ஒரே கடவுள், பல தெய்வங்கள்

இந்துக் கோயில்களில் காணப்படும் விதவிதமான தெய்வ ரூபங்கள் மற்றும் நமது கோயில்களைப் புனிதமூட்டும் சடங்குகளின் இயல்பு சம்பந்தமான ஒரு வழிகாட்டி

சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள்

 
சமீபத்தில் நான் இலண்டனில் உள்ள என்பீல்ட் நாகபூஷணி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகத்தில் பேசியிருந்தேன். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்தப் பலர் இந்து சமயத்திற்குப் புதியவர்கள் என்பதால், நான் கோயில் ஒன்றின் அடிப்படை அறிமுகத்தை ஒட்டியே துவங்கினேன். இதோ எனது செய்தி.

ஒருவன் முதன் முதலில் இந்துக் கோயில் ஒன்றுக்குச் செல்லும்போது, இந்து சமயத்தில் பல உச்சக் கடவுள்கள் உள்ளனர் என்ற ஒரு கருத்து எளிதில் ஏற்பட்டு விடக்கூடும். இது இயற்கையாக எழும் ஒரு யூகம்தான், ஏனெனில் பல சன்னிதிகளையும் திருவுருவங்களையும் ஒருவன் பார்க்க நேரிடுகிறது. இருப்பினும் இது உண்மை அல்ல. இந்துக்கள் பல தெய்வங்களை நம்பினாலும், எல்லாரும் ஒரே ஓர் உச்சப் பரம்பொருளை மட்டுமே ஏற்கின்றனர். இந்து மதத்தின் மிகப் பழைமையான மறைநூலான ரிக் வேதம் இந்த உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் அடிக்கடி சுட்டப்படுகின்றது. சமஸ்கிருதத்தில்: “ஏகம் சத், விப்ர பஹூத வதந்தி,” இதுவே தமிழில் “உண்மை ஒன்றே, ஞானிகள் அதை பல்வேறாக வருணிக்கின்றனர்.”
 

ஒர் இந்துக் கோயிலில் உச்சப் பரம்பொருள் ஒன்றுக்கும் மேற்பட்ட சன்னிதிகளைக் கொண்டிருப்பது அபூர்வமான ஒன்று கிடையாது. இந்த ஒவ்வொரு சந்நிதியிலும் கடவுள், ஆணாகவும், பெண்ணாகவும், ஆணும் பெண்ணுமாகவும் , நடனமாடுபவராகவும், ஆசீர்வதிப்பவராகவும் வித்தியாச வித்தியாசமானத் தோற்றங்களில் காண்பிக்கப்படுகிறார். என்பீல்ட் கோயிலின் மூலஸ்தானத்தில் நாம் உச்சப் பரம்பொருளை, நாகபூஷணி அம்பாள் என்ற தோற்றத்தில் காண்கின்றோம். இது இலங்கையின் வடக்கு தீபகற்பத்தில் உள்ள நைனாத்தீவில் காணப்படும் பாரம்பரியமாகும். இலண்டனில் உள்ள இந்தக் கோயிலில், உச்சப் பரம்பொருள் மேலும் நான்கு தோற்றங்களிலும் பிரதிநிதிக்கப்பட்டுள்ளது: சிவலிங்கம், நடராஜப் பெருமான், தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர். இதன் நேர் ஒப்பீட்டை நாம் ஒரு கிருஸ்துவ சர்ச்சில் பார்க்கலாம், அங்கே ஜீசஸ் ஒரு சிலுவையிலும், மாட்டுக் கொட்டிலிலும், தனது தூதுவர்களுடனும் என காணப்படுகிறார். ஜீசஸ் ஒரே ஓர் பிரபுதான், ஆனால் வித்தியாசமான தோற்றங்களும் அதன் அர்த்தங்களும் உண்டு. அவரது பலபல ரூபங்களைப் பார்த்து, நாம் பல்வேறு கிருஸ்துவப் பிரபுக்கள் இருப்பதாக முடிவு செய்வது இல்லை.
 

