Read this article in:
English |
French |
Gujarati |
Hindi |
Marathi |
Spanish |
Tamil |
Russian |

இன்றைய பரந்துவிரிந்த தகவல் தொடர்பு உலகில், மனிதனின் தன்மையைப் பற்றிய பல்வேறுவிதமான கருத்துக்களை வழக்கமாகச் சந்திக்கின்றோம். ஒரு புரத்தில், ஒவ்வொரு மனிதனும் பலகீனமாக, குறையுடையவனாக, பாவியாக, -தெய்வத்தின் இரட்சிப்பு இல்லையேல்- எக்காலமும் பரிதாபமான நிலையில் அப்படியே இருப்பான் எனப்படுகின்றது. மற்றொன்றில் ஒவ்வொரு மனிதனும் உள்ளூராக தெய்வமாகவே இருக்கின்றான்.

கரீபியன் நாட்டில் ஆகஸ்ட் 2011-இல், இந்துக்களிடையே நான் பேசுகையில் இது ஒரு கருப்பொருளாக இருந்தது. கடந்த காலத்தில் திரினிடாட் நாட்டில், இந்துக்களை மதமாற்றம் செய்யவேண்டும் என்ற நோக்கில், “இரட்சிப்பு கண்டிப்பாகத் தேவைப்படும் ஒரு பாவி நீ” செய்தி மிகவும் பலமாக விளம்பரம் செய்யப்பட்டது. “இவ்வாறான மதமாற்றிகளின் தீர்க்கமான வாதத்தை எதிர்நோக்கும் போது என்ன செய்வது? இந்து மதத்தின் பார்வை எவ்வாறு உள்ளது?” என என்னைப் பல வேளைகளில் கேட்பர். நமது பார்வையை வரையறுக்கும் நோக்கில் மூன்று பிரபல சுவாமிகளின் வார்த்தைகளைக் கவனிப்போம்.

முதலாவதாக, சுவாமி விவேகானந்தர் உலக சர்வமத நாடாளுமன்றத்தில்1983-இல் வழங்கிய உரை.
தான் கண்டதை அப்படியே தீரமுடன் அவர் மறுவுறுதி படுத்தினார். “நமது அறிவுக்கு எட்டிய அளவுக்கு மட்டுமே, ஒரே பொருள் இருப்பதும் ஆவதுமாகத் தென்படுகின்றது. மனிதன் தெய்வத்தை, ஆன்மீக பூரணத்தை அறியும் வாக்குறுதியையும் ஆற்றலையும் கொண்டுள்ளான், ஆகையால் அவன் உருவாக்கப்படும் தெய்வம் ஆகின்றான்; காரணம் ஒருவன் கடவுளின் தனிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு என கருதப்படுகையில் மட்டுமே அவனது மனிதம் அறிவுக்கு ஒத்துப்போகின்றது. மனிதனிடத்து பாவத்தை சேர்க்கும்போது, அது மனித இயல்புக்கே அவமானத்தைச் சேர்க்கின்றது. மேலும், கடவுள் ஒருவரே ஒற்றைப் பொருளாகவும் உச்சப் பரம்பொருளாகவும் இருக்கும்போது, எவ்வாறு பாவம் என்ற ஒரு வேற்றுப் பொருள் இப்பொருளுக்குள் சஞ்சரிக்க முடியும்? இந்துக்கள் உன்னைப் பாவி என அழைக்க மறுக்கின்றார்கள். ஆம், தெய்வீகங்களே, நீங்களா பாவிகள்? ஒரு மனிதனைப் பாவி எனக் கூறுவதே பாவம்! மனுக்குலத்தின் மீது வீசப்படும் அவதூறு இது.”

சின்மய மிஷன் ஸ்தாபகராகிய சுவாமி சின்மயனந்தா: “மனிதன் அடிப்படையில் தெய்வீகமானவன். ஆனால் அவனது தெய்வீகம் அவன் இதயத்தில் தோன்றி, விடாமல் பற்றியிருக்கும் ஆசைகளினாலும் எண்ணங்களினாலும் மறைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றின் அளவுக்கு ஏற்ப பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். தடித்து படிந்திருக்கும் ஆசைகளையும் எண்ணங்களையும் நீக்கி, மனிதனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை மலரச் செய்வதே, மறைநூட்களில் பகரப்பட்டுள்ள உயர் குறிக்கோளாகும்” என விளக்குகின்றார்.

