கடவுளின் மீது அன்பு செலுத்துவதில் (வேறான ஒருவரிடம்) இருந்து தன்னை கடவுளுடன் ஒன்றாக காணும் அனுபவம் வரை, இந்திய இறை இயலில் தெளிவாக வரையப்பட்டுள்ளது.

சத்குரு போதிநாத வேலன் சுவாமிகள்

மேலை நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்புகளில், கடவுளைக் குறிப்பிட்டு காட்டுவது மிகக் குறைவு. ஆனால், தெய்வீகம் குறிப்பிடப்படும் பொழுதில், நிறைய காணப்படும் உணர்ச்சிகள் பெரும்பாலும் பின்வரும் உறுதிப்பாட்டை மையமாக வைத்தே இருக்கின்றன, “கடவுள் உன்னை விரும்புகிறார்.” இது தெய்வீகத்தைப் பற்றிய தற்கால பார்வைக் கோணங்களை பிரதிபலிக்கிறது. உண்மையில், வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில், கடவுள் நமக்காக இருக்கிறார் என்ற கொள்கை நமக்கு மறு ஞாபகமூட்டப்படுவது கண்டிப்பாக புத்துணர்வு கொடுப்பதாகவே இருக்கிறது. 

இந்து தத்துவங்களில், “கடவுள் உன்னை விரும்புகிறார்” எனும் கருத்து இருக்கவே செய்கிறது, ஆனால் மிக ஆழமான நுட்பத்தால் செறியூட்டப்பட்டுள்ளது. “நீ கடவுளிடத்து அன்பு செய்கிறாய்” மற்றும் “கடவுளே அன்பு” என்ற பலமான அழுத்தம் காணப்படுகிறது. இந்த சற்றே வித்தியாசமான நோக்கு உண்மையான பக்தர் ஒருவர் தன்னுள் கடவுளின் அன்பை வளர்க்கவும் அதை பலப்படுத்தவும் உந்துகிறது.

ஒருவர் தான் கடவுளின் அன்பை ஆழமாக்கும் செயலை விளாவாரியாக பார்ப்பதற்கு முன்னர், இன்னுமொரு இரண்டாவது இந்து கொள்கையான இறைநம்பிக்கை என்பதை பார்ப்போம். நமது நவீன உலகில், தான் கடவுளிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தைக் காணவில்லை என்றும் சொல்கிறார்கள். இணையத்தில் காணப்படும் ஒரு பிரபல்யமான போஸ்டர் இந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது, அதில் ஒரு பதின்ம வயது பெண் தைரியமாகச் சொல்கிறாள், “மாயக்கதைகளை நம்புவதற்கான வயதில் நான் இல்லை.”

மேலை நாட்டு சிந்தனை பெரும்பாலும், எப்பொழுதும் இல்லாவிட்டாலும் கூட, மத நம்பிக்கையை கடவுளையும் மதக்கோட்பாடுகளையும் எவ்வித சந்தேகமும் கேள்விகளையும் எழுப்பாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது என வரையறுக்கிறது, இந்த பார்வைக்கோணம் வெப்ஸ்தர் அகராதியுடன்  (Webster Dictionary) ஒத்துப் போகிறது. இதற்கு எதிர்மறையாக இந்துவின் மத வெளிப்பாடு மதக் கோட்பாட்டு விசுவாசத்தையும் தாண்டி அப்பாலே செல்கிறது. இந்து மதத்தில், மதநம்பிக்கை என்பது ஒரு சேர ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து தொகுப்பு என ஆகாது; மேலும் அது ஒரு மாறவே மாறத ஒன்று எனவும் ஆகாது. எதிர்மாறாக, சுய அனுபவங்களாலும் ஆன்மீக வளர்ச்சியினாலும் அது தொடர்ந்து ஆழமாகிக் கொண்டே செல்கிறது. சனாதன தர்மத்தின் ஆன்மீக உண்மைகள் ஆரம்பத்தில் அறியக்கூடிய ஆதாரங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தனி ஒருவரின் தத்தம் சுய அனுபவங்களினால் இறுதி உறுதி செய்யப்படுகிறது. சின்மய மிஷன் ஸ்தாபகர், சுவாமி சின்மயனந்தா இக்கருத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார், “நம்பிக்கை என்பது பார்க்காத ஒன்றின் மீது கொள்ளும் பற்று ஆகும். நம்பிக்கையின் பலன் நீங்கள் நம்பியதை பார்ப்பது ஆகும்.”

