Read this article in:
English |
Spanish |
Hindi |
Gujarati |
Tamil |
Marathi

அளவுக்கு அதிகமான வேளைகளில், இந்து கருத்துக்களும் செயல்பாடுகளும் சிறார்களிடமும் இளைஞர்களிடமும் சட்டவிதிகளாகவே காட்டப்படுகின்றன, கருவிகளாக அல்லாமல். சட்டவிதிகள் நாம் வாழ்வில் செய்யக்கூடியவற்றை குறுக்கி, காரியமாற்றுவதின் மகிழ்ச்சியைக் குறைத்து விடுகின்றன. குறிப்பாக, சிறார்கள் அளவுக்கு அதிகமான சட்டதிட்டங்களுக்கு எதிராக திரும்புகின்றனர். கருவிகளோ, எதிர்வகையில், அவர்களை மேலும் பயனுள்ளவர்களாக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

இடைஞ்சலான சட்டவிதிகளை கவர்ச்சியானக் கருவிகளாக மாற்றியமைக்க நம்மால் முடியும், எப்படியெனின், ஒரு செயல்பாடு அல்லது பாரம்பரிய பழக்கத்தின் வழிமுறையை விளக்கிக் கூறியும், அதனால் விளையும் நன்மைகளை எடுத்துரைப்பதாலும். இதன் நோக்கம் அந்த சிறு பிள்ளையின் ஆர்வத்தை இழுத்து, இந்து மதம் எவ்வாறு அவளுக்கு ஆன்மீக முன்னேற்றம் அடையவும், அதிக மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வாழ்க்கையும் கிட்ட உதவுகின்றது என்பதை காட்டுவதே ஆகும். இவ்வாறான அகத்தூண்டுதல், சட்டவிதிகள் அல்ல, மக்களை முன்னோக்கி செல்ல உந்தும். இக்கோணத்தில் பார்க்கின் சிறார்களும் ஒன்றே.

ஒரு பதின்மவயது பெண் தனது குடும்பத்தாரின் மூன்று பழக்க வழக்கங்களை கேள்வி கேட்பதாக கற்பனைச் செய்வோம்: “நாம் ஏன் சைவ உணவு உண்கின்றோம்?” “நாம் ஏன் ஒவ்வொரு வாரமும் கோயிலுக்குச் செல்ல வேண்டும்?” “என் நண்பர்களைப் போலவே நானும் ஏன் அடாவடி இசையை கேட்கக் கூடாது?” ஆனால் துரதிஷ்டவசமாக, பெற்றோர்கள் அத்தகைய கேள்விகளுக்கு நேரம் எடுத்து, ஆழசிந்தித்து, முழுமையான பதிலை வழங்குவதில்லை. சுலபமான வழியொன்றைக் கையாண்டு, “இதைத்தான் நமது குடும்பம் பல காலமாக செய்து வந்துள்ளது” என சொல்லிவிடுவர். இவ்வாறான வாழ்க்கைக் கட்டுப்பாடுகளை தன் நண்பர்கள் பலர் பின்பற்றாததால், இப்படிப்பட்ட பதிலைக் கேள்விப்படும் இளைஞர்கள் இந்து மதம் வாழ்க்கையைக் குறுக்கி, மகிழ்ச்சியில்லாமல் செய்யும் ஒரு சாதாரண சட்டவிதி கட்டமைப்பு என சுலபத்தில் முடிவுகட்டி விடுவர். சட்டவிதிகளை கருவிகளாக மாற்றும் நோக்கில் இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னர், சில அடிப்படை கருத்துக்களைக் காண்போம். இவற்றை நான் “பெரிய ஐடீயா” என அழைக்கின்றேன்.

இரண்டு பெரிய ஐடியாக்கள்

முதல் பெரிய கருத்து யாதெனின், அனைத்தும் நமது உணர்வுகளை தாக்கம் செய்கின்றன. எனது குருவின் குரு, இலங்கையின் யோகசுவாமிகள் கூறியள்ளார்: “நீ என்ன நினைக்கின்றாய், அதுவே நீ ஆகின்றாய். நீ கடவுளை நினைத்தால், நீ கடவுளாகின்றாய். நீ சாப்பாட்டை நினைத்தால், நீ சாப்பாடு ஆகின்றாய். அனைத்தும் உணர்வுநிலைகளைத் தாக்குகின்றன.”