ஆபிரகாமிய மதங்களைப் போலவே, இந்து மதமும் கடவுள் பல தெய்வங்களை பல்வேறு தொழில் நிமித்தம் படைத்துள்ளார் என நம்புகிறது. ஆபிரகாமியப் பாரம்பரியங்கள் அவர்களை தேவதூதர்கள் என்கின்றன, இந்துக்களோ அவர்களைத் தேவதைகள் அல்லது தெய்வங்கள் என்கின்றனர், அதே சமயத்தில் உச்சக் கடவுள் என்று தவறாகக் கொள்ளாதவாறே. பெரும்பாலான இந்துக் கோயில்களில் சிறிய சன்னிதிகள் இத்தகு தேவர்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, என்பீல்ட் கோயிலில், கணேசர், முருகன் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியோருக்குச் சன்னிதிகள் உண்டு. இந்த தேவதைகள் மூல மூர்த்தியைக் காட்டிலும் இரண்டாம் பட்ச நிலையிலேயே இருக்கின்றனர், ஆபிரகாமிய நம்பிக்கைகளில் தேவதூதர் மிக்கேல் எவ்வாறு கடவுளுக்கு இரண்டாம் பட்சத்தில் உள்ளாரோ அவ்வாறே இதுவும்.

இலண்டனில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்ச்சுகள் தேவதூதர் மிக்கேல் திருச்சபை என பெயரிடப்பட்டுள்ளன. யார் தேவதூதர் மிக்கேல்? அவர் ஒரு புனிதர் அல்ல ஆனால் தேவதைகளில் தலைமையானவர், சேனைக்கும், கடலோடிகளுக்கும், துன்பத்தில் உள்ளவர்களுக்கும் புரவலர் ஆவார். மேலும் மூன்று தேவதூதர்கள், ரபேல், கபிரியேல், யூரேல், அடிக்கடி பெரிதும் போற்றப் படுகின்றனர்; இலண்டனில் ரபேல் மற்றும் கபிரியேல் இருவருக்கும் என அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. சில யூத பாரம்பரியங்களில் பத்து தேவதூதர்கள் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள், இந்து தேவதைகளைப் போலவே, கடவுளுக்கு உதவி புரிபவர்களாக இருக்கின்றனர், குறிப்பிட்டப் பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றனர். தேவதூதர் மிக்கேல் அல்லது மேரி மாதா போன்றோரை வழிபடும் ஒரு கிருஸ்துவர் அல்லது யூதர் இரண்டாம் பட்ச உச்சக் கடவுளை வழிபடவில்லை, மாறாக கடவுளின் அருளில் திளைத்திருக்கும் ஓர் உயர்ந்த பொருளையே ஆராதிக்கின்றனர். இவ்வாறே, ஓர் இந்துக் கோயிலில் நாம் ஒரே ஒரு கடவுளையும் அதே வேளை ஆசீர்வாதங்களும் தெய்வீகமும் பொருந்திய பல தேவதைகளையும் கொண்டுள்ளோம், தம்மைப் படைத்த பரம்பொருளுக்கு இவர்கள் உதவியாளர்களாக இருக்கிறார்கள்.
 

இந்துக் கோயிலில் கடவுள் மற்றும் தெய்வங்களின் இயல்பை புரிந்துக் கொள்ள மூன்றாவது ஒரு காரணியையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் என்பது, ஒற்றை,
ஓரின/ஒருபடித்தான சமயம் அல்ல; இது ஒரு பல்கூட்டு மதக் குடும்பம், ஒன்றை ஒன்று ஒத்திருந்தாலும் அதேவேளையில் ஒன்று மற்றொன்றிலிருந்து வித்தியாசப்பட்டுள்ளது.
 