கடவுளின் மீது அன்பை அதிகரிக்கச் செய்யும் இந்து குறிக்கோள் பக்தி யோக பாரம்பரியத்தில் தெளிவாக வெளிப்படுகிறது, இதில் வெவ்வேறான உறவு முறைகள் மூலமாக கடவுளிடத்து கொள்ளும் அன்பின் பரிணாம நிலைகள் காட்டப்படுகின்றன. இந்த நிலைகள் பல்வேறு சம்பிரதாயங்களில் காணப்படுகின்றன, ஓரளவுக்கு வித்தியாசமாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, வைணவ சம்பிரதாயம் ஐந்து அடிப்படை ஆன்மீக உணர்வு வெளிப்பாடுகளை அல்லது பாவங்களைக் கொண்டுள்ளது:

அமைதி நிலை (சாந்த பாவம்): ஆத்மா கடவுள் நிலைகொண்டுள்ளதைக் அறிந்து திருப்தியில் திளைக்கிறது. சேவை நிலை (தாச பாவம்): ஒரு தொழிலாளி முதலாளியிடம் கொண்டுள்ளதைப் போன்று ஆத்மா கடவுளிடம் தொடர்பு கொள்கிறது. நட்பு நிலை (சக்ய பாவம்) ஆத்மா கடவுளிடம் ஒரு நண்பனைப் போன்ற ஒரு தொடர்பில் இருக்கிறது. பெற்றோர் நிலை (வத்சல்ய பாவம்): ஒரு பிள்ளை தாய் தந்தையரிடம் கொண்டுள்ள உறவு நிலை. காதல் நிலை (மாதூர்ய பாவம்): ஆத்மா கடவுளிடம் மிக ஆழமான தொடர்பை அனுபவிக்கிறது, கடவுளை தான் மிகுந்த காதலுடன் நோக்கும் ஒருவராக பாவிக்கிறது.

அடிப்படை கேள்வியானது எப்படி தன்னுடைய கடவுளுக்கான அன்பை பெருக்குவது என்பதே ஆகும், மெதுவாக சாந்த பாவத்திலிருந்து மாதூர்ய பாவத்திற்கு மாறிச் செல்வது. நான்கு அடிப்படை செயல்களான பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் மற்றும் ஞான யோகம் ஆகியவையே வழி. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம், விரும்பும் பாவ முன்னேற்றத்திற்கான அவை ஒவ்வொன்றின் தொடர்பை மனதில் நிறுத்தியவாறே. 

ஒருவர் தனது கடளுவுக்கான அன்பை ஆழப்படுத்த விரும்புகையில், பக்தியோகத்தை முதலில் சிந்திப்பது இயற்கையாகிறது. இதில் பல்வேறு பக்தி பயிற்சிகள் அடங்கியுள்ளன, அவை பொதுவாக கோயிலில் செய்யப்படுகின்றன, ஆனால் அங்கு மட்டுமே முடங்கிவிடுவதில்லை. ஒரு கோயில் என்பது, குறிப்பிடத்தக்க புனிதமான ஓர் இடம், அங்கு குறிப்பிட்ட தெய்வம் ஒன்று தன்னுடைய சூக்கும தேகத்தில் வருகிறது, விக்கிரகத்தின் மேலாகவும் அதன் உள்ளும் வாசம் செய்கிறது. இந்த கருத்தை ஒட்டி பாஸ்கரானந்த சுவாமி குறிப்பிட்டுள்ளார்: “அந்த விக்கிரகம் என்பது ஒரு சிலை அல்ல மாறாக கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அம்சத்தின் புனிதமூட்டப்பட்ட உருவம் ஆகும். பக்தர் ஒருவர் கடவுள் அந்த உருவத்தில் உண்மையிலேயே இருக்கிறார் என நம்புகிறார், அதனால் அந்த உருவம் உச்சப் பொருளுடன் தொடர்பு கொள்வதற்கு  ஒரு வழியாகிறது” (இந்து மதத்தின் அடிப்படைகள், The Essentials of Hinduism).