எனது குருதேவரும், இந்துஸ்ம் டுடே இதழின் ஸ்தாபகராகிய சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் நமது தெய்வீக இயல்பைப் பற்றி இரத்தினச் சுருக்கமான விளக்கத்தை கொடுத்துள்ளார்:
“இக்கணத்தில் கூட, நாம், நமது உள்ளூரத்தில் பரிபூரணமாகவே உள்ளோம், இதனைக் கண்டு பிடித்து, பின் இப்பரிபூரணமாக வாழ்வதே நாம் செய்ய வேண்டியதாக உள்ளது. நாம் ஜட உடம்பு கொண்டுள்ளது, நாம் வளர்ந்தும் பரிணாமித்தும் நமது தெய்வீக ஆற்றலை அடைவதற்கே ஆகும். உள்ளூராக நாம் எப்போதும் கடவுளுடன் ஒருமித்தே இருக்கின்றோம். நமது சமயம் இந்த ஒருமையை எவ்வாறு அறிந்துக் கொள்வது மற்றும் இடையிடையே தேவையில்லாத அனுபவங்களை உருவாக்காமல் இருப்பது எப்படி என்ற போதனைகளைக் கொண்டுள்ளது.”

மனிதனின் இயற் தன்மை -பாவியா தெய்வீகமா- என்ற எதிரும் புதிருமான கருத்துப்பார்வைகள், 2012 அனைத்துமத கலந்துரையாடல் ஒன்றில் மிகத் தெளிவாக அக்கம் பக்கமாக பார்வைக்கு கொண்டுவரப்பட்டன, மிட்லண்ட்ஸ் டெக்சஸில். இதில் நான் இந்து மதத்தைப் பிரதிநிதித்து இருந்தேன். ஐந்து மதங்களைச் சேர்ந்த சமயவாதிகள் “உன் மதத்தில் மனித இனம் ஒரே குடும்பமாக கொள்ளப்படுகின்றதா?” என்றக் கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த விவாதம் வெளிப்பட்டது.

எனது பதில்: “இனங்களுக்கும், நாடுகளுக்கும் இடையே காணப்படும் வேற்றுமையை அனுசரித்துப் போக இந்து மதத்தின் நம்பிக்கை ஒன்று உதவுகின்றது. அதாவது எல்லா மனிதர்களும் நன்மை பொருந்தியவர்கள்; நாம் அனைவரும் தெய்வீகப் பொருள், கடவுளால் படைக்கப்பட்ட ஆத்மாக்கள். இந்துக்கள், சிலர் கேடு நிறைந்தும் மற்றவர்கள் நல்லவர்களாகவும் இருக்கும் கருத்தை ஏற்பதில்லை. இந்துக்கள் ஒவ்வொரு தனிமனிதனும் ஓர் ஆத்மா, ஒரு தெய்வீகப் பொருள், இயல்பிலேயே நன்மை பொருந்தியவர் என நம்புகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவும் கடவுளிடம் இருந்து வெளிப்பட்டு, நெருப்பிலிருந்து தோன்றிய ஒரு பொறி போன்று, ஓர் ஆன்மீக பயணத்தைத் தொடங்கி, இறுதியில் மீண்டும் கடவுளிடமே சென்றுச் சேர்கின்றது. அவரவர்கள் உணர்கின்றார்களோ இல்லையோ, எல்லா மனிதர்களும் இந்தப் பயணத்தில்தான் உள்ளனர்.”