இரண்டாவது பெரிய ஐடீயா, நாம் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா, ஜட உடம்பு ஒன்றில் வாழும் தெய்வீகப் பொருள் மற்றும் நமக்கு தன்மைகள் மூன்று உள்ளன என்பதாகும். மிக ஆழ்நிலையில், நாம் தூய, ஒளி பொருந்திய, ஆனந்தமயமான ஆத்மா. இது நமது ஆன்மீக / தானறிவு தன்மையாகும். மேலும் நமக்கு புத்தி இயல்பும், பிறவிக் குண இயல்பும் உண்டு. ஆக நமக்கு மூன்று அம்சங்கள் உள்ளன: ஆன்மீகம்(அறிதல்,இருத்தல்), புத்தி(எண்ணம்/ சிந்தனை), மனம்-உணர்ச்சி(பிறவிக் குணங்கள்). பிறவிக்குணம் நமது கீழான, மிருக உணர்ச்சிகளாகும். எடுத்துக் காட்டுக்கு, சுய பாதுகாப்பு, இனப்பெருக்கம், பசி மற்றும் தாகம். பேராசை, வெறுப்பு, கோபம், பயம், காமம், பொறாமை போன்ற உணர்ச்சிகளும் இதில் அடங்கும். இதுவே நமது அவா/உணர்ச்சித் தன்மையாகும்.

நமது புத்திதன்மை ஆதாரம் மற்றும் தர்க்க சாஸ்த்திர அடிப்படையால் ஆனது. இதுவே நமது எண்ணங்களை வேற்றுமைக் காண்பதற்கு மூலமாகின்றது. தானறியும் உள்ளறிவுத் தன்மை ஒளியால் ஆன மனம், சர்வ அறிவு, சர்வவியாபி உணர்வாற்றல், தூய உணர்வுநிலை, சத்தியம் மற்றும் அன்பு. இதுவே நமது ஆன்மீகத் தன்மை.

இந்த இரண்டு பெரிய ஐடியாக்களைக் கொண்டு, நாம் இப்போது, மூன்று கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராயுள்ளோம்.

நாம் ஏன் சைவமாயிருக்கின்றோம்்?

இந்தியாவில் சைவ உணவுப் பழக்கம் உறுதியாக நிலைகொண்டுள்ளது, இறைச்சி உண்ணாமை பெரும்பாலும் குறைகூறப்படுதில்லை. மற்ற நாடுகளில், சைவ உணவு உண்ணும் ஒருவன் வித்தியாசமானவனாகவும், சைவ சிறார்கள் கிண்டல், சக ஈடு நண்பர் தாக்கம், மற்றும் குற்றச்சாட்டுக்கும் ஆளாகின்றனர். இந்த அவமதிப்புக்கு மேலும் காயம் ஏற்படுத்தும் வண்ணம், பெரும்பாலும் பள்ளிக்கூட உணவகங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் சைவ உணவுகள் வெறும் அற்பமாகவும், சத்துகுறைந்தும், கற்பனைக்கு எட்டாதவாறு இருக்கும். ஒட்டு மொத்தத்தில், ஒரு சைவ மாணவன் உண்ணுவதற்கான ஒன்றும் இருக்காது.

இதனால், சுலபமான பாதையாக, சைவ உணவைக் கைவிடுவது என சிறார்கள் முடிவெடுப்பதில் ஏதும் ஆச்சரியம் இல்லை. இருப்பினும், ஒரு சைவனாக இருப்பதற்கு மிகவும் வலிந்து ஈர்க்கின்ற காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இறைச்சி உண்பது அவர்களின் உணர்வுநிலையை எதிர்மறையாக தாக்குகின்றது, அவர்களை பிறவிக் குணங்களுக்குள் இழுத்துச் செல்லுகின்றது.

சிறுவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், அவர்கள் உயர் உணர்வுநிலைகளில், தம் ஆத்ம தன்மையில் அமைதியுடன், மகிழ்ச்சியாக, அனைத்து உயிர்களிடமும் அன்புடன் வாழ வேண்டுமானால், அவர்கள் இறைச்சி, மீன், சிப்பி உயிரி, பறவை ஊண் மற்றும் முட்டைகளை உண்ணக்கூடாது. மிருக உணவுகளை உண்டு செரிப்பதால், இரசாயன மார்க்கமாக, கொலையுண்ட மிருகங்களின் சதைகளில் அடைப்பட்ட கோபம், பொறாமை, பயம், கவலை, சந்தேகம் மற்றும் மரண பயம் போன்றவற்றை ஒருவன் தனது உடம்புக்குள்ளும், மனதிற்குள்ளும் செலுத்துகின்றான்.

