிலும் இன்று வித்தியாசமாக உள்ளது. நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு அனுபவங்கள் அதை அவ்வாறு செய்து விட்டன. உங்கள் உள்ளும் உங்களைச் சுற்றிலும் மாறிக் கொண்டே இருக்கும் பல்வேறு விஷயங்கள் மீது உங்களால் நுட்பமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். உங்களாலேயே உருவாக்கப்படும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சரியான கோணத்திற்கு திருப்புவதன் மூலம், எவ்வளவு சீக்கிரம் உங்கள் சூழ்நிலைகள் தமது கோணத்தை திருப்புகின்றன என்பதை நீங்கள் காணலாம். இதுவே சுயக் கட்டுப்பாட்டின் இரகசியம். இதுதான் யோகப் பயிற்சி.  செயல்படுத்தி பாருங்கள், ஒன்றைப்பற்றி கவலைப்படும், சிதறிய சிந்தனைகளை விட்டுவிடுங்கள், ஏனெனில் அவை கட்டுப்பாடு இல்லாத மனத்தின் ஒரு பாகத்தின் பக்க விளைவுகள்தான்.” வேறு மாதிரியாகக் கூறின், யோகக் கட்டுப்பாடு என்பது நமக்கு வெளியே நடப்பவற்றைக் கையாளும் செயலில் மேலும் தேர்ச்சி அடைவது மட்டுமல்லாது, அடிப்படையில் நமது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை ஞானப்பூர்வமாக கையாள்வதும் ஆகும். 

சலசலப்புக்கு மத்தியில் சாந்தம்

ஆதீனத்திற்கு வரும் குடும்பஸ்தர்களை நான் அடிக்கடி சந்திப்பது உண்டு. பொதுவாக இது காலை நேரத்தில், ஏறக்குறைய 90 நிமிட சிவ பூஜையில் அவர்கள் கலந்து கொண்ட பிறகு நிகழும். ஒரு குடும்பத்தில் சிறு பிள்ளைகள் இருந்தால், அப்பிள்ளைகள் ஏற்கனவே நீண்ட நேரத்திற்கு அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டி இருந்துள்ளது. ஆக அவர்கள் என்னை பார்க்க வரும் நேரத்தில், அவர்களது அமைதியாக உட்காரும் திறன் தீர்ந்துபோயிருக்கும். ஒரு குடும்பத்தில் இரண்டு இளம் பையன்கள், நான்கு மற்றும் ஆறு வயது இருக்கும், அந்த அறையைச் சுற்றிச் சுற்றி ஓடியவாறு இருந்தனர். இது தந்தைக்கு அவமானமாக இருந்தது, கடைசியில் அவர் சொல்லியது, 

“எங்களுக்கு பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னர் நான் பலமடங்கு சாந்தமாக இருந்துள்ளேன்.” “சரி, ஆரவாரமானப் பிள்ளைகளைக் கொண்டிருக்கும் காலத்தில் சாந்தமாக இருப்பதுவே சவால் ஆகும்” என்றேன் நான்.

நெறி நூலாகிய திருக்குறளில் இல்லற தர்மம் என்ற அங்கத்தில் சுயக் கட்டுப்பாடு என்ற அதிகாரம் உள்ளது. ஒரு குறள் சொல்கிறது, “ நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.” இதன் பொருள் தெளிவாக உள்ளது. நீங்கள் தனி ஆளாக, தனியாக வாழ்கையில், சுய அடக்கம் கொண்டிருப்பது சுலபம், ஏனெனில் உங்கள் பக்கத்தில் தொந்தரவு செய்ய யாரும் இல்லை. ஆனால், நீங்கள் திருமணமாகி, சிறு பிள்ளைகளை கொண்டு, உத்தியோகப் பொறுப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில், அடக்கம் உடைமை என்பதை அடைவது இன்னும் கஷ்டம்தான். தொந்தரவுகளைச் சந்தித்து வருகையிலும் தொடர்ந்து சாந்தம் பூண்டிருப்பதுதான் குறிக்கோள். நீங்கள் ஒரு குடும்பஸ்தர் என்றால் புத்துணர்ச்சி பெறுங்கள். இக்காரியம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது!