மிகவும் வெளிப்படையானது எதுவெனில், அதன் மூன்று தலையாயத் தொகுதிகள் பரம்பொருளை வித்தியாசமான பெயர்களில் வழிபடுகின்றன. சைவர்களுக்கு கடவுள் சிவன். வைணவர்களுக்கு கடவுள் விஷ்ணு; சாக்தர்கள் சக்தியை உச்சப் பொருளாகப் போற்றுகின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கும் கோயில்களில் இந்த பாரம்பரியங்கள் ஒன்றுக்கு ஒன்று மேற்காவு செய்துள்ளன. ஆக, சைவ பாரம்பரியத்தைச் சார்ந்த இந்த என்பீல்ட் கோயிலில், வைணவ இந்து பாரம்பரியத்தின் முழுமுதல் தெய்வமாகிய விஷ்ணு பெருமானுக்கு ஒரு பெரும் சன்னிதி உண்டு. அண்ணியர்களுக்கு இவ்வாறாகிய உச்சத் தெய்வங்களின் இருப்பு ஒரு சவாலாக இருப்பினும், அவை எதைப் பிரதிநிதிக்கின்றன என்பது இந்துக்களுக்குத் தெரியும், ஆகையால் அனைத்தின் உள்ளடங்களையும் மகிழ்வுடன் நோக்குகின்றனர். அனைத்தையும் அரவணைக்கும், நெகிழ்திறம் கொண்ட இந்த மதக்குடும்பத்தில், சில கூரியக் கோடுகளே உள்ளன.
அதே வேளையில் மிகவும் கண்டிப்பான வைணவர்கள் தமது கோயிலில் சிவபெருமானது திருவுருவத்தை தமது கோயிலில் வைத்திருக்க மாட்டார்கள். மேலும் அதி பாரம்பரியம் காக்கும் சைவர்கள் தம்மிடத்தில் கிருஷ்ணரை அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த கலப்பு இந்து மதத்தின் நான்காவது பெரிய தொகுதியான, மேலோங்கியிருக்கும் ஸ்மார்த்த சம்பிரதாயத்தினால் வளர்க்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போக்குடைய இந்த தத்துவம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட இந்து நீரோடையில், சுயவழிபாட்டு மாடத்திலும், பொதுக்கோயில்களிலும் பரம்பொருளின் எல்லா மூன்று பெரும் தோற்றங்களாகிய – விஷ்ணு, சிவன், சக்தி- மட்டுமல்லாது, இரண்டாம் பட்ச தெய்வங்களாகிய கணேசர், சூரியர் மற்றும் முருகன் போன்ற குறிப்பிட்ட தேவதைகளும் நிறுவப்படுகின்றன. இங்கே அனைவரும் ஓர் சகுண பிரமத்தின் சரிநிகர் பிரதிபலிப்பு என பார்க்கப்படுகின்றனர், எவர் ஒருவரையாவதும் உச்சப் பொருளாக வழிபடலாம். இவ்வாறான கடுமுனைப்பு ஒன்றிணைக்கும் படலத்தில், ஏசுகிருஸ்து, மேரிமாதா, முகமது அல்லது புத்தர் ஆகியோரும் அவர்களது மாடத்தில் காணப்படலாம்.

இந்துக்கள் அறிந்து மகிழும் மற்றொரு நுட்பம், இந்து அல்லாதவருக்கு புதிராக இருப்பது யாதெனில் பாலினம். தத்துவார்த்தமாக கடவுள் பால் குணத்திற்கு அப்பாற்பட்டு இருக்கையில், அவன்/அவள் வழக்கில் ஆண் அல்லது பெண் அல்லது இரண்டும் கொண்டதாகப் பிரதிநிதிக்கப்படுகிறார். ஆக பெண் தேவதைகள் சாக்த மதத்தில் மட்டுமின்றி, வைணவம் மற்றும் சைவ மதத்திலும் போற்றப்படுகின்றனர், வித்தியாசமான பெயர்களிலும் தோற்றங்களிலும். இவ்வாறே என்பீல்ட் கோயிலில் நாகபூஷணி அம்மனாக (சக்தி) உச்சப் பரம்பொருள் வழிபடப்படுகின்றது, பல சிவ ரூபங்களாகிய நடராஜர் மற்றும் சிவலிங்கம் சுற்றியிருக்கையில். பிரிந்திருக்கும் சன்னிதிகள் இருப்பினும், சக்தி/சிவன் தத்துவார்த்தமாக ஒரே, பிரிக்கப்பட முடியாத ஒற்றைப் பொருள் என்பது புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

புனிதமூட்டும் சடங்குகள்

நமது இரண்டாவது தலைப்பு ஒரு கோயிலுக்கு உயிரும் ஆன்மீக ஆற்றலும் வழங்கும் சடங்குகளின் தன்மையைப் பற்றியது. சமஸ்கிருதத்தில் இதனை கும்பாபிஷேகம் என்பர், சில வேளைகளில் “பெரிய” என்ற பொருளுடைய மஹா என்ற வார்த்தை சேர்க்கப் பட்டிருக்கும். கும்பாபிஷேகம் என்பது கும்பம், நீர்க்குடம் மற்றும் அபிஷேகம், கோயிலின் சிகரத்தில் ஊள்ள செப்புத் தூபிகளுக்கு புனிதமூட்டப்பட்ட நீரூற்றும் சடங்காகும். கும்பாபிஷேகம் என்பது ஒரு புதுக் கோயிலை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பது மற்றும் ̀பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோயில் புரனமைக்கப்பட்டு, பெருமளவில் சுத்தமும் புதுமையும் ஆக்கப்பட்டப் பிறகு நிகழும் சடங்காகும்.