வேறாகக் கூறின், இறைச்சி உண்ணுதல் அவர்களின் பிறவிக் குணங்களை வலுப்படுத்தி, அவர்களை இவ்வாறான கீழ்உணர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும். இறைச்சி உண்பதால், அளவுக்கு அதிகமாக கோபப்படுவதும், இருண்ட மனப்பாங்குகளை அனுபவிக்கவும் நேரிடும். என் குரு சொல்லியதாவது, “ சைவ உணவுண்ணல் மிகவும் முக்கியம். எனது ஐம்பது ஆண்டுகால சமயப் பணியில், சைவ குடும்பங்களில் மிகவும் குறைவான பிரச்சனைகள் இருப்பது காணப்பட்டுள்ளது, அசைவ குடும்பங்களிடம் ஒப்பிட்டுப் பார்க்கையில்.” உலகம் யாவும், இந்த புரிந்திணர்வுக்கு எழும்பும் சிறுவர்கள் தாங்களாகவே சைவர்களாக உருவாகின்றனர். இந்தக் காலத்தில், ஜிபிஎஸ் பொருந்திய ஐபாட் கணிணி துணையுடன் சிறிது ஆக்கமிக்க ஆராய்ச்சி இருந்தால் போதும், சைவ உணவு தேர்வுகள் எங்கு பார்த்தாலும் கண்டெடுக்கப்படலாம்.

நாம் ஏன் ஒவ்வொரு வாரமும் கோயிலுக்குச் செல்ல வேண்டும்?

நமது ஆத்ம தன்மையுடன் தொடர்பு கொள்ளவும், ஆத்மாவின் இயற்கை ஆனந்தமயமான தன்மையை அனுபவிக்கவும் ஒரு பாரம்பரிய வழியாக கோயில் வழிபாட்டை இந்து மதம் நமக்கு வகுத்துள்ளது. அதிருப்தியான ஒரு மனநிலையில் கோயிலுக்குச் சென்று, கடவுள் மற்றும் தெய்வங்களின் ஆசீர்வாதங்களால், உந்தப்பட்டு, சந்தோஷமாக வீடு திரும்பலாம். எவ்வாறு இது சாத்தியம்? தெய்வத்தின் ஆசீர்வாதங்கள் மனதை ஒழுங்கு செய்து, மற்றும் பிரபாமண்டலத்தின் அடைபட்ட எண்ண ரூபங்களையும் உணர்ச்சிகளையும் சுத்தி செய்து, ஒருவனை மீண்டும் தத்தம் உள்ளார்ந்த சுயத்துடன் தொடர்பு கொள்ளச் செய்கின்றன. இந்த ஆசீர்வாதங்கள் அவர்களை பிறவிக்குண தன்மைகளில் இருந்து மேல்தூக்கி, புத்தி தன்மையை மென்மையாக்கி, தத்தம் ஆன்மீக தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.

சிறுவர்கள் கோயில் வழிபாடானது சங்கடமான உணர்ச்சிகளை ஸ்திரமாக்கும் கருவி என்ற உண்மையை உணரும் போது, தாமாகவே குடும்பத்தினருடன் சேர்ந்து கோயிலுக்குச் செல்ல விரும்பத் தொடங்குவர். பிள்ளைகளுக்கும் கோயில் ஒரு முக்கியமானதாக தோன்றும், வெறும் தாயுக்கும் தந்தைக்கும் உரித்தானதென இல்லாமல். கோயில் வழிபாடு அவர்கள் மிகக் கஷ்டமான சூழ்நிலைகளிலும் சாந்தமாகவும் நடுநிலையாகவும் இருக்க உதவும். சரியான உத்வேகத்துடன் செல்வதே தம்மை மீண்டும் சரி செய்வதற்கான வழி என்பதை சிறுவர்கள் கண்டு கொள்வர். நீண்ட காலமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த காயங்களுக்கும் கோயில்கள் நிவாரணம் வழங்குகின்றன.

இந்த பூலோகத்தில் ஒரு சக நண்பனிடம் பேசுவது போலவே, கோயிலுக்குச் சென்று, தெய்வத்தின் திருவடியில் பிரச்சனைகளை வைத்துவிட்டு, அன்பளிப்புகளை கொடுத்து, தெய்வத்துடன் சங்கடங்களை சொல்ல வேண்டும் என சிறுவர்களுக்கு போதனை செய்ய வேண்டும். அங்கே, தெய்வத்துடன், ஆழமான , உள்ளார்ந்த செயல்பாடு ஒன்றில் ஈடுபட்டு, அந்த தெய்வத்திடம் இருந்து ஆசீர்வாதங்களை பெறுவது, சரியான முறையில் அணுகப்படும் பட்சத்தில் மட்டுமே. அவர்கள் கோயிலை விட்டு வெளியேறும் போது, ஒரு வேளை உறுத்திய பிரச்சனை யாது என்பது என்ற நினைவு கூட தமக்கு இருக்காது. இது ஒரு வெற்றிக்கான அடையாளம்.