சவால்கள் உனது நண்பன் ஆகும்

சவால்களைச் சந்திப்பதற்கு ஏதுவான மற்றொரு விடயம் வாழ்க்கையின் கிரஹ சுழற்சி நிலைகளாகும். (வேத ஜோதிடம் ஒரு தொழில்நுட்பமான விஷயம் அதனால் இங்கு உள்ள எடுத்துக்காட்டு எளிமையாக்கப் பட்டுள்ளது.) சவால்கள் பல நிறைந்து காணப்படும் கிரஹ நிலை காலங்கள் தீயவை என்றும், சுலபமான, தடைகளில்லாத, எளிதில் வெற்றியடையும் நிலைகள் நல்லவை என்றும் நாம் நினைக்க முயல்கிறோம். உங்களுடைய கிரஹ நிலைகள் தடைகள் இல்லாமல் இருக்கும் நேரங்களில் உலகத்தில் முக்கிய வேலைகளை பூர்த்தி செய்து விடலாம் என்பது ஒரு வகையில் உண்மைதான். ஆனால், கஷ்டங்கள் மிக்க கிரஹ காலங்களின் பொழுது நாம் உள்ளார்ந்த, ஆன்மீக முன்னேற்றம் அடைகிறோம், சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டு அதனால் நமது சுயக் கட்டுப்பாட்டை நாம் பலப்படுத்தி இருப்போம். குருதேவர் ஒருமுறை தனது கிரஹ நிலைகள் மிகச் சிறப்பாக இருப்பதால் தனக்கு சவால்கள் இல்லை என்றும் ஆகவே தனக்கு “எந்த ஆன்மீக முன்னேற்றமும் இல்லை” என விளையாட்டாகக் கூறியது எனக்கு நினைவில் உள்ளது. ஒரு ஜோதிட முறை இவ்வாறான உள்நோக்கை வழங்குகிறது: “இந்த காலத்தில் மேலும் அதிக அளவில் நீங்கள் அகமுகமாக பயணித்து, புதிய விஷயங்களை புரிந்தும் உள்வாங்கியும் கொள்வீர்கள். இதே காலத்தில் நிஜ உறுதிப்பாட்டுடன், ஆழமான அறிவுக்காகவும் சுய ஒழுக்கத்திற்காகவும் மேலோட்டமான விஷயங்களை கைவிட்டு விடுவீர்கள்…. ஆனால், இந்த காலத்தில் உலக விஷயங்களைச் சந்திப்பதற்கு கஷ்டமாகவும், மனச் சோர்வாகவும் இருக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு பலவிதமான கூடுதல் பொறுப்புக்கள் வந்து சேரவும் வாய்ப்புள்ளது.” சோதனைகள் வரும் பொழுது நாம் அவற்றினால் அமிழ்ந்து மூழ்கி விடக் கூடாது; அதே வேளையில், ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் நமக்கு, சவால்கள் முற்றும் இல்லாத வாழ்க்கையும் தேவை இல்லாததுதான்.

உலக அனுபவம் ஈற்றில் ஆன்மீக அனுபவத்திற்கு கொண்டு செல்கிறது.

வார இறுதி நிகழ்வில் ஒன்றில், இந்து பல்கலைக்கழக மாணவர்ககளுடன் கலந்து  ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நான் கேட்டேன், “ மறுபிறவியிலிருந்து விடுபடுவதற்கு, அதாவது மோட்சம் அடைவதற்கு என்ன தேவை?”. சில மாணவர்களின் பதில், “தன்னை அறிய வேண்டும்.”  இது கண்டிப்பாக ஒரு சரியான பதில், ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் ஒருவரை அது இரண்டாவது கேள்விக்கு இட்டுச் செல்கிறது, “அப்படியானால், தன்னை அறிவதற்கு என்ன தேவை?” இதற்கான பதில் அவ்வளவாக அறிந்திருக்கப்படவில்லை: “உலக அனுபவங்கள், ஏராளம் ஏராளம்.”

தனது யோக சூத்திர நூலின் இரண்டாவது அதிகாரத்தின் பதினெட்டாவது சூத்திரத்தில் பதஞ்சலி மாமுனிவர் அனுபவத்திற்கான தேவையை குறிப்பிடுகிறார்: “அனுபவிக்கப்படும் பொருள் ஒளி, செயல் மற்றும் செயலற்ற இயல்புகளையும் கொண்டுள்ளது. அது பூதங்களிலும் இந்திரியங்களிலும் அடங்கியுள்ளது. அதன் நோக்கம் போக அனுபவங்கள் மற்றும் விடுதலையைக் கொடுப்பது.” வேறுமாதிரிக் கூறின், நாம் பூமியில் இருப்பது நேரடியாக முக்தியை நோக்கி செல்வதற்கு அல்ல. நாம் முதலில்  பரந்து விரிந்த கடல் போன்ற உலக நிகழ்வுகளைக் கற்றும் வளரவும் வேண்டும்.  அதன் பிறகே மோட்சம் என்பதைப் பற்றி சிந்திக்கத் துவங்கலாம், பின்னர் முடிந்தால் மோட்சத்தை அடையலாம். உலக நிகழ்வுகளை எதிர்கொண்டு, அந்த அனுபவங்களை சரியான வழியில் சந்தித்து – உதாரணத்திற்கு நமது சுய கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தியவாறு – பின்னர் கடைசியிலேயே நாம் மோட்சத்தை நாடுகிறோம். அனுபவமே பயணம் செல்லும் பாதை என்றாகிறது. 