அடுத்த பேச்சாளர், டாக்டர் ரேண்டல் எஃரெட், பேப்டிஸ்ட் கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், குறிப்பிடத்தக்க வித்தியாசமான பார்வையை முன்வைத்தார். “மனுக்குலத்தின் ஒருமை – இதில் மற்ற சில மதங்களில் இருந்து கிருஸ்துவம் வேறுபட்டு நிற்கின்றது. நாங்கள் மனுக்குலத்தின் ஒற்றுமையை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அந்த ஒற்றுமை யாதெனின் நாம் அனைவரும் பாவிகள். நாம் உள்ளூராக நல்லவர்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை. நாம் இயல்பாகவே சுயநலவாதிகள், சுய முக்கியத்துவம் கொடுப்பவர்கள், இதனால்தான் நாம் காப்பாற்றப்பட அல்லது இரட்சிக்கப்பட வேண்டும் – கிருஸ்து நம்மை இருளிலிருந்து காப்பாற்றுகின்றார்.”

மனிதன் இயல்பிலேயே பாவி இல்லை என்ற இந்து நம்பிக்கையை சற்று அருகில் நோக்குகையில்
-அதாவது, மனிதனின் சாரம் தெய்வீகமும் பரிபூரணமும் எனப்படும்போது- மேலும் ஒரு கேள்வி எழுகின்றது: “இந்துப் பார்வையில் பாவம் என்றால் என்ன?” சிவனோடு ஆடுதல் புத்தகத்தில் குருதேவர் பதில் கூறுகின்றார்: “உலகத்தில் நல்லது கெட்டது எனப் பார்ப்பதை விடுத்து, ஜட உடல் பூண்டுள்ள ஆத்மாவின் தன்மையை மூன்று கோர்க்கப்பட்ட பகுதிகளாக நாம் பார்க்கின்றோம்: மிருகத்தன்மை அல்லது பௌதீக உடல்-உணர்ச்சிகள்; அறிவுத்தன்மை அல்லது மனம்; மற்றும் உயருணர்வுத்தன்மை அல்லது ஆன்மீகம்…. எப்போது வெளியூராக அல்லது கீழான மிருகத்தன்மை ஆதிக்கம் செய்கின்றதோ அப்போது ஒருவன் கோபம், பயம், பேராசை, பொறாமை மற்றும் புறங்கூறச் செய்கின்றான். அறிவுத்தன்மை மேலோங்கும்போது, ஆணவமும் பகுப்பாய்வுச் சிந்தனைகளும் முன்னிற்கின்றன. ஆன்மீக ஆத்ம தன்மைகள் ஓங்கும்போது, உன்னத குணங்கள் வாய்க்கப்பெறுகின்றன – கருணை, உள்நோக்கு, அடக்கம் மற்றும் ஏனையவை. இளம் ஆத்மாவின் உடல்-உணர்ச்சித் தன்மை பலம் கொண்டது. அறிவு, வளரவேண்டி இருப்பதால், இப்போது இல்லாமலிருப்பதால், உடல்-உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அறிவு வளர்ந்ததும், மிருகத் தன்மை அடங்குகின்றது. ஆத்மா மலர்ச்சி பெறுகையில் அது நன்றாக வளர்ந்த அறிவையும் விஞ்சுகின்றது, மனதின் கட்டுக்களைத் தளர்த்தி விடுவின்றது.”

மனிதனின் மூன்று வகையான இயல்பினை -உடல்உணர்ச்சி, புத்தி, ஆன்மீகம்- புரிந்துக்கொள்வதால், ஏன் மக்கள் சினம் கொள்வது, மற்றும் பிறருக்கு தீங்குச் செய்வது போன்ற அறவே தெய்வீகமற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது தெளிவாகின்றது. தனது சுய சாரம் அல்லது உள்ளார்ந்த இயல்பை விட இன்னும் மற்றொன்று மனிதனுக்கு உண்டு. நமக்கு ஒரு வெளியூர இயல்பும் உண்டு. இருப்பினும், மனிதனின் காரியங்கள், நன்மையானதாகவோ கேடுமிக்கதாகவோ இருப்பினும், பாவமிக்கதாகவோ தெய்வீகமிக்கதாகவோ இருப்பினும், யாவும் ஒரே ஒரு சக்தியின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. இந்த சக்தி நமது சூக்கும உடலில் இருக்கும் பதினான்கு சக்ரங்கள், அதாவது உணர்வுநிலை ஆதாரங்களின் ஊடாக வெளிப்படச் செய்கின்றன.