வாரம் ஒரு முறை கோயிலுக்குச் சென்று பயனடைவது, சங்கடமான காலக் கட்டத்தில் மட்டுமல்ல. வாழ்க்கையில் அனைத்தும் நலமாக இருக்கும் வேளையில் கூட, உளமாரவும், மிக்க கவனமுடனும் கோயிலில் வழிபாடு செய்வது, ஒருவனை தனது ஆத்ம தன்மையின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும்.

சிறுவர்கள் மேலும் கருணையுள்ளவர்களாகவும்், அதிக புரிந்துணர்வு உடையவர்களாகவும் வளருவர். வாழ்க்கையில் தோன்றும் சவால்களை மேலும் திறமுடன் எதிர்கொள்வர். வெறுமனே பெரியவர்களின் பலவிதமான விதிமுறையில் இதுவும் ஒன்று அல்ல, ஆனால் வழிபாடானது ஓர் சக்தி வாய்ந்த இந்துக் கருவி என உங்கள் குழந்தை தெரிந்து கொள்ளும் பட்சத்தில், அவள் தன்னை ஒவ்வொரு வாரமும் கோயிலுக்கு அழைத்துச் சொல்லும்படியும் கேட்பாள்.

நான் ஏன் அடாவடி இசையை கேட்கக்கூடாது?

இசை, குறிப்பாக நீண்ட காலங்களூக்கு கேட்கப்படும் பட்சத்தில், நமது உணர்வுநிலைகளைப் பலமாகத் தாக்கச் செய்கின்றன. சிறுவர்கள் கேட்பது எதுவாக இருப்பினும், அது அவர்களை ஏதாவது ஒரு உணர்வுநிலைகளுக்கே கொண்டுச் செல்கின்றது. எனது குரு, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி, இந்த விஷயத்தில் வெளிப்படையாகவே பேசுவார். வீட்டில் செவிமடுக்கப்படும் இசையும், அதனால் பரப்பப்படும் செய்திகளும் மிக முக்கியம் என அவர் உணர்ந்திருந்தார். கரடுமுரடு இசையையும் கீழ் உணர்வு இசைப்பாடல்களையும் தவிர்க்க மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சொல்லியுள்ளார். “போதை கலாச்சாரமும் அதன் அசுர இசையும் அடிப்படை மனுக்குல தன்மை மற்றும் கலாச்சாரத்தை அரிக்கவல்லது.” சிறார்கள் இக்கருத்தை அறியும் பட்சத்தில், அவளது இசை தேர்ந்தெடுப்பு பரிணாமிக்கும்- நீங்கள் சட்டவிதிகளை திணிப்பதால் இல்லாமல், காரணம் அவள் வெவ்வேறான இசை எவ்வாறு தனது மனப்பாங்கையும் மனதையும் தாக்கம் செய்கின்றன என்பதை அறிந்து இருப்பதால். குறைந்தபட்சமாக, அவள் கரடுமுரடு, எதிர்மறையானவற்றைத் தவிர்த்து, தற்கால ஆனால் உயர் ரகத்திலானவற்றை செவிமடுப்பாள். நிறைவானதாக இருக்கவேண்டின், வீட்டில் கேட்கப்படும் இசை, பாரம்பரிய இசைக் கருவிகளால் உருவாகிய அழகிய இந்து இசையாக இருந்து, வீட்டிலிருக்கும் அனைவரையும் தத்தம் மாசற்ற பக்குவமான ஆத்ம தன்மைக்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்.
கருவிகள் சட்டவிதிகளைவிட இன்னும் சிறப்பாக காரியமாற்றுவதை நினைவில் கொள்க

ஒவ்வொரு இந்து பழக்க வழக்கங்களைப் பற்றிய பிள்ளைகளின் கேள்விக்கு, நேரம் எடுத்து, அறிவார்ந்த பதில்களை வழங்குவது கண்டிப்பாக மிக்கபயன் வல்லது. உங்கள் விளக்கத்தில், ஒரு பழக்கமோ, கட்டுப்பாடோ எவ்வாறு அவளது உணர்வுகளைப் பாதிக்கின்றன என்பதை சேர்த்துக் கொள்ளவும். இது அவள் ஆர்வமுடன் அந்த பழக்கத்தை மேற்கொள்ளும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கும். மட்டுமின்றி சில வேளைகளில், உங்கள் பிள்ளைகளே மற்ற இந்து இளம் வயதினர் இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க ஊக்குவிக்கும் அளவிற்கும் ஆர்வம் ததும்பி நிற்கலாம்.