இவ்வாறான சடங்கிற்கு புனிதமூட்டுதல் என்றும் பொருளுண்டு. இவ்வாறான ஆசீர்வாதம் புனிதமாக இருக்க வேண்டின், கடவுளின் வருகை கண்டிப்பாக நிறுவப்பட வேண்டும். ஒரு மஹாகும்பாபிஷேக நிகழ்வில், பூஜாவிதானங்களும் புனித ஓமச் சடங்குகளும் இதற்கெனவே உருவாக்கப்பட்ட தற்காலிக யாகசாலையில் நடைபெறும். பல மதங்களில் அக்னி அனேக வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் சுவர்க்க தேவலோகங்களில் காணப்படக் கூடிய ஒன்று என அக்னி கருதப்படுகின்றது. நெருப்பு ஏற்றி, புனித மந்திரங்கள் செபித்து, மணி அடித்து நாம் உள்உலகங்களில் வசிப்பவர்களை வரவழைத்து வந்திருக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதம் கோருகின்றோம். இந்த ஆசீர்வாதங்கள் புனித ஹோமகுண்டத்திற்கு அருகில் இருக்கும் கும்பங்களில் நாள் கணக்கில் மேன்மேலும் சேர்ந்து அதிகரிக்கின்றன. கடைசி நாள் அன்று, கும்பத்திலிருக்கும் நீர் கோயில் தூபிகளில் ஊற்றப்பட்டு, பல்வேறு தெய்வ மூர்த்தங்கள் நீராட்டப்பட்டு, பொருள்கள் புனிதமாக்கப்படுகின்றன. இந்தப் புனித நீராட்டல் சடங்கின் உச்சக் காலத்தில் நிகழ்கிறது. இதற்கு முன்னர் பல நாள் பூஜைகளும் அதற்கு பின்னர் ஒரு மாதத்திற்கு மேல் தினசரி சிறப்புச் சடங்குகளும் நிகழ்கின்றன.

தெய்வ மூர்த்தங்களின் முக்கியத்துவம்

நமது மூன்றாவது விஷயம் இந்து வழிபாட்டில் சிலைகளைப் பயன்படுத்துவது பற்றியதாகும். கும்பாபிஷேக சடங்குகளின் ஓர் அங்கம் யாதெனில் சன்னிதிகளில் நிறுவப்பட்ட எல்லா உருவச் சிலைகளும் சுத்திச் செய்யப்பட்டு தெய்வீக சக்தியால் நிரப்பப் படுகின்றன. அதன் பிறகு, அச்சிலை ஒரு மூர்த்தம் ஆகிறது, அதாவது வழிபாட்டுக்கு உகந்ததாக ஆக்கப்படுகிறது, இதில் குறிப்பிட்ட அந்த தெய்வம் வாசம் செய்கிறது. வேறுபடியாகக் கூறின், மகிமையுடைய உள்உலகவாசியான குறிப்பிட்ட தெய்வம் அந்த உருவத்தை தனது தற்காலிக பௌதீக உடலாகப் பாவித்து, அதன் மூலம் அவன்/அவள் வந்திருக்கும் பக்தர்களை ஆசீர்வதிக்கின்றது. ஆக இந்துக்கள் சிலையை வழிபடுவதில்லை என்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் அதில் உறையும் புனித தேவதையை வழிபடுகின்றனர். பலர் அந்த உருவத்தை வெறும் தெய்வத்தின் அடையாளம் என்று எண்ணினாலும், பக்தியும் மறைஞானமும் பொருந்தியவர்களுக்கு அது தெய்வமே ஆகும்.
 

பூஜா விதானங்கள் தெய்வத்தை அழைக்கும் தத்துவத்தை நேரடியாகவே செய்கின்றன: இதில் உள்உலங்களில் வசிக்கும் உணர்வு பொருந்திய, அறிவார்ந்த, கருணைமிக்க மேலான சக்திகள் இறைஞ்சி வேண்டப்படுகின்றன. இந்து மதம் பல்வேறு தோற்றப் படிநிலைகளை அறிந்துள்ளது. பார்க்க இயலாத இவ்வுலகங்களில் எல்லா படிநிலை பரிணாமங்களும் நிரம்பி உள்ளன. நாம் இவ்வாறு நுட்பமான, சூட்சுமமானத் தோற்றங்களை நமது எண்ணங்களிலும் உணர்வுகளிலும் எல்லா நேரமும் அனுபவித்தே வருகின்றோம். தூக்கத்தின் போது நாம் பூத உடலை விட்டு, கண்களுக்குப் புலனாகாத உலகங்களில் முழுமையாக ஈடுபடுகின்றோம். இறப்பின் போது, நாம் நமது பௌதீக உடலைத் துறந்து, அவ்வாறான உள்உலகங்களில் நிலைகொள்கின்றோம், மீண்டும் ஒரு பூதவுடல் கொண்ட பிறவி பெறும் காலம் வரும் வரை.