இந்தியாவின் கோயில்களில் காணப்படும் தண்ணீர் பயன்பாட்டு முறையை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஒரு நீண்ட குழாய் ஒன்றில் பல பீலிகள் வரிசையாக பொருத்தப்பட்டிருக்கும், பலர் இதில் தண்ணீர் திறந்து கைகால்களைக் கழுவிய பின்னர் கோயிலுக்குள் நுழைவர். சக்தியும் சக்ரங்களும் பற்றிய சிறப்பான உவமை இது. நமது சூக்கும உடல் பதினான்கு திறப்புக்கள் உடைய ஒரு குழாயைப் போன்றது. நீர் எப்போதும் நீர்; அது எந்த திறப்பிலும் வர முடியும். இருப்பினும் அது நீர்தான். சக்தி நமது எந்த ஒரு சக்ரம் மூலமாகவும் வெளிப்பட முடியும்; இருப்பினும் அது சக்தியே.

உயர் சக்ரங்களின் மூலமாக சக்தி செல்கையில், உயர் உணர்வுகள் அல்லது ஆன்மீகத் தன்மை வெளிப்படுகின்றது. எவ்வாறு நாம் நமது சக்தி உயர் சக்ரங்களில் பயணிக்குமாறு கட்டுப்படுத்துகின்றோம் அல்லது உந்துகின்றோம்? குருதேவர் பலமுறைச் சொல்லியுள்ளார், “எங்கு சாட்சியம் செல்கின்றதோ, அங்கு சக்தி பிரவேசிக்கின்றது.” நித்திய தியானம் மற்றும் வீட்டு பூஜை, ஜெபம், பூஜை செய்தல், பூஜையில் கலந்துக் கொள்ளுதல் மற்றும் வழக்கமாகக் கோயிலுக்குச் செல்வது போன்ற பக்தி முறைகளால் நாம் நமது சக்தியைக் கட்டுப்பாட்டில் கொள்கின்றோம். பண்பட்ட இசையைச் செவிமடுப்பது அல்லது வாசிப்பது மற்றும் பாரம்பரிய நாட்டியத்தையும் கலைகளையும் கையாள்வது உயர் சக்ரங்களில் நமது சக்தியைச் செலுத்துவதாகும்.

நமது அன்றாடக் காரியங்கள் எவ்வாறு நமது சக்தி செல்லுகின்றது என்பதை நிர்ணயிக்கின்றன. நாம் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுகையில், சில வேளைகளில் நாம் தெய்வீக அன்பு சக்ரம் வரை ஏறலாம். நேர் அறிவு சக்ரத்திற்கு நாம் அடிக்கடிச் செல்லுகையில், நமது மனதை மேலிருந்துக் கீழாக பார்க்க முடியும். இதனால் நமக்கு நம்மைப் பற்றி என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என அறிந்து நமக்கு பிடிக்காததை மாற்ற நாம் தொடர் முயற்சி எடுக்க முடியும். இதனால் நாம் ஆள்வினைச் சக்ரத்தினுள் நுழைகின்றோம். நாம் தொடர் ஆன்மீக/சமய காரியங்களில் ஈடுபட்டு வருகையில், இவையே நாம் நம்முள் தோன்றச் செய்யும் பண்பு குணங்களாகின்றன.

நாம் சக்தியை மேல்நோக்கி உந்தாவிட்டால், நாம் ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திருப்போம், ஆழ்வினை, காரணம், ஞாபகம் மற்றும் பயம் அல்லது சிலவேளைகளில் கோபம் போன்ற சக்தி மையங்களில் இருந்தவாறே. நாம் சக்தியானது தன்னலமின்றி பாய்வதைப் பார்க்குங்கால்,நாம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் காரியங்களைச் செய்வதன் மூலம்,
நாம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