பக்தி யோக பயிற்சிகள் உள்ளடக்கியவை வருமாறு: ஸ்ராவணம்: கடவுளைப் பற்றிய கதைகளைக் கேட்பது; கீர்த்தனை: பக்தி கவிதைகள் மற்றும் பாடல்களைப் பாடுதல்; ஸ்மாரணம்: கடவுளின் இருப்பையும் நாமத்தையும் நினைவில் கொண்டிருப்பது; பாத சேவனம்: திருவடிகளுக்கு சேவை செய்வது, இதில் மனுக்குலத்தின் சேவையும் அடங்குகிறது; அர்ச்சனை: கோயிலில் சடங்குபூர்வ பூஜைகளில் கலந்து கொள்வது மற்றும் தனது வீட்டு பூஜை அறையில் வழிபடுவதும் அல்லது பூஜை ஒன்றில் கலந்து கொள்வதும்; வந்தனம்: தெய்வத்திடம் வீழ்ந்து வணங்குவது; ஆத்ம-நிவேதனம்: ஒட்டுமொத்த சரணாகதி. பக்தி யோகத்தின் மூலம் நாம் கடவுளிடத்தில் அன்பை வளர்க்கிறோம், அதே வேளையில் தன்னலமின்மை மற்றும் தூய்மை பெறுகிறோம், இவை வாயிலாக ஆணவ குறைப்பு நிகழ்கிறது, கடவுளிடம் பூரண சரணாகதி அடைய முன்னேறம் காண்கிறோம். 

கர்ம யோகம், அல்லது சேவை. சேவை பொதுவாக ஒரு கோயிலில் முதலில் செய்யப்படுகிறது, இதில் பக்தர் ஒருவர் எளிய காரியங்களான தரையைச் சுத்தம் செய்வது, விளக்குகளைத் தேய்ப்பது, பூமாலைகள் தொடுப்பது மற்றும் மற்ற பக்தர்களுக்கு சமையல் செய்து பின்னர் பரிமாறுவது போன்றவற்றைச் செய்கிறார். இவ்வாறான எல்லா காரியங்களும் எவ்வித பிரதிபலன் அல்லது அங்கீகாரம் ஆகியவற்றை எதிர்பார்க்காமல் செய்யப்படுகின்றன. சேவை மற்ற சூழ்நிலைகளுக்கும் கூட நீட்டிக்கப்படலாம். எடுத்துக்காட்டுக்கு, வேலையிடம் அல்லது பள்ளிக்கூடம், இங்கே நாம் அந்த சூழ்நிலை நம்மிடம் அதிகாரப்பூர்வமாக எதிர்பார்ப்பதை விட மேலதிகமாகவே மற்றவர்களுக்கு உதவிப்பூர்வமாக இருக்க முயற்சிக்கலாம். எல்லா உயிர்களையும் கடவுளின் வாழ்கின்ற தோற்றமாகவே பாவித்து சேவை செய்வது கடவுளை வழிபடுவதாகவே பார்க்கப்படுகிறது. 2021 குஜராத் நிலநடுக்கத்திற்குப் பின்னர், தனது பக்தர்களுக்கு BAPSஇன் ப்ரமுக் சுவாமி மஹாராஜ் ஆறுதல் கூறினார்: “மக்கள் கஷ்டங்களையும் துன்பத்தையும் அனுபவிக்கையில் நமது இந்திய பாரம்பரியத்தில் நாம் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கிறோம். மனிதர்களுக்கு செய்யப்படும் சேவை, பரம்பொருள் அவனுக்கே செய்யப்படுவதாக நாம் உணர்கிறோம்.”