சிவனோடு திருநடனம் என்ற புத்தகத்தில் குருதேவர் ஆராய்கிறார்: “நமது ஆத்மா எவ்வாறு சிவனிடமிருந்து வேறுபட்டு உள்ளது? நமது ஆத்ம உடலின் மாதிரியும் உருவமும் மூல ஆத்மன், சிவபெருமானை ஒத்து இருக்கிறது, ஆனால் முதிர்ச்சி அடையாமல் இருப்பதனால் அது மூல ஆத்மனிடமிருந்து வித்தியாசப்படுகிறது. சிவம் பரிணாமமில்லா பரிபூரணமாக இருக்கையில், நாம் பரிணாம நடைமுறையில் இருக்கிறோம். ஓம்.”

இந்த வரிகளை ஒட்டிய அவரது விளக்கம் ஆழமாகச் செல்கிறது: “ஆத்மாவின் மர்மங்களை அறிந்துக் கொள்வதற்கு, நாம் ஆத்ம உடலையும் அதன் சாரத்தையும் வெவ்வேறாகப் பார்க்கிறோம். ஆத்ம உடல் என்கிற ரீதியில் நாம் அனைவரும் தனிப்பட்டவர்கள், தனித்துவமானவர்கள், மற்ற அனைவரிடம் இருந்தும் வித்தியாசமானவர்கள், சுயப் பிரகாசம் பொருந்திய ஜோதி வஸ்துவானது  ஒரு பரிணாம செயல்பாட்டில் பரிணாமித்தும் முதிர்ச்சி அடைந்தும் வருகிறது. இந்த ஆத்ம உடல் சிவபெருமானின் இயல்பைக் கொண்டுள்ளது, ஆனால் அந்த மூல ஆத்மனைக் காட்டிலும் குறைந்த பிரகாசம் உடையதால் சிவனை விட வித்தியாமாக உள்ளது, இன்னும் பரிணாமித்து வருகிறது, ஆனால் சிவம் பரிணாமமில்லாத பரிபூரணம் ஆகும். ஆத்ம உடலை நாம் ஒரு கருவாலிக் கொட்டையுடன் ஒப்பிடலாம், அதில் ஒரு பலம் பொருந்திய கருவாலி மரம் அடங்கியுள்ளது ஆனால் இன்னும் முளைக்காத ஒரு சிறிய விதையாகவே உள்ளது. ஆத்ம உடல் அனுபவங்கள் மூலமாக முதிர்ச்சி அடைகிறது, பல பிறவிகள் மூலமாக பரிணாமித்து சிவபெருமானின் பிரகாசத்தை அடைகிறது, இறுதியில் நிர்விகல்ப சமாதியில் சிவத்தை முழுமையாக அறிகிறது. தன்னை அறிந்த பின்னரும் கூட, ஆத்ம உடல் தொடர்ந்து இவ்வுலகிலும் ஏனைய உலகங்களிலும் பரிணாமிக்கிறது,  ஒரு துளி நீர் தனது மூலம், அந்த கடலில் கலப்பது போலவே, தானும் மூல ஆத்மனுடன் கலக்கிறது. ஆம், இந்த இறுதி அடைவு, ஒன்று விடுபடாமல் எல்லா ஆத்மாக்களுக்கும் கிட்டும்”

இந்த உபதேசத்தில் குறிக்கப்படுவது, ஆத்ம உடல், ஆனந்தமய கோஷம், உலக அனுபவங்கள் மூலமாக முதிர்ச்சி பெறுகிறது. இது எப்படி நடக்கும்? மிருக உணர்ச்சிகள் மற்றும் அறிவுத் தன்மை ஆகியவற்றின் மீது மென்மேலும் அதிக கட்டுப்பாடுகளை அடையப் பெறுவதன் மூலமாகவே இது நிகழ்கிறது. இவ்வாறு நடப்பதால் அந்த ஆத்ம உடல் போதுமான அளவு முதிர்ச்சி அடந்து, அதனால் தன்னை அறிய இயலும். 

ஆகையால், அடுத்த முறை நீங்கள் ஒரு சவாலை எதிர்நோக்குகையில், பெரியதோ சிறியதோ என்றில்லாமல், உங்களது புரிந்துணர்வு அதிகரிக்கவும், சுய கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும், ஆத்ம உடலை முதிர்ச்சி பெறச் செய்யவும், இதன் மூலமாக கடந்த நிலையில், உங்களுள்ளேயே இருக்கும் தானான தன்னை அறிவதற்கும் இன்னும் நெருங்கிச் செல்லுங்கள்.