நமக்கு உள்ளூரான பரிபூரணமும் வெளியூரான குறைபாடும் இருப்பதாகச் சொல்ல நான் விரும்புவேன். நமது உள்ளூரான பரிபூரணத்தில், நமது ஆத்ம குணத்தில் அதிக நாட்டம் செலுத்தி, வெளியூரத் தன்மை தனக்கே உரித்தான பிரச்சனைகளை உடையதென இனங்கண்டு, இதை சமாளிக்க முடியும் -இதுதான் வாழ்க்கையின் நோக்கம், தன்னைத் தானே சரிசெய்து, பாடங்களைப் பயின்று, பரிணாமித்து, கடைசியில் கடவுளை அறிய வேண்டும். நாம் தெய்வீகமானவர்கள் என்ற நம்பிக்கையினால் பிறந்த இந்த மனப்பாங்கு இருப்பதனால், நாம் நமது குறைகள் மற்றும் கஷ்டங்களில் இருந்து சற்று அதிகமாகவே துறந்து நிற்கின்றோம். நமது பல்வேறு சக்ரங்களில் வழிந்தோடும் சக்தி மாத்திரமே இது, ஒரு பீலியை விட மற்ற ஒன்றில் அதிகமாக தண்ணீர் வெளியாகின்றது. பீலி நாமல்ல. நாம் சக்தியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவு நமக்கு வாய்க்கின்றது. “எந்தப் பீலியை இன்று நான் திறக்கப்போகின்றேன்? எனது சக்தி எவ்வாறு செல்ல நான் விரும்புகின்றேன்? எந்த ஒரு தீய பழக்கத்தை நான் சரிசெய்ய விரும்புகின்றேன்?” தனிமனித உணர்ச்சி நீங்கலாக பார்க்கையில் இவை யாவும் செய்வதற்கு மிக எளிதாகின்றது.

பதினான்கு சக்ரங்களின் கருத்து தெரிகையில், நமது தோல்விகளைத் தெளிவான கோணத்தில் பார்க்க இயலுகின்றது, அவற்றால் துவண்டு போவது கிடையாது. சமயங்களில் பிறரை துன்பப்படுத்துவது போன்றச் செயல்கள், நாம் தெய்வீகமிக்கவர்கள் என்பதை ஒருபோதும் மாற்றவே செய்யாது. இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள பயிற்சிகளைத் தொடர்ந்துச் செய்து வருவதால், நாம் நமது உள்ளார்ந்த தெய்வீகத்தின் அனுபவங்களை ஆழப்படுத்தியும், குறைகளைத் தாண்டியும் வர முடியும். நாம் நம்மைப் பற்றி நன்மையாக நினைக்கும்பட்சத்தில் நம்மால் நமது குறைகளை மிக எளிதில் இனங்கண்டு பின்னர் மாற்ற முடியும். நம்மைப் பற்றி எதிர்மறையான கருத்து ஒன்று இருப்பின், அதாவது நான் இயற்கையிலேயே ஒரு குற்றமுள்ளவன், ஒரு பாவி என நம்புகையில் ஆன்மீக வளர்ச்சி அடையும் சூழ்நிலைகள் சிறப்பாக இல்லை. மேலும் நாம் அனைவரும் உற்சாகப்படும் மற்றொன்று, இந்து மதத்தின் நாம் கண்டிப்பாகப் பாவிகள் இல்லை என்பது மட்டுமன்றி, ஒவ்வொரு மனிதனும், எவனொருவனும் விடுபட்டுவிடாமல், இறுதியில் ஆன்மீக ஞான ஒளியும், விடுதலையும் பெற்றுத் தீர்வர் என்ற உறுதியுமே.

“ஆங்கே ஓர் ஆன்மீக பொருள் ஒன்றுண்டு, இதற்கு வயது முதிர்ச்சியோ இறப்போ இல்லை; பசி, தாகம், கவலைக்கு அப்பாற்பட்டது. இது ஆத்மன், மனிதனுக்குள் உள்ள பொருள். மற்ற ஒருவனது கண்களுக்குள் பார்க்கும்போது நீ எதனைக் காண்கின்றாயோ, அதுவே ஆத்மன், இறப்பில்லாதது, அச்சமில்லை; அதுவே கடவுள்.” சாம வேதம், சண்டோக்ய உபநிஷதம் 8.7.3-4