இன்னும் ஓர் ஆழமான அணுகுமுறையில், பெரும் ஆசிரியர்கள் எல்லா வேலைகளையும் கடவுளை அடையும் நோக்கிலேயே செய்யுமாறு நம்மை பணிக்கின்றனர். கடவுளை அடையும் குறிக்கோளுடன் நாம் வேலைகளைச் செய்வதால், ஒவ்வொரு வேலையும் கடவுளுக்கான அர்ப்பணம் என்ற பார்வை நமக்கு கிடைக்கிறது. பிரமாண்டமான பெரிய செயலில் இருந்து, மிக மிக சிறிய காரியம் வரை, ஒவ்வொரு செயலும் ஒரு புனித சடங்காக ஆகிவிடுகிது. “வேலை என்பது வழிபாடு.” சுலபமான, அற்ப காரியங்களும் கூட இந்த போக்கிலேயே செய்யப்பட வேண்டும். எனது பரமகுரு சிவயோகசுவாமி ஒருமுறை கழிவறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளியைப் பார்த்து பேசினார்: “ஓ ராமசாமி! என்ன அங்கே சிவ பூசை (இறை வழிபாடு) செய்து கொண்டு இருக்கிறாயா நீ?”

இதன் மூலமாக, ஒட்டு மொத்த வாழ்க்கையே புனிதமூட்டப்படுகிறது மற்றும்  மதச்சார்பற்ற-மதச்சார்பு பேதங்கள் காணாமல் போய் விடுகின்றன. கர்ம யோகம் ஈற்றில் இப்பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் செயலேதான் என்ற அனுபூதிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது. இந்த பார்வைக்கோணத்தால் வெறும் காரியங்களின் பலனை கடவுளிடத்து துறப்பது மட்டுமல்லாமல், காரியமாற்றும் தனி ஒருவர் என்ற உணர்ச்சியையும் கூட துறப்பது என்று ஆகிவிடுகிறது. ஒவ்வொரு சேவை காரியமும் பெருமானுக்கான ஒரு படையல் ஆகிறது, பெரிய காரியத்திலிருந்து மிகச் சிறிய காரியம் வரை ஒரு புனித சடங்காக மாறி விடுகிறது. கர்ம யோக பயிற்சிகளினால் ஒரு பக்தரின் கடவுள் மீதான அன்பு இயற்கையிலேயே ஆழமாகி செல்கிறது. 

பக்தி மற்றும் கர்ம யோகம் இரண்டிலுமே, கடவுளின் தனித்துவமான, உருவம் தாங்கிய ஒரு அமசத்தில் பக்தர் ஒருவர் கவனம் செலுத்துகிறார்.  இந்நிலை சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என அறிப்படுகிறது. இதற்கு எதிர்மறையாக, அடுத்த இரண்டு யோகங்களில், இராஜ யோகம் மற்றும் ஞான யோகம், கடவுளின் தனித்துவம் நீங்கிய அமசங்களில் கவனம் செலுத்தப்படுகிறது, இவை சர்வவியாபக உணர்வுநிலை மற்றும் அதனுடைய மூலமாகிய கடந்த நிலை. சமஸ்கிருதத்தில் இந்த இரண்டு அம்சங்களும் முறையே சச்சிதானந்தம் மற்றும் பரபிரம்மம் என குறிக்கப்படுகின்றன. 

பக்தி மற்றும் கர்ம யோகம் பூர்த்தி செய்யப்படுகையில், ஒரு பக்தர் இந்து மதத்தின் தியான பயிற்சிகளுக்குள் இயற்கையாகவே இழுக்கப்டுகிறார். இவை இராஜ யோக அங்கங்களான மூச்சுக் கட்டுப்பாடு, சக்தி உள்வாங்கல் மற்றும் ஆழ்கவனக்குவிப்பு போன்றவற்றினால் ஆழமான தியானங்களுக்கு உந்தப்படுகின்றார். தியானத்தின் அதி ஆழமான அனுபவத்தில் சச்சிதானந்தம் அல்லது தூய உணர்வுநிலையுடன் ஒன்றியிருக்கும் அனுபவம் வாய்க்கிறது. இதையும் தாண்டி, இன்னும் ஆழத்தில் கடந்த நிலை மெய்ப்பொருள் அனுபவம் உள்ளது (பரபிரம்மம்). ஞான யோகம் முழுமையாக ஞானம் பெற்ற ஒருவர், ஞானியின் ஆன்மீகப் பயிற்சிகளை விவரிக்கிறது. இதன் மற்றொரு ரூபத்தில், சுவாமி விவேகானந்தர் அவர்களால் பிரபல்யப்படுத்தப்பட்டது, அறிவுப்பூர்வ சமய கல்வியினால் உள்நோக்குகளைத் தேடும் தேடல், இது உண்மைத் தேடலுக்கான வித்தியாசமான, மாற்றுவழிகளாகிய நான்கில் ஒன்றாகிறது, மற்ற மூன்று பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் இராஜ யோகம். 

இந்த தியான அனுகுமுறைகள் கர்ம யோகம் மற்றும் பக்தி யோகங்களில் காணப்படாத கடவுளுடைய அன்பின் ஒரு தன்மையை நோக்கியது ஆகும். இவை கடவுளின் சர்வவியாபக அன்பு நிலையை குறியாகக் கொண்டு உள்ளன. அந்த நிலையை அனுபவிக்கையில், கடவுள் அன்பு என்று ஆகிறார், நீங்களும் கடவுளின் அன்பு என ஆகிறீர்கள். பரமகுரு யோகசுவாமி இந்த கொள்கையைப் போதித்து உள்ளார் – அதாவது சிவ பெருமான், நீங்கள் மற்றும் அன்பு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட முடியாத ஒன்றியநிலை – யோகேந்திர துரைசாமி என்ற இளம் ஆடவனுக்கு எழுதிய கடிதத்தில்: “நான் உன்னுடனும் இருக்கிறேன் மற்றும் நீ என்னுடன் இருக்கிறாய். நம்மிடையே தூரம் இல்லை. நான் நீ. நீ நான். பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? பார்! நான் நீயாக இருக்கிறேன். அப்படியென்றால் நீ என்ன செய்ய வேண்டும்? நீ அன்பு செய்ய வேண்டும். யாரை? எல்லோரையும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், உனது இயல்பு நிலையே அன்புதான். நீ மட்டுமல்ல. அனைவரும் அன்பினால் ஊடுருவப் பட்டுள்ளனர். ஆனால் அங்கே ‘அனைவரும்’ என்பது இல்லை, காரணம் நீ மட்டுமே உள்ளாய். நீதான் எல்லாரும்!”

ஐந்தாவது பாவமாகிய, மாதூரியத்தில், கடவுள் உங்களுடைய காதலுக்கு உரிய ஒருவராகிறார். மறைமெய்மையாக, உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒருமைப்பாடு இருக்கிறது என்ற ஆழமான அர்த்தம் இதில் உண்டு, உங்களது ஆத்மாவின் சாராம்சமும் கடவுளின் சர்வ வியாபகநிலை மற்றும் அதன் மூலமும் பிரிக்கவியலாத ஒருமையில் உள்ளன, இது இராஜ மற்றும் ஞான யோகத்தினால் அனுபவிக்கப்படலாம்.  உச்ச அனுபவ தேர்ச்சியில், கடவுள், “நான்” மற்றும் அன்பு ஆகியவை எல்லாம் ஒன்றே.